நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தொழில் முதலீடு... இந்த 7 விஷயங்களும் உங்களிடம் இருக்கா? - விளக்கும் தொழில் ஆலோசகர்

ஸ்டார்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட் அப்

உங்கள் ஸ்டார்ட் அப்-க்கு தொழில் முதலீட்டைப் பெற நினைத்தால், முதலில் ஒரு நல்ல தொழில் ஆலோசகரை நீங்கள் அணுக வேண்டும்!

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மிகப் பெரிய சவால், அவர்கள் நடத்தும் தொழிலுக்கான முதலீட்டைத் திரட்டுவதுதான். இது குறித்த அடிப்படை விஷயங்களை எடுத்துச் சொல்ல நாணயம் விகடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. இணைய வழியில் நடந்த இந்தக் கூட்டத்தில் ‘ஸ்டார்ட்அப்... வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைத் திரட்டுவது எப்படி?’ என்பது குறித்து பேசினார் கேப்பிடல் மார்க்கெட் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவக்குமார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது...

ஆலோசகர் உதவி அவசியம்...

``ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த பணம் இல்லையே என்கிற கவலை வேண்டாம். உங்களிடம் சரியான பிசினஸ் பிளானும் தொழில் திறமையும் இருந்தால், பணம் உங்களைத் தேடிவரும். அப்படிப்பட்ட ஒரு சூழலை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான தொழில் முதலீட்டைப் பெற நினைத்தால், நீங்கள் ஏஞ்சல் இன்வெஸ்டர் அல்லது வென்ச்சர் கேப்பிடலிஸ்ட்டை அணுகும்முன், ஒரு நல்ல தொழில் ஆலோசகரை முதலில் அணுக வேண்டும். நீதிமன்றத்துக்குச் செல்ல வழக்கறிஞரின் உதவி தேவைப்படுகிற மாதிரி, இன்வெஸ்டர்ஸை நீங்கள் தேடிச் செல்லும்போது நிதி ஆலோசகரை அணுகுவது மிகவும் அவசியம்.

சிவக்குமார்
சிவக்குமார்

பிட்ச் டெக் தயாரா?

வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்ட ஒருவரை அணுக வேண்டும் என்றால், பிட்ச் டெக் (Pitch Deck) ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அந்த பிட்ச் டெக்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஏழு விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. உங்களது தொழிலில் நீங்கள் எப்படிச் செயல்படப்போகிறீர்கள் என்பதைச் சொல்வதே பிட்ச் டெக். இதை பிரசன்டேஷ னாகச் செய்யும்போது முதல் மூன்று ஸ்லைடு களிலேயே இன்வெஸ்டர்களை கவர்ந்துவிட வேண்டும். அதிகமான ஸ்லைடுகளைப் பார்க்க அவர்களுக்கு நேரம் இருக்காது.

தொழில் முதலீடு... இந்த 7 விஷயங்களும் உங்களிடம் இருக்கா? - விளக்கும் தொழில் ஆலோசகர்

2. தொழில்முனைவோர்கள் ஒவ்வொரு வரிடமும் சுவையான கதைகள் இருக்கும். அந்தக் கதையை சுவை குறையாமல், தொய்வு இல்லாமல் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். ஏனெனில், உங்களுடைய கதைகளைக் கேட்பதில் இன்வெஸ்டர்களுக்கு ஆர்வம் கிடையாது. ஆனால், உங்கள் கதைகளில் சுவையான அம்சங்கள் இருக்கும்பட்சத்தில் அதை அவர்கள் கேட்காமல் விடமாட்டார்கள்.

3. உங்களுடைய குழு (டீம்) பற்றிய தகவல்கள் அவசியம் தர வேண்டும். ஆரம்பத்தில் உங்கள் குழுவில் 20, 30 பேர் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஒரே திறமை படைத்தவர்கள் 2, 3 பேர் உங்கள் குழுவில் இருந்து பெரிய பிரயோஜனம் எதுவும் இல்லை. மாறுபட்ட திறமைகளை உடையவர்களின் சங்கமமாக நீங்கள் அமைத்திருக்கும் குழு இருக்க வேண்டும். எல்லாத் துறை தொடர்பான அனுபவமும் உங்கள் குழுவில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருக்கும் நபர்கள் இருந்தாலே போதுமானது. ஆர்வம் இருப்பவர்களால் தொழில் நுணுக்கங் களைக் கற்றுக்கொள்ள முடியும். 10 வருடம் கழித்து நாம் செய்கிற தொழிலில் எப்படி இருப்போம் என்கிற சிந்தனைக் குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும். அந்தத் தொலைநோக்குப் பார்வை இருந்தால், உங்களால் முடியாது என்பதே கிடையாது.

4. நீங்கள் செய்யும் தொழிலில் போட்டி யாளர்கள் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துவைத்திருக்க வேண்டும். போட்டியாளர்கள் உங்கள் தொழிலில் நுழையமுடியாத மாதிரி உங்கள் தொழில் இருக்க வேண்டும்.

