புல்டோசர் பாபா... புல்டோசர் மாமா... உ.பி-யைத் தொடர்ந்து ம.பி-யிலும் தலைதூக்கும் ‘புல்டோசர்’ அரசியல்!

கிண்டலாகத் தொடங்கிய `புல்டோசர் பாபா’ என்ற வார்த்தை ஒரு பிராண்டாக மாறியது.
அரசியல் கட்சிகள், தேர்தலில் வெற்றிபெற `பிரசார பீரங்கிகளாக’ பேச்சாளர்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள்... ஆனால், பிரசார புல்டோசர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்திலும் சூடுபிடித்திருக்கிறது புல்டோசர் பிரசாரம்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ``மாஃபியாக்கள், குற்றவாளிகளுக்குச் சொந்தமான இடங்களில் நமது புல்டோசர்கள் நடவடிக்கை எடுக்கும்’’ என்று அதிரடியாகப் பேசினார். அப்போது தொடங்கியது புல்டோசர் பிரசாரம். தொடர்ந்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``இந்தத் தேர்தலில், முதலமைச்சர் `புல்டோசர் பாபா’ நிச்சயம் தோல்வியடைவார்’’ என்று கிண்டலடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ``புல்டோசருக்கு பேசத் தெரியாது; ஆனால், நன்றாக வேலை செய்யும். மார்ச் 10-ம் தேதிக்குப் பின்னர் சமூக விரோதிகளுக்கு எதிராக இந்த புல்டோசர் நகரும்’’ என்றார் யோகி.

பிராண்டாக மாறிய `புல்டோசர் பாபா’!
இதையடுத்து பா.ஜ.க நிர்வாகிகளே யோகியை `புல்டோசர் பாபா’ என்றழைக்கத் தொடங்கினர். கிண்டலாகத் தொடங்கிய `புல்டோசர் பாபா’ என்ற வார்த்தை ஒரு பிராண்டாக மாறியது. உத்தரப்பிரதேசத்தில், ``சமாஜ்வாடி ஆட்சியிலிருந்தபோது தலைதூக்கியிருந்த ரெளடியிசத்தை பெருமளவு கட்டுப்படுத்தியிருக்கிறார் யோகி. மீதமிருக்கும் கிரிமினல்கள்மீது மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் புல்டோசர் நடவடிக்கைகள் பாயும்’’ என்பதே பா.ஜ.க-வினரின் முக்கியப் பிரசாரமாக அமைந்தது. தொடர்ந்து அங்கு தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைத் தக்கவைத்ததற்கு புல்டோசர் பிரசாரமும் ஒரு முக்கியக் காரணம் என்று நம்புகிறது பா.ஜ.க. தேர்தல் வெற்றிக்குப் பிறகு ட்விட்டரில் தன்னை புல்டோசராக பாவித்து ட்வீட் செய்த யோகி, `அதிகாரம் படைத்தவர்கள், அரசியல்வாதிகள், மாஃபியாக்களின் சட்ட விரோதச் சொத்துகளை முடக்கவும், சட்டத்தின் அதிகாரத்தை நிலைநாட்டவும் இந்த புல்டோசர் இனி செயல்படும்’ என்று எச்சரித்திருந்தார்.

இடிபடும் கட்டடங்கள்... பிடிபடும் குற்றவாளிகள்!
யோகி எச்சரித்தது இப்போது நடந்துவருகிறது. உத்தரப்பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் வீட்டின் முன்பாக புல்டோசர்களை நிறுத்திவைத்திருக்கிறது காவல்துறை. ``குற்றவாளிகளுக்குக் காலக்கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் சரணடையாவிட்டால், அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளை இடித்துத் தள்ளிவிடுவோம்’’ என்று அவர்கள் எச்சரித்துவருகிறார்கள். இதையடுத்து, தலைமறைவாக இருந்த 50-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சரணடைந்திருக்கிறார்கள். சரணடைய முன்வராத குற்றவாளிகளின் வீட்டிலிருப்பவர்களை முதல் மாடிக்கு அனுப்பிவிட்டு, கீழ்ப்பகுதியிலிருக்கும் கதவுகளையும் படிகளையும் காவல்துறையினர் இடித்துத் தள்ளிவருகிறார்கள். அதன் பிறகும் சரணடைய மறுப்பவர்களின் சொத்துகள் தரைமட்டமாக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ம.பி-யிலும் கிளம்பிய புல்டோசர் மாமா!
இதையடுத்து, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்திலும் புல்டோசர் பிரசாரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தின் பா.ஜ.க முதல்வரான சிவ்ராஜ் சிங் செளகான், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட சிலரது சொத்துகளை புல்டோசர் மூலம் இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிவ்ராஜ் சிங்கின் ஆதரவாளர்கள், அவரை `புல்டோசர் மாமா’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ‘புல்டோசர் மாமா’ போஸ்டர்கள் பிரபலமடைந்திருப்பதோடு, `புல்டோசர் மாமா’ பேனர்களை ஏந்தியபடி புல்டோசர் பேரணிகளையும் நடத்திவருகிறார்கள் பா.ஜ.க-வினர்.

இதற்கு எதிர்ப்புகள் எழாமலும் இல்லை... மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா, ``ஒருவரது சொத்துகளை புல்டோசரால் இடிக்க சட்டம் அனுமதிக்கிறதா என்பது விவாதத்துக்கு உரியது. இந்த அரசுக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதென்றால், சட்டவிரோதமாகப் பல கோடிகளைச் சம்பாதித்தவர்களின் வீடுகள்மீது புல்டோசர்களை ஏற்றட்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அதைவைத்து அரசியல் நாடகமாடுகிறது பா.ஜ.க’’ என்று கொதித்துள்ளார்.
ஏப்ரல் 10-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் சிலர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து, கல்லெறிந்தவர்களைக் கண்டறிந்த மத்தியப் பிரதேச காவல்துறை, அவர்களுக்குச் சொந்தமான வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துத்தள்ளும் காணொலிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. தொடர்ந்து, ``தவறிழைத்தவர்களைக் கைது செய்யாமல், சொத்துகளை இடித்துத் தள்ளுவது எந்த வகையில் நியாயம்...’’ என மத்தியப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.

பீகாரிலும் புல்டோசர் மாடல்!
பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க-வும் கூட்டணி ஆட்சியிலிருக்கின்றன. அங்கு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பலரும், ``பீகாரில் அதிகரித்துவரும் குற்றங்களைத் தடுக்க, உத்தரப்பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் புல்டோசர் மாடலை பயன்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்திவருகிறார்கள். இதனால் கடுப்பான ஐக்கிய ஐனதா தள ஆதரவாளர்கள், ``பீகாரில் குற்றங்களைத் தடுக்க எங்கள் முதல்வர் நிதிஷ் குமார் மாடலே போதுமானது; யாருடைய அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை’’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
தவறுகளைத் தடுக்க வட இந்தியாவில் தலைதூக்கியிருக்கும் இந்த புல்டோசர்கள், தங்கள் கட்சிக்குவேண்டியவர்கள் தவறு செய்யும்போது தலையைத் திருப்பிக்கொள்கின்றன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!