சினிமா
Published:Updated:

கனவுகள் கைகூடும் ‘கார்’காலம்!

சென்னை டிரேட் சென்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை டிரேட் சென்டர்

வட்டி இல்லா வீட்டுக் கடன், பைக் எல்லாம் முன்னமே கொடுத்திருக்கிறோம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கார் ஐடியாவைச் சொன்னதும் அவர்தான்.

நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை டிரேட் சென்டரில் கடந்த வாரம், ஷங்கர் படத்தைவிட பிரமாண்டமான ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தம் புதிய கார்கள் அணிவகுத்து நின்றன. மூதாட்டி ஒருவர், தன் பல தலைமுறைக் கனவான காரை, அதன் அருகே சென்று முத்தமிட்டுக் கொண்டிருந்தார். உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு மிடில் கிளாஸ் மக்களின் ஆகப்பெரும் கனவு, கார். குடும்பம் பெரிதான பின்னும், பைக்கில் தங்கள் ஆயுளைக் கழிக்கும் அநேகம் பேர் இருக்கக்கூடிய நாட்டில், சென்னையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு கார்களைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். ஐடியாஸ்2 ஐ.டி நிறுவனம் தங்கள் ஊழியர்கள் நூறு பேருக்கு மாருதி காரைப் பரிசாக வழங்கியிருக்கிறது. கிஸ்ஃப்ளோ நிறுவனமோ தங்களிடம் ஆரம்பத்திலிருந்து பணியாற்றிய ஐந்து ஊழியர்களுக்கு கனவிலும் காண முடியாத விலையுயர்ந்த BMW கார்களைக் கொடுத்து கௌரவித்திருக்கிறது.

கனவுகள் கைகூடும் ‘கார்’காலம்!

“நானும் என் மனைவியும் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து 13 ஆண்டுகள் ஆகிறது. பெரும்பாலும் சின்னச்சின்ன கிராமங்களில் இருந்து ஆட்களை எடுப்போம். ஐ.டி நிறுவனம் என்றாலே வழக்கமாக சில ஆண்டுகளில் வேறு வேலைக்கு மாறிவிடுவதுதான் வழக்கம். ஆனால், நாங்கள் எடுத்த நபர்களில் அநேகம் பேர், இங்கு வேலை செய்கிறோம் என்பதை மீறி, நிறுவனத்தின் பங்குதாரர்களைப் போல தீவிரமாக உழைக்கத் தொடங்கினார்கள். அப்படி இருப்பவர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளைக் கொடுப்பதுதானே முறை என்பதை சில ஆண்டுகளாகவே யோசித்துக்கொண்டிருந்தோம். ‘வாழ்க்கைல அவங்களுக்குத் தேவையானதைக் கொடுத்திட்டீங்கன்னா, மனநிறைவுடன் வேலை பார்ப்பாங்க’ன்னு என் மனைவி அடிக்கடி சொல்வாங்க” என்றபடி பேச ஆரம்பித்தார் ஐடியாஸ்2 ஐ.டி நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான முரளி விவேகானந்தன்.

கனவுகள் கைகூடும் ‘கார்’காலம்!

“வட்டி இல்லா வீட்டுக் கடன், பைக் எல்லாம் முன்னமே கொடுத்திருக்கிறோம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கார் ஐடியாவைச் சொன்னதும் அவர்தான். ஊழியர்களிடமும் பேசினோம். சிலர் கார் என்னும் ஐடியாவை டிக் அடித்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேல், எங்களிடம் இருக்கும் பணியாளர்களைப் பட்டியலிடத் தொடங்கினோம்.அதைப் படிநிலைகளை வைத்து நாங்கள் தீர்மானிக்கவில்லை. அட்மினில் இருப்பவர்கள், ஒப்பந்த ஊழியத்தின் கீழ் வருபவர்கள் என எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதிலும் குறிப்பாக படிநிலையில் கீழ் இருப்பவர்களிலிருந்து பட்டியலைப் போட ஆரம்பித்தோம். ஏனெனில், அவர்களுக்குத்தானே கார் என்பது முக்கியம்” என்கிறார் முரளி விவேகானந்தன்.

கனவுகள் கைகூடும் ‘கார்’காலம்!

“இந்த நிகழ்வில் நிறைய நெகிழ்ச்சியான தருணங்களை எங்களால் காண முடிந்தது. ஒரு ஊழியர், தன் குடும்பத்திடம் எதுவும் சொல்லாமல் கூப்பிட்டு வந்திருந்தார். இன்னொருவரின் தாயார் அங்கேயே அழுதுவிட்டார். குழந்தைகள் எல்லாம் ஹாரன் அடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் கஸ்டமர்களைப் போலவே ஊழியர்களும் எப்போதும் முக்கியம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். பேஸ்புக், ரோஸ் எனப் பல பெரிய நிறுவனங்களுக்கு நாங்கள் வேலை செய்துவருகிறோம். மார்க்கெட்டில் என்ன சம்பளம் வழங்கிறார்களோ, அதே அளவு அல்லது அதைவிட அதிக சம்பளத்தைத்தான் இதுவரை வழங்கியிருக்கிறோம்.

நிறைய பேர் காரைக் கொடுத்து ஊழியர்களைத் தக்க வைக்க முடிவு செய்கிறீர்களா எனக் கேட்கிறார்கள். உண்மையில் அப்படியெல்லாம் யாரையும் கடிவாளம் போட்டு நிறுத்தி வைக்க முடியாது. எங்களுக்கு கொரோனா காலங்களில் இவர்கள் அனைவருமே அவ்வளவு மெனக்கெட்டு உழைத்தார்கள். அதற்கான நன்றிக்கடன்தான் இது” என்று நெகிழ்கிறார்.

*****

கனவுகள் கைகூடும் ‘கார்’காலம்!

கார் என்பதே கனவு என்கிற சூழலில், பெருங்கனவிலும் யோசிக்க முடியாத BMW காரைப் பரிசாக வழங்கி இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்த கிஸ்ஃப்ளோ நிறுவனர் சுரேஷ் சம்பந்தத்திடம் பேசினேன். “நாங்கள் வெறுமனே ஏதோவொரு BMW-வைக் கொடுக்கவில்லை. அதிக வசதிகள் கொண்ட 5 சீரிஸ் அதிலும் 530d M-Sports edition என்னும் மாடலைக் கொடுத்திருக்கிறோம். சென்னையிலேயே சிலர் மட்டுமே வைத்திருக்கக்கூடிய இந்த வாகனத்தில்தான் இனி இவர்கள் வலம் வருவார்கள். எங்கள் நிறுவனத்தின் நிறுவனர் குழுவைப் போன்றவர்கள் இவர்கள் என்பதால், இந்தச் சமுதாயமும், அவர்களின் சுற்றத்தாரும் இனி அதே மரியாதையை அவர்களுக்கும் வழங்குவார்கள். அதிலும் குறிப்பாக ஒருவர் BMW வாங்கவேண்டும் எனச் சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு வந்தார். ஆனாலும், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. அவருக்கு இதுவொரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதேபோல, இன்னொருவருக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எங்கள் நிறுவனத்தின் பெயரான கிஸ்ஃப்ளோ என்பதைச் சொல்லவே அந்த மணப்பெண் கூச்சப்பட்டுக்கொண்டு இருந்தாராம். இப்போது எல்லோரிடமும் ‘BMW கார் கொடுத்த கம்பெனி’ எனப் பெருமை பொங்கச் சொல்கிறாராம்” என்று நிறைவுடன் சொல்லிச் சிரித்தார் சுரேஷ் சம்பந்தம்.