ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டைக் கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனின் பெயரில் காளை இறங்கிவிட்டாலே, வீரர்களே ஒரு நிமிடம் யோசிப்பார்கள், ஜல்லிக்கட்டுக் களமே அலறும். இவரது காளைகள் ஒவ்வொன்றும் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடக்கூடியது.
கடந்த 2022 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கைக்குறிச்சி தமிழ்ச் செல்வனின் 'புல்லட்' காளை சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டு, முதலிடத்தைப் பிடித்து காரைப் பரிசாக வென்றது. இந்த வருடமும் 2023-ல் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் தமிழ்ச்செல்வனின் மற்றொரு காளையான 'கரிகாலன்' வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்து கார் பரிசு வென்றிருக்கிறது. இரண்டு காளைகளும் தமிழ்ச்செல்வனுக்கும், புதுக்கோட்டைக்கும் பெருமை தேடிக் கொடுத்திருக்கின்றன.

புதுக்கோட்டை அறந்தாங்கிச் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 7 கி.மீ தொலைவில் பிரதான சாலையையொட்டியே அமைந்திருக்கிறது கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனின் தோப்பு. இங்குதான் புல்லட், கரிகாலன், காரி, டான்ஸிங் வொயிட் உள்ளிட்ட 20 காளைகள் வளர்கின்றன. இந்தக் காளைகள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக ஜல்லிக்கட்டுக்கு என்றே தயார் செய்துவருகிறார். காளைகளோடு, தமிழ்ச்செல்வன் பந்தயப் புறாக்கள், ஆடு, குதிரை, நாய், கோழி, வாத்து, முயல் என ஏராளமான கால்நடைகளையும் வளர்த்துவருகிறார். அடுத்தடுத்து அலங்காநல்லூரில் காளைகள் வெற்றிபெற்ற உற்சாகத்தில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்.
"சின்ன வயசிலிருந்தே கால்நடைகள்மீது ஆர்வம். குறிப்பா, ஜல்லிக்கட்டுக் காளைகள்மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். சின்ன வயசுல எந்த ஊர்ல மஞ்சுவிரட்டு நடந்தாலும், அங்க கிளம்பிடுவேன்.
ஒருகட்டத்துல எனக்கு காளை வாங்கி வளர்க்கணும்னு ஆர்வம் வந்துச்சு. அப்படித்தான் காளைகள் வளர்க்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட இப்போ 40 வருஷமா வளர்த்துக்கிட்டு இருக்கேன். தமிழகத்தின் பெரும்பாலான வாடிகள்ல என்னோட காளைகளை அடைச்சிட்டேன். இப்போ சுத்துமாடுதான் விரும்புறாங்க, ஆனா, அப்ப எல்லாம் போக்கு மாடுகளைத்தான் எல்லாரும் விரும்புவாங்க. இப்பவும் நான் போக்கு மாடுகளைத்தான் விரும்புவேன். ஆதனக்கோட்டையில இருந்து வாங்குன போக்கு மாடு என்கிட்ட ரொம்ப வருஷம் இருந்துச்சு. ரொம்ப நல்ல மாடு. அப்ப எல்லாம் தங்கக்காசு வாங்கிறதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். கோவிலூர்ல நடந்த ஜல்லிக்கட்டுல என்னோட மாடு தங்கக்காசு வாங்குச்சு. அதற்கப்புறம் கமல்ஹாசன் படத்துல வந்த விருமாண்டி மாடு வாங்கினேன். போக்கு மாடு எங்க இருந்தாலும், தேடிப் போயிடுவேன். ஒண்ணு ரெண்டாச்சு. ரெண்டு பத்தாச்சு. இந்த வருஷம் 7 மாடுகள் வாங்கியிருக்கேன்.

மொத்தமா இப்போ என்கிட்ட 20 காளைகள் இருக்கு. ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கிறதுக்கு எல்லார் வீட்டிலயும் கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க. எங்க வீட்டிலயும் பணத்தை விரயம் பண்ணுறீங்களேன்னு திட்டுவாங்க. நான் அதக் கண்டுக்கிடலை. அதே நேரத்துல குடும்பத்தையும் கவனிச்சிக்குவேன். அதனால, என்னைய சுதந்திரமா விட்டுட்டாங்க. காளைகளோடயே வாழ்ந்து பழகிட்டேன். காலை, மாலை ரெண்டு நேரமும் தோப்புக்கு வந்திடுவேன். நான் வந்தாலும், நிறைய காளைகள் இருக்கிறதால, பராமரிப்புக்குன்னு ரெண்டு பேரை வச்சிருக்கேன். சொத்துகளை வித்துதான் காளைகளைப் பராமரிச்சிக்கிட்டு இருக்கேன். சிலர் காளைகள் நல்லா விளையாடணும்னா, தொடர்ந்து பயிற்சிகள் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. அப்படியெல்லாம் ஏதுவுமே கிடையாது. என்னோட அனுபவத்துல பயிற்சிகள் எதுவும் தேவையில்லை.
அது குணம் என்னவோ அதைத்தான் அது செய்யும். காளைகளை நல்லா குளிப்பாட்டி, சத்தான உணவு கொடுக்கணும். அதைத்தான் நான் செஞ்சிக்கிட்டு இருக்கேன். நம்மகிட்ட இருக்க 20 காளைகளும் பிடிபடாத காளைகள்தான். புல்லட் காளை விராலிமலையில புல்லட் வாங்குச்சு. புல்லட் வாங்குனதால, 'புல்லட்'ன்னு பெயர் வச்சேன். இப்போ நடக்கிற ஜல்லிக்கட்டுப் போட்டிகள்ல எல்லாம் பேரன்கள்தான் காளைகளை அடைக்கிறாங்க. நா எங்கயும் போறதில்லை. போனவருஷமே புல்லட் நல்லா விளையாண்டு கார் பரிசு வாங்குச்சு. அப்போ, வீட்டுல நான் தூங்கிக்கிட்டு இருந்தேன். நூறு போன் வந்திருந்துச்சு. எழுந்த பிறகு கூப்பிட்ட நண்பர், ’உன் காளை பரிசு வாங்கீருக்கு, நீ தூங்கிக்கிட்டு இருந்தேன்னு சொல்ற’ன்னு கேட்டார்.

பரிசு கிடைச்சாலும், கிடைக்கலைன்னாலும் அதைப் பெருசா நான் நினைக்கிறது இல்லை. எங்க அடைச்சாலும், நம்ம காளை நல்லா விளையாடணும், அவ்வளவுதான். இந்த வருஷம் அலங்காநல்லூர்ல வென்ற கரிகாலனைப் பத்திச் சொல்லணும்னா, போன வருஷம் சூரியூர்ல நடத்துன ஜல்லிக்கட்டுல டூவிலர் பரிசாக வாங்கினான். அலங்காநல்லூர்ல அடைச்சால், நல்லா விளையாடுவான்னு தெரியும். அடைச்சோம், இன்னைக்கு வெற்றிபெற்றுட்டான். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சிலர் நல்லா விளையாடுற என்னோட காளைகளுக்கு மூணு மடங்கு பணம் கொடுக்கிறதா சொல்லிக் கேட்கிறாங்க. ஆனா, அப்படிக் கொடுக்கக்கூடாதுங்கிறதுல மட்டும் தெளிவா இருக்கேன். என்னோட கடைசி மூச்சு இருக்க வரைக்கும் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்க்கணும்" என்கிறார் நெகிழ்ச்சியாக.