தொழில் முதலீடு... இந்த 7 விஷயங்களும் உங்களிடம் இருக்கா? - விளக்கும் தொழில் ஆலோசகர்

5. உங்கள் தொழிலை நீங்கள் எப்படி மதிப்பீடு (valuation) செய்கிறீர்கள் என்பது முக்கியம். ஆனால், நீங்கள் முதல்முறையாக நிதி திரட்ட ஏஞ்சல் ஃபண்டிங்கை அணுகும் போது மதிப்பீடு பற்றி நீங்கள் அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.

6. முதலீட்டைத் திரட்டும்முன் நிதி மாதிரி (Financial model) ஒன்றைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இது நிதி தொடர்பான வேலை என்பதால், நிச்சயமாக சிறந்த ஆலோசகர்களை அணுகுவது அவசியம். அவர்கள், 5 முதல் 10 வருடங்களுக்கு உங்களுக்குத் தேவையான பிசினஸ் பிளானையும் எவ்வளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் (Projected profitability) கணக்கு போட்டுக் கொடுப்பார்கள். இதை வைத்துதான் முதலீட்டாளர்களை நீங்கள் கவர முடியும்.

7. உங்களுக்கான முதலீட்டாளர்கள் யார் என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அணுகும் தொழில் ஆலோசகர்கள் அதற்கான ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவார்கள். முதலீட்டாளர்கள் ஏற்கெனவே செய்திருக்கும் முதலீடுகள், எதிர்பார்க்கும் லாபம், அவர்களின் அணுகுமுறைகள் எனப் பல தகவல்களையும் உங்களுக்குத் தெரிவிப்பார்கள். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு செல்வது மிகவும் நல்லது’’ எனப் பல முக்கியமான விஷயங்களைச் சொன்னவர், அடுத்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்ட கேள்வி களுக்குப் பதில் சொன்னார்.

நான் டீக்கடை நடத்தப்போகிறேன். எனக்கு வென்ச்சர் கேப்பிடல் ஃபண்ட் கிடைக்குமா?

‘‘டீக்கடை நடத்துவதற்கு நிச்சயமாக வென்ச்சர் கேப்பிடல் முதலீட்டை வாங்கலாம். வென்ச்சர் கேப்பிடல் பெறும் அளவுக்கு உங்களது டீக்கடையை நவீனப்படுத்தி வசதிகளையும் அதிகளவில் செய்தால் நிச்சயம் கிடைக்கும். ‘சாய் கிங்’ போன்ற எத்தனையோ டீக்கடைகள் இப்படி முதலீட்டைப் பெற்றுள்ளன.’’

நம்முடைய தொழில் தொடர்பான ஐடியாவை வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடம் சொல்லும்போது, அவர்கள் அந்த ஐடியாவை எடுத்துக்கொண்டுவிட மாட்டார்களா?

‘‘உங்கள் தொழில் பற்றிய தகவல்களை வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடம் செல்லும்போது, அவற்றை யாரிடமும் சொல்லக் கூடாது என்கிற ஒப்பந்தம் (Non discloser agreement) ஒன்றைப் போட்டுவிட்டுதான் சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் முழுமையாக மதிப்பளிப்பார்கள். ஆனால், வென்ச்சர் கேப்பிடலிஸ்ட்டுகள் பெரும் பணம் படைத்தவர்கள். உங்கள் தொழில் ஐடியாவை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. எனவே, அனைவரையும் தவறான எண்ணத்திலும் பார்க்கக் கூடாது.’’

ஒருவர் மட்டுமே நடத்தும் நிறுவனம், வென்ச்சர் கேப்பிடல் ஃபண்ட் வாங்க முடியுமா?

‘‘உங்களுடைய தொழில் என்ன, சமூகத்தின் எந்தப் பிரச்னைகளுக்கு நீங்கள் தீர்வு சொல்ல விரும்புகிறீர்கள், அந்தத் தீர்வுக்கான புராடக்ட்டைக் கொடுக்கப்போகிறீர்களா அல்லது சர்வீஸ் தரப்போகிறீர்களா, அது சந்தையை எப்படிச் சென்றடையும் என்பது பற்றியெல்லாம் நன்கு மார்க்கெட் ரிசர்ச் செய்து முடிவெடுப்பது அவசியம்.’’

வங்கிக் கடன், வென்ச்சர் கேப்பிடல் முதலீடு - என்ன வித்தியாசம்?

‘‘வங்கிக் கடன் என்பது, வங்கியில் வாங்கும் கடனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் வட்டி யுடன் திருப்பிச் செலுத்துவது. வென்ச்சர் கேப்பிடல் முதலீடு என்பது, நம் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை ஒதுக்கித் தந்து, லாபத்தைக் கொடுப்பது.’’

லாபமில்லாத நிறுவனங்களில் வென்ச்சர் கேப்பிடலிஸ்ட்டுகள் முதலீடு செய்வார்கள்?

‘‘லாபம் இல்லாத அனைத்துமே அறக் கட்டளையின்கீழ் வருகின்றன. லாபத்தைக் கவனத்தில் கொள்ளாத நிறுவனங்களுக்கு வென்ச்சர் கேப்பிடலிஸ்டுகள் பணம் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் லாபத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் தொழில்களில் முதலீடு செய்வார்கள்’’ என விளக்கமாகப் பதில் சொல்லி முடித்தார் சிவக்குமார்!