Published:Updated:

ஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா? இதோ ஓர் உதாரணம்! #DoubtOfCommonMan

ஓடந்துறை
News
ஓடந்துறை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவர்கள், மக்களுக்காகச் செயல்பட வேண்டும். ஊராட்சித் தலைவர் ஏழையாக இருக்கலாம். ஊராட்சி ஏழையாக இருக்கக்கூடாது.

Published:Updated:

ஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா? இதோ ஓர் உதாரணம்! #DoubtOfCommonMan

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவர்கள், மக்களுக்காகச் செயல்பட வேண்டும். ஊராட்சித் தலைவர் ஏழையாக இருக்கலாம். ஊராட்சி ஏழையாக இருக்கக்கூடாது.

ஓடந்துறை
News
ஓடந்துறை
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி விகடனின் சிறப்பு #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர்களிடமிருந்து கேள்விகள் பெறப்பட்டன. பெறப்பட்ட கேள்விகளில், அதிக வாசகர்களால் தேர்வுசெய்யப்பட்ட கேள்வி, "ஓர் ஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மேம்படுத்த முடியுமா? ஏதேனும் உதாரணங்கள் உண்டா?"- இந்தக் கேள்வியை எழுப்பிய வாசகர், புருஷோத்தமன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of a common man
Doubt of a common man
8 லட்சம் யூனிட் காற்றாலை மின்சாரம்!
ஓராண்டுக்கு 8 லட்சம் யூனிட் காற்றாலை மின்சாரத்தை உற்பத்திசெய்கிறது, ஓடந்துறை ஊராட்சி.

ஓர் ஊராட்சித் தலைவர் நினைத்தால், தங்கள் பகுதியை மிகச்சிறப்பான முன்னுதாரண ஊராட்சியாக மாற்றமுடியும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அப்படி, தமிழ்நாட்டில் பல உண்டு. ஒரு சோறு பதமாக உள்ளது, ஓடந்துறை ஊராட்சி.

கோவையிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஊராட்சி ஓடந்துறை. பத்தாயிரம் மக்கள் வசிக்கும் அந்த ஊராட்சி, ஓராண்டுக்கு 8 லட்சம் யூனிட் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. குடிநீர், தெருவிளக்குத் தேவைகளுக்கு 4 லட்சம் யூனிட் போக, மீதம் உள்ள மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனைசெய்கிறது. இதைச் சாத்தியப்படுத்தியவர், ஓடந்துறையின் ஊராட்சித் தலைவராக இருந்த சண்முகம்.

ஓடந்துறை பஞ்சாயத்தில் 850 பசுமை வீடுகளை கட்டித்தந்துள்ளார். இந்த வீடுகளில், ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். குடிசையில்லா கிராமமாகத் திகழும் ஓடந்துறையில், மின்சாரமும் தற்போது காற்றாலை மூலம் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தில் மீதமிருப்பதை, மின்வாரியத்துக்கு வழங்கிவருகிறது.

பசுமை வீடுகள்
ஓடந்துறை பஞ்சாயத்தில் 850 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
சண்முகம்
சண்முகம்

ஓடந்துறையின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சண்முகத்திடம் பேசினோம்.

"ஊராட்சியை வளர்ச்சியடையச் செய்வது என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. முதலில் அனைவரும் தமது கிராமத்திற்கென நல்லதை செய்யத் தொடங்க வேண்டும். ஊராட்சி நிர்வாகம் ஊழலற்ற லஞ்ச லாவண்யம் இல்லாத நிர்வாகமாக இருக்க வேண்டும். முதலில், ஊராட்சித் தலைவர் நேர்மையான முறையில் செயல்பட வேண்டியது அவசியம். தலைவரே சரியாக இல்லையெனில், ஊராட்சியின் மற்ற நிர்வாகிகளும் சரியாக இருக்க மாட்டார்கள். இப்படி, சீரான நல்ல நிர்வாகமாக இருந்தால் ஊராட்சி மக்களுக்கு அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். இதன்மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை நம்மால் நிச்சயம் உயர்த்த முடியும். மேலும், எல்லாவிதமான தேவைகளுக்கும் அரசாங்கத்தைச் சார்ந்திருக்காமல் ஊராட்சியின் நிதியிலிருந்தே நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கு, முதலில் ஊராட்சி முழுவதும் நூறு சதவிகிதம் வரி வசூல் செய்ய வேண்டும்.

