அலசல்
Published:Updated:

வன்கொடுமை வழக்கில் தி.மு.க பிரமுகர்! - மிரட்டப்படுகிறாரா புகார்தாரர்?

பத்திரகாளியம்மன் திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
பத்திரகாளியம்மன் திருக்கோயில்

ஒன்றியச் செயலாளர் அப்படிப் பேசியிருக்க வாய்ப்பில்லை. ஏதாவது பொய்க் குற்றச்சாட்டாக இருக்கும். இதை ஒரு துருப்புச்சீட்டாக எடுத்துக்கொண்டு யாரும் விமர்சிக்க வேண்டாம்

சேலம், மேச்சேரியிலுள்ள பத்திரகாளியம்மன் திருக்கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது. இந்தக் கோயிலின் செயல் அலுவலர் திருஞானசம்பந்தரை, மேச்சேரியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியச் செயலாளர் சீனிவாசபெருமாள் சாதிரீதியாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டல் வருவதாக ஜூ.வி அலுவலகத்துக்குப் புகார்க் கடிதம் வந்ததால், விசாரணையில் இறங்கினோம்.

நம்மிடம் பேசிய செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், “தி.மு.க ஒன்றியச் செயலாளர் சீனிவாசபெருமாள் தனக்குத் தெரிந்த ஒரு நபருக்குக் கோயிலில் எலெக்ட்ரீஷியன் வேலை வழங்குமாறு கேட்டார். அதற்கு நான், ‘மேலதிகாரிகளின் உத்தரவு இல்லாமல், வேலைக்கு யாரையும் பணியமர்த்த முடியாது’ என்று கூறிவிட்டேன்.

வன்கொடுமை வழக்கில் தி.மு.க பிரமுகர்! - மிரட்டப்படுகிறாரா புகார்தாரர்?

இந்த நிலையில், கடந்த 16-11-2022 அன்று ஒன்றியச் செயலாளர் சீனிவாசபெருமாள், அவரின் தம்பி ரங்கநாதன், சில தி.மு.க கவுன்சிலர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் எனது அலுவலகத்துக்குள் புகுந்து, ‘இ.ஓ-ன்னா பெரிய இவனா... நீ யாரு, உன்னோட பின்புலம் என்னன்னு எங்களுக்குத் தெரியாதா?’ என்று நான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதைச் சொல்லித் திட்ட ஆரம்பித்துவிட்டனர். இது தொடர்பாக மேச்சேரி காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின்பேரில், சாதிய வன்கொடுமை வழக்கு பதிவும்செய்யப்பட்டது. ஆனாலும்கூட இதுவரை யாரையும் போலீஸ் கைதுசெய்யவில்லை. இதற்கிடையே துறையிலுள்ள மேலதிகாரிகளே, ‘ஆளுங்கட்சியினர் மீதே புகார் கொடுத்தால் எப்படி...’ என்று வழக்கை வாபஸ் பெறச் சொல்லி என்னை வற்புறுத்துகின்றனர்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க ஒன்றியச் செயலாளர் சீனிவாசபெருமாளிடம் விளக்கம் கேட்டபோது, “நான் ஒருவருக்கு வேலை கேட்டபோது இ.ஓ தர மறுத்ததால், என்னுடன் வந்த சிலர் கோபத்தில் அவரிடம், ‘நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும்’ என்று யதார்த்தமாகப் பேசிவிட்டார்கள். அவர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தன்னைச் சாதிரீதியாகப் பேசியதாகப் புகார் அளித்திருக்கிறார்” என்றார்.

திருஞானசம்பந்தர் - சீனிவாசபெருமாள்
திருஞானசம்பந்தர் - சீனிவாசபெருமாள்

சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசியிடம், ‘துறைரீதியான மிரட்டல்கள்’ குறித்துக் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட நபர்மீது அளித்த புகாருக்கு நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை” என்றார்.

விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி சண்முகம், “முழுமையான விசாரணைக்குப் பிறகே கைது நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “ஒன்றியச் செயலாளர் அப்படிப் பேசியிருக்க வாய்ப்பில்லை. ஏதாவது பொய்க் குற்றச்சாட்டாக இருக்கும். இதை ஒரு துருப்புச்சீட்டாக எடுத்துக்கொண்டு யாரும் விமர்சிக்க வேண்டாம்” என்றார் சுருக்கமாக.

யார் சொல்வது உண்மை?!