அலசல்
Published:Updated:

‘ரூ. 48,711 கோடி இழப்பு!’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

“கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தெம்பில்லாததால், சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வை மிரட்டி உட்காரவைக்கவே இந்த அறிக்கையை அரசு வெளியிட்டு பூச்சாண்டி காட்டுகிறது”

சமீபத்தில் சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதம் ஒன்று, முந்தைய அ.தி.மு.க அரசைச் சிக்கலுக்கு உள்ளாக்கியிருப்பதோடு, தி.மு.க-வின் மிரட்டல் அரசியலுக்கும் ஆயுதம் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நடந்து முடிந்த முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ‘தமிழக அரசின் நிதிநிலை, வெள்ளை அறிக்கையில் விரிவாகச் சொல்லப்படும்’ என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். இதற்கு உடனடியாக எழுந்து மைக் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வெள்ளை அறிக்கை வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே... மத்திய கணக்குத் தணிக்கை அலுவலர் வெளியிடும் தணிக்கை அறிக்கையைப் படித்துப் பார்த்திருந்தாலே, உங்களுக்குத் தமிழக அரசின் நிதிநிலை பற்றிய நிலவரம் தெரிந்திருக்குமே... அதைப் பார்த்துவிட்டு வாக்குறுதிகளை அளித்திருக்கலாமே?” என்று சொல்லி வாய் மூடவில்லை, பழனிவேல் தியாகராஜனுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது.

‘ரூ. 48,711 கோடி இழப்பு!’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா?

உடனே தியாகராஜன், “2017-18-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, 2020, மார்ச் 6 மற்றும் 11-ம் தேதிகளில் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு, செப்டம்பர் 8-ம் தேதி அப்போதைய முதல்வரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் அந்த அறிக்கையை மீண்டும் நிதித்துறைக்கே அனுப்பியிருக்கிறார்கள். 2021, பிப்ரவரி 9-ம் தேதி மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டபோதும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஜூன் 15-ம் தேதி முதல்வரின் ஒப்புதலோடு அந்த அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதுபோல ஐந்து தணிக்கை அறிக்கைகளை முந்தைய ஆட்சியாளர்கள் வெளியிடாமல், கடந்த ஒன்றரை வருடங்களாக வைத்திருந்துள்ளனர். இவை முறையாக வெளியிடப்பட்டிருந்தால், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே... நாங்கள் நிதிநிலையைக் கணக்கிட்டு வாக்குறுதிகளை அளித்திட உதவியாக இருந்திருக்குமே...” என்று வெடித்தார். இதை எடப்பாடி உட்பட அ.தி.மு.க-வினர் யாரும் எதிர்பார்க்கவில்லை.

`கிடப்பில் கிடந்த கணக்கு தணிக்கை அறிக்கையை தி.மு.க அரசு தூசுதட்டி இப்போது வெளியிட்டிருப்பதே, அ.தி.மு.க ஆட்சியில் தமிழகப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பொதுவெளியில் போட்டுடைத்து அ.தி.மு.க-வை கார்னர் செய்வதற்குத்தான்’ என்கிறது கோட்டை வட்டாரம். ஆனால், “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தெம்பில்லாததால், சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வை மிரட்டி உட்காரவைக்கவே இந்த அறிக்கையை அரசு வெளியிட்டு பூச்சாண்டி காட்டுகிறது” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். சி.ஏ.ஜி அறிக்கை வாயிலாக தி.மு.க வீசியிருக்கும் வெடி என்ன... இதைவைத்து என்ன அரசியல் விளையாட்டை தி.மு.க ஆடப்போகிறது என்பதையறிய கோட்டையை வலம்வந்தோம்.

பொதுத்துறை நிறுவனங்களில் இழப்பு!

மாநில அரசின் துறைகளிலுள்ள வரவு செலவுகள், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் வரவு செலவுகளை ஆண்டுதோறும் இந்திய தணிக்கை மற்றும் கணக்காய்வுத்துறை தணிக்கைச் செய்து, அதை மாநில அரசுக்கு அறிக்கையாக அளிப்பது வழக்கம். அந்த அறிக்கையை ஆளுநர் ஒப்புதலுடன், மானியக் கோரிக்கை மசோதாவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்யும். ஆனால், கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான சி.ஏ.ஜி அறிக்கை ஆளுநர் பார்வைக்கும் அனுப்பப்படவில்லை, அப்போதைய அ.தி.மு.க அரசால் சட்டமன்றத்திலும் தாக்கல் செய்யப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த சி.ஏ.ஜி அறிக்கையைக் கடந்த ஜூன் 24-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது தி.மு.க அரசு.

இந்த சி.ஏ.ஜி அறிக்கையில், பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 75 பொதுத்துறை நிறுவனங்களில், அரசு லாபத்தைவிட நஷ்டத்தையே அதிகம் சந்தித்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, 2017-18 நிதியாண்டின் இறுதியில் மட்டும், பொதுத்துறை நிறுவனங்களில் 34,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

‘ரூ. 48,711 கோடி இழப்பு!’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா?

ரூ. 48,711 கோடி இழப்பு... ஷாக் அடிக்கும் மின்துறை!

தமிழ்நாடு அரசின் நிதித்துறையைச் சார்ந்த மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமான முதலீடுகளைப் பெற்றது மின்சாரத்துறைதான். 2019-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு 75 பொதுத்துறை நிறுவனங்களில், 1,97,153 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அதில் மின்சாரத்துறையில் மட்டும் 1,75,436 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மொத்த முதலீடுகளில் 88.98 சதவிகிதம் மின்சாரத்துறையில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு முதலீடு செய்தும் அந்தத் துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருவதை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம், உடன்குடி மின்சக்தி நிறுவனம் என ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கியதாக தமிழ்நாடு மின்சாரத்துறை உள்ளது. இதில், உடன்குடி மின்சக்தி நிறுவனம் எந்தவொரு நடவடிக்கையையும் தொடங்கவில்லை என்பதால், அதன் முழுச் செலவினங்களும் முதலீடாகவே காட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தைத் தவிர, மீதமிருக்கும் மூன்று நிறுவனங்களும் 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை பெரும் நஷ்டத்தையே சந்தித்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம் அளித்ததோடு மட்டுமல்லாமல், நீண்டகாலக் கடன்களையும் வழங்கியுள்ளது.

சி.ஏ.ஜி அறிக்கையின்படி, 2014-15-ம் ஆண்டில் மின்துறையில் ஏற்பட்ட மொத்த இழப்பு 12,763 கோடி ரூபாய். 2015-16-ம் ஆண்டில் 5,942 கோடி, 2016-17-ம் ஆண்டில் 4,497 கோடி, 2017-18-ம் ஆண்டில் 12,333 கோடி, 2018-19-ம் ஆண்டில் 13,176 கோடியாக இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆக, ஐந்தாண்டுகளில் மின்சாரத்துறையில் ஏற்பட்ட மொத்த இழப்பு 48,711 கோடி ரூபாய். மின்கொள்முதல் மற்றும் உற்பத்திச் செலவோடு, பணியாளர் மற்றும் நிதிச் செலவினங்களின் அதிகரிப்பே இந்த இழப்பீடுகளுக்கான முக்கியக் காரணம் என்று சொல்கிறது சி.ஏ.ஜி-யின் அறிக்கை. இந்த இழப்பீடு விவகாரங்கள் வெளியானால், தேவையற்ற சர்ச்சையைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று அப்போதைய ஆட்சியாளர்கள் வெளியிடாமல் வைத்திருந்தனர். இப்போது அந்த விவரங்கள் வெளியாகி பூதாகரமாகியுள்ளன” என்றார்.

‘ரூ. 48,711 கோடி இழப்பு!’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா?

வெளிநாட்டு முதலீடு... சிக்கலில் சிங்கப்பூர் நிறுவனம்!

நிலக்கரி கொள்முதல் முதல் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியது வரை எல்லா மட்டங்களிலும் நடந்த தவறுகளால்தான் இவ்வளவு பெரிய இழப்பை மின்துறை சந்தித்துள்ளது. நிலக்கரி கொள்முதல் செய்த வகையிலும் பல தவறுகள் நடந்திருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒரு தனியார் நிறுவனத்தின் முனையத்தை உபயோகப்படுத்தியதால், 41 கோடி ரூபாய் கூடுதல் செலவை ‘டான்ஜெட்கோ’ சந்தித்துள்ளதாகக் குறிப்பிடுகிறது சி.ஏ.ஜி அறிக்கை. 2017-ம் ஆண்டு வரை 411 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை தரச்சோதனையே செய்யாமல் டான்ஜெட்கோ இறக்குமதி செய்திருப்பதை சி.ஏ.ஜி கண்டறிந்துள்ளது. முப்பது நாள்களுக்குள் நிலக்கரியைச் சோதனை செய்து அதன் அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளித்தால் மட்டுமே, நஷ்ட ஈட்டுத் தொகையை டான்ஜெட்கோ பெற முடியும். ஆனால், 2017-18-ம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் சோதனை முடிவுகளை ஓர் ஆண்டாகியும் சமர்ப்பிக்காமல் இருந்திருக்கிறது டான்ஜெட்கோ. இதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது. தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததால், கூடுதல் செலவீனங்களையும் அரசு செய்துள்ளது. இது மட்டுமன்றி நிலக்கரியை ஏற்றிச்செல்லும் ரயில் போக்குவரத்திலும் முறையான வழிமுறையைப் பின்பற்றாமல் போனதால் பயனற்ற சரக்குக் கட்டணம் 101 கோடியைக் கொடுத்திருக்கிறது டான்ஜெட்கோ. இதனால், பல கோடி ரூபாய் இழப்பை, கடந்த ஐந்தாண்டுகளில் மின்துறை நிறுவனம் சந்தித்தாகக் குறிப்பிடுகிறது சி.ஏ.ஜி-யின் அறிக்கை. இதேபோல ஒவ்வொன்றிலும் நடந்த தவறுகளைப் பட்டியல் போடுகிறது அந்த அறிக்கை.

நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், “அ.தி.மு.க அரசின் நிர்வாகக் கோளாறுகளால்தான், தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், தங்கள் மீதான குற்றத்தை மறைப்பதற்காக, மின்வெட்டுப் பிரச்னையை தி.மு.க மீது தூக்கிப்போடப் பார்க்கிறார்கள். இதற்கு செக் வைக்கத்தான் சி.ஏ.ஜி அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். மின்வாரியத்துக்குத் தேவையான நிலக்கரியை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிலிருந்து எடப்பாடி பழனிசாமி அரசு கொள்முதல் செய்தது. முன்னாள் அமைச்சர் ஒருவரின் முதலீடுகளை வெளிநாடுகளில் பெரிய அளவில் செய்ததும் இந்த நிறுவனம்தான். அதே சிங்கப்பூர் நிறுவனம்தான் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது. அதிலும் பல இழப்பீடுகள் இருந்துள்ளன. இந்த விவகாரத்தைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறோம். அந்த சிங்கப்பூர் நிறுவனத்துக்கும், முன்னாள் அமைச்சருக்கும் சிக்கல் காத்திருக்கிறது” என்றார்.

‘ரூ. 48,711 கோடி இழப்பு!’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா?

ஒன்றரை ஆண்டுகளாக தி.மு.க ஏன் கேட்கவில்லை?

அரசின் இந்த சி.ஏ.ஜி அறிக்கை வெளியீட்டுப் பின்னணியில், தி.மு.க-வின் தப்பிக்கும் அரசியல்தான் இருக்கிறது என்கிறது அ.தி.மு.க வட்டாரம். நம்மிடம் பேசிய முன்னாள் சீனியர் அமைச்சர் ஒருவர், “ஒன்றரை ஆண்டுகளாக சி.ஏ.ஜி அறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை என்று பழனிவேல் தியாகராஜன் வெடித்துப் பேசுகிறார். இப்போது கேள்வி எழுப்புகிறவர்கள் ‘அப்போதே சி.ஏ.ஜி அறிக்கை எங்கே?’ என்று கேட்டிருக்கலாமே... ஒன்றரை ஆண்டுகளாகப் பேசும் சக்தியை இழந்திருந்தார்களா? ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற ஆசையில் சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க-வினர் அள்ளி வீசிவிட்டார்கள். இப்போது அதை நிறைவேற்ற முடியாமல் நிதிநிலை கழுத்தை நெரிக்கிறது. இதற்கு அ.தி.மு.க-தான் காரணமென எங்கள்மீது பழியைப்போட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது தி.மு.க அரசு. சில நிர்வாகக் காரணங்களுக்காகத் தான் சி.ஏ.ஜி அறிக்கையை எடப்பாடி பழனிசாமி அரசு வெளியிடாமல் நிறுத்திவைத்திருந்ததே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இப்போது அந்த அறிக்கையை வெளியிட்டு ஒரு செயற்கையான சலசலப்பை தி.மு.க உருவாக்கப் பார்க்கிறது. எங்களை பயமுறுத்தி, சட்டமன்றத்தில் அமைதியாக இருக்கவைக்க ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள். இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் அ.தி.மு.க அஞ்சாது” என்றார்.

‘ரூ. 48,711 கோடி இழப்பு!’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா?

அ.தி.மு.க-வின் கொதிப்பு ஒருபக்கம் இருந்தாலும், ஆக்‌ஷனுக்கு தி.மு.க அரசு ரெடியாகிறது என்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் நிலக்கரி கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கருதுகிற தி.மு.க தரப்பு, சி.ஏ.ஜி அறிக்கையைவைத்து ஆட்டத்தை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட 2ஜி வழக்கு இதே போன்ற சி.ஏ.ஜி அறிக்கையின் மூலமே வெளியானது. அதே பாணியிலான பரபரப்பை, இப்போது சி.ஏ.ஜி அறிக்கை மூலமாக தி.மு.க அரசு ஏற்படுத்த முனைகிறது.

அறிக்கையைவைத்து அரசியல் செய்யுமா... அதிரடி ஆக்‌ஷனை ஆரம்பிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

*******

என்ன சொல்கிறார் தங்கமணி?

“சி.ஏ.ஜி அறிக்கை என்பது எல்லோருடைய ஆட்சியிலும் வெளியாகும் ஒன்றுதான். இப்போது வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மின்சாரத்துறையில் ஏற்பட்ட இழப்புக்குக் காரணம்... கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தது, இலவச மின்சாரம், ‘நூறு யூனிட் மின்சாரம் இலவசம்’ திட்டம் போன்றவைதான். இந்தக் காரணங்களால்தான் வருவாயை ஈட்ட முடியவில்லை. அதேநேரம் மின்சார உபகரணங்களுக்கான விலை ஏற்றமும் இருந்தது. மின்சார உற்பத்தியில் தமிழக அரசு முனைப்பு காட்டவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதற்கான முகாந்தரங்களில் பல சிக்கல்கள் இருந்தன. இப்போது தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, மின்சாரத் தட்டுப்பாடு தொடர்ந்துவருவதால் சி.ஏ.ஜி-யில் மின்சார இழப்பைப் பெரிதாகக் காட்டியிருக்கிறார்கள். உண்மையில், சேவை மனப்பான்மையோடுதான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தத் துறையைச் செயல்படுத்திவந்தோம்!”

‘ரூ. 48,711 கோடி இழப்பு!’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா?

வேறு என்னென்ன இழப்புகள்?

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விற்கப்பட்ட, சர்க்கரைக்கான உள்ளீ்ட்டு வரி வரவைக் கோரத் தவறியமையால், 13.67 கோடி ரூபாய் இழப்பு.

 தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு அளித்த நிலத்துக்கு வாடகைத் திருத்தம் செய்யாமல், அரசு செய்த தாமதத்தால் 8.56 கோடி ரூபாய் இழப்பு.

 மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பணத்தைப் பெற்றதன் விளைவாக 24.96 கோடி ரூபாய் சேமிப்பு வங்கிக் கணக்கில் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி இழப்பும் ஏற்பட்டுள்ளது.

 ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையும், மருத்துவக் கல்வி இயக்குநரும் உள்ளபடியான தேவையை மதிப்பிடத் தவறியதால், 55.33 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் பயனற்று இருந்தன. நகராட்சி நிர்வாகத்துறையில் டெண்டர்களைத் தவறான பகுப்பாய்வு செய்ததால் ஒப்பந்ததாரர்கள் 1.41 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளனர்.

 பாடநூல் கழகத்தின் தொகை கோரிக்கையைச் சரிபார்க்க, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்கங்கள் தவறியதாலும், மற்றும் பாட நூல்களில் தவறுகளைக் களைய பள்ளிக்கல்வி இயக்குநரகம் தவறியதாலும் 23.27 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கமிஷனும் முதலீடும்

மின்வாரியத்தில் ஏற்கெனவே பொறுப்பிலிருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், செயல்படாமல் இருந்த ஒரு மின் உற்பத்தி நிறுவனத்துக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை மின்சார வாரியத்தின் மூலம் செலுத்தவைத்தாராம். இதற்காக அந்தத் தனியார் நிறுவனம் பெரும் தொகையை கமிஷனாக அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அந்தத் தொகையை நகைக்கடை ஒன்றில் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி முதலீடு செய்ததாக மோப்பம் பிடித்திருக்கிறது உளவுத்துறை. அதேபோல ‘உதய்’ திட்ட நிதியைப் பகிர்ந்து அளித்ததிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. அதிலும் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறதாம்.