Published:Updated:

மத்திய பட்ஜெட்: தென் மாவட்ட ரயில் பயணிகளின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

இரட்டை ரயில் பாதை
இரட்டை ரயில் பாதை

மீட்டர் கேஜ் பாதைகளை அகலப் பாதையாக மாற்றுதல், இருவழிப் பாதைப் பணிகள், மின்மயமாக்கல், புதிய பாதைகள் அமைத்தல், புதிய முனைய வசதிகள் ஏற்படுத்துதல், அதிவேக ரயில்வே பாதைகள் அமைத்தல் எனப் பல்வேறு பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.

2020- 2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ரயில்வே துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அருகில் இருக்கும் கேரள மாநிலத்தில் இருபது வருடங்களுக்கு முன்பே அகல ரயில்பாதை திட்டம் முடிக்கப்பட்டதுடன், இரட்டை ரயில்பாதை திட்டமும் முடிந்துவிட்டது. 

`2,400 கம்பங்கள்; மூன்றாவதுகட்டப் பணிகள் தீவிரம்!' - மின்மயமாகும் திருச்சி - காரைக்கால் ரயில் பாதை

ஆனால், தமிழகத்தின் வேளாங்கண்ணி – திருத்துறைபூண்டி, காரைக்கால் - பேரளம், திருத்துறைபூண்டி – அகஸ்தியம்பள்ளி, மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, மதுரை – போடி ஆகிய வழித்தடங்களில் தற்போதுதான் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல மாநிலங்களில் மூன்றாவது, நான்காவது ரயில் பாதைப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் பணிகளை வேகப்படுத்துவதுடன், புதிய ரயில் பாதைகள் அமைத்தல், கூடுதல் ரயில்களை இயக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஸ்ரீராம்
ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஸ்ரீராம்

இது தொடர்பாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவரும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஸ்ரீராம் கூறுகையில், ``தென்மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாகவே கன்னியாகுமரி – மதுரை இடையேயான பாதையை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே 102 கி.மீ தூரத்துக்கு ஒரு திட்டமாகவும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே 87 கி.மீ தூரத்துக்கு மற்றொரு திட்டமாகவும் பிரித்து நடைபெறும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வேகப்படுத்த வேண்டும்.

ரயில்வே திட்டம்
ரயில்வே திட்டம்

கன்னியாகுமரியிலிருந்து கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை 462 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில்பாதை அமைக்க 1,965 கோடி ரூபாய் தேவை என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதை ஒதுக்கீடு செய்து இந்த பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டம் ஆளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க 2013-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தத் திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவித்து பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ரயில் சேவை
ரயில் சேவை

நெல்லையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு 160 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கூடுதல் ரயில்வழித்தடம் அமைக்க இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

பின் செல்ல