நான் முதன்முதலில் 1996-ம் ஆண்டு ஊராட்சித் தலைவரானபோது, எங்களது ஊராட்சியின் வருமானம் வெறும் இருபதாயிரம் ரூபாய் தான். அதன்பிறகு, ஒரு வருடத்தில் எங்கள் ஊராட்சியின் வருமானம் 1.45 லட்சத்தை எட்டியது. இதற்கு முக்கியக் காரணம், அனைத்து நபர்களிடமும் முழுமையாக வரி வசூல் செய்ததுதான். இப்படி நமது சுய நிதியை நாம் பெருக்கிக்கொண்டால், எப்போதும் அரசாங்கத்தைச் சார்ந்திருக்கவேண்டிய தேவை ஏற்படாது. இத்துடன், மத்திய-மாநில அரசாங்கங்கள் அளிக்கும் சிறப்புத் திட்டங்களை நாம் மாவட்ட ஆட்சியரிடமோ, திட்ட நிர்வாக இயக்குநரிடமோ பேசி பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் நமக்கு அரசு நிதியுதவியும் கிடைக்கும். நமது சொந்த ஊராட்சியின் நிதியும் இருக்கும். இதை வைத்துக்கொண்டு எளிதில் நமது ஊராட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு, புதிய திட்டங்களையும் செயல்படுத்தமுடியும். இதோடு, அனைத்து மக்களையும் சாதி மத பேதமில்லாமல் நடத்தினால், நமது கனவு கிராமத்தை நாம் நிச்சயம் உருவாக்க முடியும்.

ஓடந்துறை
ஓடந்துறை
சேமித்தல் என்பது ஒரு ஊராட்சிக்கு மிகவும் அவசியம். நாம் செயல்படுத்தும் திட்டங்களைத் தரமான முறையில் செயல்படுத்த வேண்டும்.
சண்முகம், முன்னாள் ஊராட்சித் தலைவர், ஓடந்துறை

நான் 1996 -2001ல் சேமித்துவைத்த 25 லட்சத்தை வைத்துதான் முதன் முதலில் 135 வீடுகளைக் கட்டினேன். 2001-2006ல் சேமித்து வைத்த 40 லட்ச ரூபாயை முதலீடாகக்கொண்டே, ஒரு கோடியே ஐம்பது லட்சத்திற்கு ஒரு காற்றாலையை உருவாக்கினோம். எனவே, சேமித்தல் என்பது ஒரு ஊராட்சிக்கு மிகவும் அவசியம். நாம் செயல்படுத்தும் திட்டங்களைத் தரமான முறையில் செயல்படுத்துதல் வேண்டும். இதனால் அனாவசியமாகச் செலவு செய்வதை நாம் தவிர்க்க முடியும். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவர்கள், மக்களுக்காகச் செயல்பட வேண்டும். ஊராட்சித் தலைவர் ஏழையாக இருக்கலாம். ஊராட்சி ஏழையாக இருக்கக்கூடாது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், காந்தி கண்ட கிராம சுய ராஜ்ஜியத்தை மிகக் குறுகிய காலத்தில் நம்மால் அடைந்துவிட முடியும்" என்றார்.

ஓடந்துறை என்பது ஓர் உதாரணம். சரியாகத் திட்டமிட்டு, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஈடுபாட்டோடு செயல்பட்டால் எல்லா ஊராட்சிகளும் மேம்படும். மக்கள் அடிப்படை வசதிகள் பெற்று நிறைவாக இருப்பார்கள். நிச்சயமாக, ஓர் ஊராட்சித்தலைவர் நினைத்தால் தம் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக, வளமான ஊராட்சியாக, சுயசார்பு ஊராட்சியாக உருவாக்க முடியும்.

Doubt of a common man
Doubt of a common man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!