Published:Updated:

``நேர்மையான மனிதரை மாற்றியது ஏன்?" - எஸ்.பி விக்ரமனுக்கு ஆதரவாக ரிட் மனு தாக்கல்!

விக்ரமன் (மாற்றப்பட்ட கரூர் எஸ்.பி)
O
விக்ரமன் (மாற்றப்பட்ட கரூர் எஸ்.பி) O ( நா.ராஜமுருகன் )

"விக்ரமன் மாற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவரை மறுபடியும் கரூர் எஸ்.பி-யாகவே நியமிக்கணும்" என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட்மனு தாக்கல் செய்துள்ளார், கரூரைச் சேர்ந்த வழக்கறிஞரான 'தமிழ்' ராஜேந்திரன்

கரூர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர் விக்ரமன். கரூருக்கு பணிக்கு வந்த ஒன்றரை மாதங்களில் பல அதிரடி நடவடிக்கைகள் மூலம், குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தினார். தவறு செய்ய நினைத்தவர்களை, பயத்தில் நடுங்க வைத்தார். கரூரில் நடந்து வந்த மணல்கொள்ளையை அடியோடு தடுத்து நிறுத்தினார். அதேபோல், கரூர் மாவட்டம் முழுக்க நடைபெற்று வந்த கள்ள லாட்டரி விற்பனையை ஒழித்தார். சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வந்த நூற்றுக்கணக்கான சந்து கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல், வட்டிக்கு விடும் தொழில் செய்பவர்களை அழைத்துக் கூட்டம் போட்ட விக்ரமன், "இனி அரசிடம் அனுமதி பெற்று, அரசு நிர்ணயித்த அளவில் மட்டும் வட்டியை பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டும்.

விக்ரமன் (மாற்றப்பட்ட கரூர் எஸ்.பி)
விக்ரமன் (மாற்றப்பட்ட கரூர் எஸ்.பி)
நா.ராஜமுருகன்

இல்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால், குறுகிய காலத்திலேயே கரூர் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார் எஸ்.பி விக்ரமன். ஆனால், சமீபத்தில் விக்ரமனை சென்னை நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றல் செய்வதாக உத்தரவு வர, கொந்தளித்துவிட்டார்கள் மக்கள். "இதற்குக் காரணம், கரூர் மாவட்ட ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிதான்" என்று கொந்தளித்தார்கள். 'எஸ்.பி மாற்றப்பட்டதை ரத்து செய்' என்று மாவட்டம் முழுக்க சமூக ஆர்வலர்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டி எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

Vikatan

இந்நிலையில், கரூருக்கு புதிய எஸ்.பி-யாக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பாண்டியராஜன் நியமிக்கப்பட்டார். இதனால், கோபமான கரூர் மக்கள், சமூகவலைதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில்தான், "விக்ரமன் மாற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவரை மறுபடியும் கரூர் எஸ்.பி-யாகவே நியமிக்கணும்" என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட்மனு தாக்கல் செய்துள்ளார், கரூரைச் சேர்ந்த வழக்கறிஞரான 'தமிழ்' ராஜேந்திரன் என்பவர்.

கும்மராஜா (கரூர் நகர டி.எஸ்.பி)
கும்மராஜா (கரூர் நகர டி.எஸ்.பி)
நா.ராஜமுருகன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ராஜேந்திரன், "ரொம்ப வருஷதுக்குப் பிறகு கரூருக்கு நல்ல எஸ்.பி கிடைத்தார். ஆனா, அதை ஒன்றரை மாசத்தில் பறிக்க பார்த்தா எப்படி? இது முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடு, ஆளுங்கட்சியினரால் நடத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கை. ஏற்கனவே, ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம், 'காவல்துறை அதிகாரிகளை இஷ்டத்துக்கு மாற்றம் செய்யக் கூடாது. ஒரு கமிட்டி அமைத்து, நியாயமாக, தேவை ஏற்பட்டால் மட்டுமே, பணிமாறுதலில் வேறு இடத்துக்கு அனுப்பனணும்'னு தீர்ப்பு வழங்கி இருக்காங்க.

அந்த வழக்கை குறிப்பிட்டுதான், எஸ்.பி விக்ரமனை மறுபடியும் கரூருக்கே மாற்றம் செய்யனணும்னு ரிட் மனுத்தாக்கல் பண்ணி இருக்கேன். அதோடு, திருப்பூரில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்ணை டி.எஸ்-பியாக இருந்தபோது, கைநீட்டி அடித்தவர்தான், இப்போதைய புது எஸ்.பி பாண்டியராஜன். அதேபோல், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிக்குச் சாதகமாக நடத்துக்க பார்த்தவரும் அவர்தான்னு குற்றச்சாட்டு இருக்கு. அதோடு, புகார் கொடுத்த பெண்ணின் பெயரை பொதுவெளியில் அறிவித்து, அதனால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவரை கரூருக்கு எஸ்.பி-யாக நியமித்திருக்கிறார்கள். அதேபோல், கரூர் நகர டி.எஸ்.பி-யாக இருப்பவர் கும்மராஜா. இவர் கரூர் கோர்ட்டில் நடைபெற்று வரும், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இளங்கோவன் மீதான பாலியல் வழக்கை சரியாகக் கையாளவில்லை என்று மாவட்ட முதன்மை நீதிபதியால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டவர்.

வழக்கறிஞர் 'தமிழ்' ராஜேந்திரன்
வழக்கறிஞர் 'தமிழ்' ராஜேந்திரன்
நா.ராஜமுருகன்

அதோடு, 'அவர்மீது நடவடிக்கை எடுங்க' என்று எஸ்.பி-க்கு நீதிபதி உத்தரவும் போட்டார். அப்படிப்பட்ட அவர், 13 வருடங்களாக கரூரிலேயே பணியாற்றி வருகிறார். அவரை எந்த உயரதிகாரியும் மாற்றம் செய்யவில்லை. இப்படி இவர்களுக்கு சலுகை வழங்கியவர்கள், சிறப்பாகப் பணியாற்றி, மக்களின் மனதைக் கவர்ந்த விக்ரமனை ஒன்றரை மாதங்களிலேயே மாற்ற வேண்டிய அவசியம் என்ன? இவற்றை எல்லாம் ரிட் மனுவில் குறிப்பிட்டு, பதிவுத் தபாலில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அனுப்பி இருக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வரலாம். விக்ரமன் சாரை கரூரில் மறுபடியும் பணியாற்ற வைக்கும்வரை ஓயப்போவதில்லை" என்றார் அதிரடியாக!

அடுத்த கட்டுரைக்கு