Published:Updated:

Union Budget 2021: பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு... நம்பிக்கை கொடுத்த நிர்மலா சீதாராமன்!

பொருளாதார ஆய்வறிக்கை 2020-21
பொருளாதார ஆய்வறிக்கை 2020-21

2023-ம் ஆண்டு வரை இந்தியா வேகமான வளர்ச்சியைச் சந்திக்கும். சீனாவைவிட இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

கடந்த ஆண்டில் நாடெங்கிலும் போடப்பட்ட ஊரடங்கால் நம் வீட்டுப் பொருளாதாரம் மட்டுமல்ல, நம் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, முழுமையான ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தொழில்துறை ஓரளவுக்கு இயங்க ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக இனி வருகிற நிதி ஆண்டில் (2021-2022) இந்திய பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு
பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு

அதற்கு நம்பிக்கை தருகிற விதமாக, இன்றைய 'பொருளாதார சர்வே 2021' அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். 2020-2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக, வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் "நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 11% வரை வளரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியாவதற்கு முன்பாக, "கொரோனா காலத்துக்குப் பிறகு, உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) இரண்டு இலக்க வளர்ச்சியைக் காணும் ஒரே நாடாக இந்தியா இருக்கும். நடப்பு 2021-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவிகிதமாக அதிகரிக்கும். 2023-ம் ஆண்டு வரை இந்தியா வேகமான வளர்ச்சியைச் சந்திக்கும். சீனாவைவிட இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும்" என ஐ.எம்.எஃப் (IMF) தெரிவித்திருந்ததை வழிமொழிகிற மாதிரி பொருளாதார ஆய்வறிக்கையும் அமைந்திருக்கிறது.

Union Budget 2021: இந்த ஆண்டு பேப்பர்லெஸ் பட்ஜெட்... அறிமுகமானது புதிய மொபைல் ஆப்

பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்த 11% வளர்ச்சி என்பது 1991-ம் ஆண்டில் தாராளமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்தியா சந்திக்கும் மிகப் பெரிய வளர்ச்சியாக இருக்கும் என்றும், அதேபோல, 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் `நாமினல் ஜிடிபி’ வளர்ச்சி 15.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இது 1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மிகப் பெரிய வளர்ச்சியாகும். நடப்பு நிதியாண்டில் (2020-2021) பொருளாதார வளர்ச்சி 7.7% வீழ்ச்சி காணலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வருகிற நிதி ஆண்டில் 'V' வடிவ வளர்ச்சியில் மேல் நோக்கிச் செல்லும் என்றும் ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஆய்வறிக்கையைச் சமர்பித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், "இனி வரும் காலங்களில் தொழில் உற்பத்தியை அதிகரித்து வேலைவாய்ப்புகளை உயர்த்த புதிய யுத்திகள் தேவைப்படு கின்றன. மேலும், நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் விலைவாசியைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதிய பலன் தரவில்லை. அதனால் வலிமையான பெரும்பான்மையைப் பயன்படுத்தி துணிச்சலான சீர்திருத்தங்களை இனி செய்ய வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு