Published:Updated:

பட்ஜெட்டுக்குப் பிறகு தங்கம் விலை இறங்க வாய்ப்பிருக்கிறதா? வெள்ளி விலை உயர்ந்தது ஏன்?

G O L D & S I L V E R

பிரீமியம் ஸ்டோரி

பட்ஜெட் 2021

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இது இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளதாகக் கருதுகின்றன. இதுவரை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவிகிதமாக இருந்தது. சென்ற திங்கள்கிழமை நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கலில் வருகிற நிதியாண்டில் இந்த இறக்குமதியானது 7.5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த வரி விதிப்பு குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கத்தின் விலை கணிசமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது தவிர, பட்ஜெட் அறிவிப்பில், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற வற்றுக்குத் தனியாக ‘புல்லியன் எக்ஸ்சேஞ்ச்’ ஒன்றைத் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனை மையத்தை பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கக் கூடிய ‘செபி’யின்கீழ் கொண்டு வர அரசாங்கம் அறிவுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை நடைமுறையில் கொண்டுவர குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. உலக தங்கச் சந்தையில், இந்தியாவின் நுகர்வு என்பது குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதால், இத்தகைய புல்லியன் எக்ஸ்சேஞ்ச் கொண்டு வரப்படுவது வரவேற்கத்தக்க செய்தியாகப் பார்க்கப்படுகின்றன. 

தங்கம்
தங்கம்

புல்லியன் எக்ஸ்சேஞ்ச் (Bullion Exchange)

புல்லியன் எக்ஸ்சேஞ்ச் என்பது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வாங்கவும் விற்கவும் செய்யக்கூடிய பரிவர்த்தனை மையமாகும். இதில் பிசிக்கலாகவும், ஃப்யூச்சர் வர்த்தக அடிப்படையிலும் தங்கத்தை வாங்க, விற்க வழிவகை செய்யப்படும். பொதுவாக, இந்த மாதிரியான சந்தைகள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதிக்கப் படும். இந்த வர்த்தகத்தில் வங்கிகள், நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ஹெட்ஜ், பாதுகாப்புப் பெட்டக வசதிகளைச் செய்து தரும் நிறுவனங்கள், ஸ்பெகுலேஷனில் வர்த்தகம் செய்பவர்கள் என்று பல்வேறு தரப் பட்டவர்கள் ஈடுபடுவதால், கமாடிட்டி சந்தை சார்ந்த செய்தி களின் அடிப்படையில் மட்டும் இல்லாமல், சிறிய அளவில் வர்த்தகம் செய்பவர்களும் பங்கு பெற வாய்ப்பிருக்கிறது.

இது தங்கத்தின் சந்தை விலையைக் கட்டுப்பாடுகளுடன்கூடிய வகையில், சர்வதேச விலைக்கேற்ப மேலே செல்வதற்கோ, கீழ்நோக்கி நகர்வதற்கோ பயனளிக்கும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கியபின் எப்படி வரவு வைக்கப் படுகின்றனவோ, அதே மாதிரி இதிலும் தங்கம் வாங்கியபின் வரவு வைக்கப்படும். டெலிவரியும் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த எக்ஸ்சேஞ்ச் செபியின் கட்டுப் பாட்டில் இருப்பதால், ஒளிவுமறைவற்ற வர்த்தகத்தைக் காணமுடியும். தங்கத்தின் தரம் பற்றிய கவலை இருக்காது. புல்லியன் எக்ஸ்சேஞ்சின் உத்தரவாதமும், நம்பகத் தன்மையும் இருப்பதால், தனிநபர் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் இருப்பவர் களும்கூட இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.

இந்த எக்ஸ்சேஞ்சில் ஒவ்வொரு வர்த்தகமும் பதிவு செய்யப்படுவதால், வாங்கியவர் - விற்பவர் பற்றிய தகவல்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

இதே போன்ற தங்கம் சார்ந்த எக்ஸ்சேஞ்சுகள் லண்டன், சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே இருப்பது குறிப்பிடத் தக்கது. சீனாவின் தங்க நுகர்வு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1000 டன்களாக இருக்கும் நிலையில், சீனாவின் புல்லியன் எக்ஸ் சேஞ்சில் சுமார் 49,000 டன்களுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்தியாவின் தங்கம் நுகர்தலும் கிட்டத்தட்ட சீனாவின் அளவுக்கு இருக்கும்போது, இந்தியாவிலும் தங்கச் சந்தையில் மிகப்பெரிய  மாற்றத்தை இந்த எக்ஸ்சேஞ்ச் கொண்டுவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேற்சொன்னவையாவும், உலக அளவில் இருக்கும் நடைமுறையாகும். இந்தியாவைப் பொருத்தவரை, புல்லியன் எக்ஸ்சேஞ் - என்பது துவக்க நிலையில் இருப்பதால்,இதன் சட்ட திட்டங்கள் அனைத்தும் இனிமேல்தான் வரையறுக்க இருக்கிறார்கள்.

விலை இறங்க வாய்ப்பிருக்கிறதா?

தற்போது வெளியாகி இருக்கும் பட்ஜெட் அறிவிப்பின் காரண மாகக் குறுகியகாலத்துக்கு தங்கம் விலை இறங்கலாம். ஆனால், உலக அளவில் வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் 2023-ம் ஆண்டு வரை வட்டி விகிதங்களைக் குறைவாகவே வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கொரோனாவின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் முழுமையாகக் குறையாத நிலையில், நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதைப் பார்க்கும்போது, மேலும் சிறப்பு ஊக்குவிப்புத் திட்டங்களை அமல்படுத்த முயலக்கூடும் என்பது தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க முகாந்திரங்கள் இருப்பதையே உணர்த்துகின்றன. ஆக, தங்கம் இப்போது பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது!

வெள்ளி விலை உயர்ந்தது ஏன்?

கடந்த திங்கள்கிழமை வர்த்தகத்தில் சர்வதேசச் சந்தையில் வெள்ளி, ஒரே நாளில் 9% அளவுக்கு அதிகரித்து ட்ராய் அவுன்ஸ் 30 டாலர்களைத் தொட்டு வர்த்தகமானது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சர்வதேச விலை சுமார் 50% அதிகரித்த நிலையில், சென்ற வார இறுதியில் திடீரென்று வெள்ளியின் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கின.

கேம்ஸ்டாப் பங்கு விலைகளில் ஏற்பட்ட திடீர் ஏற்றத்தின் சிக்கல்கள் தீர்வதற்குள் வெள்ளியிலும் பதற்றம் தொற்றிக் கொண்டுவிட்டது. குறிப்பாக, (வெள்ளி மீதான) ஐ-ஷேர் சில்வர் ட்ரஸ்ட்டின் இ.டி.எஃப் நிறுவனம் தடாலடியாக வெள்ளி மீதான இ.டி.எஃப் பங்குகளை அதிகரிக்கும் வகையில், அதற்குச் சமமான வெள்ளியை வாங்கிக் குவித்தது. இதன் தாக்கம் உலகச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெள்ளி சார்ந்த இ.டி.எஃப் விலைகள் 7% - 9% வரை அதிகரித்தன. வெள்ளியின் சந்தை என்பது மிகப் பெரியது மற்றும் அதிக சிக்கல்களைக் கொண்டது என்பதால், அதில் ஊக வணிகத்தின் மூலம் விலையேற்றத்தை அதிக நாள்கள் நிலைத்து வைக்க முடியாது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு