கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர்கள் வாசு, மேரி தம்பதியர். இவர்கள் தேனி மாவட்டம் குச்சனூரில் இருந்து குளித்தலைக்கு லாரியில் 2,500 வாத்துகளை வாங்கி கொண்டு சென்றனர். லாரியை டிரைவர் ரஞ்சித் ஓட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு உதவியாக வாசு, மேரி மற்றும் அவரின் மகன் உடன் சென்றிருக்கிறார்கள்.

இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சேடப்பட்டி அருகே வத்தலகுண்டு செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 4 பேர் சபரிமலை சென்றுவிட்டு, காரில் சென்னை திரும்பிகொண்டிருந்தனர். அவர்கள் வாத்துகள் ஏற்றிச் சென்ற லாரின் பின்னே சென்றுகொண்டிருந்தபோது திடீரென லாரியை முந்திச் செல்ல முயன்றிருக்கிறார்கள். அப்போது தேனி நோக்கி லாரியின் எதிரே ஒரு வாகனம் வந்ததால் நிலைகுலைந்த கார், லாரி மீது உரசியிருக்கிறது.
இதில் பெரும்விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயந்து லாரி டிரைவர் சாலையோரத்தில் லாரியை விட்டிருக்கிறார். இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துவிட்டது. லாரியில் பயணித்த மேரி, வாசு, அவர்களது மகன், டிரைவர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காரில் பயணித்தவர்கள் எவ்வித காயமும் இன்றி தப்பினர். தகவலறிந்து செம்பட்டி போலீஸார், நிகழ்விடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் லாரியில் கூண்டுகளில் வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 2,500 வாத்துகளில் 500 வாத்துகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது