அரசியல்
Published:Updated:

மாட்டுக்காரங்க என்னை அடிச்சாங்க... அசிங்கமா திட்டுனாங்க! - ஜல்லிக்கட்டு வீரர் வேதனை

ஜல்லிக்கட்டு வீரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜல்லிக்கட்டு வீரர்

இதுதான் தமிழ்ப் பெருமிதமா?

“ரத்தத்துக்கோ மரணத்துக்கோ பயப்படாம நெஞ்ச நிமிர்த்தி ஜல்லிக்கட்டுல காளைகளை அடக்குறோம்; முதல் பரிசு வாங்குறோம். என்ன பிரயோசனம்... மாட்டைப் பிடிச்சதுக்காக மாட்டுக்காரங்க எங்கள அடிக்கிறாங்க” என்று ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர் தமிழரசன் கண்கலங்கிப் பேசிய வீடியோ பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

சமீபத்தில் நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில், அதிக மாடுகளைப் பிடித்து கார் பரிசு பெற்றார் சின்னபட்டியைச் சேர்ந்த தமிழரசன். அழுதபடி வேதனையுடன் அவர் பேசிய உண்மைகள், நம் பெருமிதங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு கோர முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. விசாரித்தால், மாடுபிடி வீரர்கள் தாக்கப்படும் கொடுமையோடு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பின்னாலுள்ள சாதிப் பெருமிதம், விழா கமிட்டிகளில் நிலவும் சமத்துவமின்மை, அதிகாரம், தீண்டாமை, அத்துமீறல்கள் எனப் பல புகார்கள் குவிகின்றன.

தமிழரசன்
தமிழரசன்

இன்றும் தொடரும் அவலம்!

“ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டபோது, தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் போராட்டத்தில் இறங்கியது. உலகமே அந்தப் போராட்டத்தை கவனித்தது. அந்த ஒற்றுமையான போராட்டத்தால், ஜல்லிக்கட்டின் மீதான தடை நீக்கப்பட்டு, தற்போது தமிழகத்தில் பல இடங்களில் பெருந்திருவிழாவாக, பண்பாட்டுக் கொண்டாட்டமாக நடந்துவருகிறது. தமிழர்களின் ஒற்றுமை மற்றும் கலாசார அடையாளமாகப் பார்க்கப்படும் ஜல்லிக்கட்டு, உண்மையில் பெரும்பாலான இடங்களில் அப்படி இல்லை என்பதுதான் உண்மை. பல இடங்களில் இன்னும் அது மறைமுகப் பண்ணையார்த்தனத்துடன் நடத்தப்படுகிறது. ஊரில் வசதியானவர்கள், ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் பெருமைக்காக ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து போட்டிகளில் விடுவதும், அதைப் பிடிக்கக் கூடாது என்ற மறைமுக எச்சரிக்கை வீரர்களுக்குச் சொல்லப்படுவதும், மீறிப் பிடிப்பவர்கள் தன் சாதியைச் சேர்ந்தவரா என்று பார்த்து பரிசு வழங்குவதும், வேறு சாதியினர் பிடித்தால், அவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதும் இன்றும் தொடரும் அவலம்தான். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மாவட்ட நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் நடத்தப்படுகிறது. தடைக்குப் பின்பாக, பல புதிய விதிகளோடு, மேற்பார்வையோடு ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஆனாலும், விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை. பல ஊர்களில் சாதிப் பெயரைச் சொல்லி மாடு அவிழ்க்கப்படுவது, வீரர்கள் களமிறங்குவது, சாதி அடையாள டி ஷர்ட்டுகளை அணிவது, சாதிப் பெருமைப் பாடல்களை ஒலிபரப்புவது போன்ற விஷயங்கள் சில இடங்களில் நேரடியாகவும், பல இடங்களில் நுட்பமான வடிவங்களிலும் இப்போதும் தொடர்கின்றன. அதனால் பாதிக்கப்பட்ட பலரின் வலியைத்தான் பிரதிபலித்திருக்கிறார் அந்த மாடுபிடி வீரர்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மாட்டுக்காரங்க என்னை அடிச்சாங்க... அசிங்கமா திட்டுனாங்க! - ஜல்லிக்கட்டு வீரர் வேதனை

“மாட்டுக்காரர்கள் தாக்கி உண்டான காயம்தான் அதிகம்!”

பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 மாடுகளைப் பிடித்து, கார் பரிசு பெற்ற தமிழரசனிடம் பேசினோம். “நான் பி.ஏ படிக்கிறேன். என் அப்பாவும் மாடு பிடிச்சவர். அஞ்சு வயசுலருந்து அப்பா, சொந்தக்காரங்க, ஊர்க்காரங்களைப் பார்த்து மாடுபிடிக்கப் பழகினேன். அதிகமான மாடுகளைப் பிடிக்கணும்கிற ஆர்வத்தோடதான் களத்துல இறங்குவேன். அதைப்போலவே, இப்ப 23 மாடுகளைப் பிடிச்சதுக்காக முதல் பரிசா கார் கிடைச்சுருக்கு. இந்தப் பெருமையைக் கொண்டாட முடியாம, ஜல்லிக்கட்டுல நடக்கிற சில சம்பவங்கள் வருத்தத்தை ஏற்படுத்துது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டுலயும் மாட்டுக்காரங்களால என்னை மாதிரி வீரர்கள் கடுமையாகத் தாக்கப்படுறோம். இப்ப பரிசு வாங்கின போட்டியிலகூட மாட்டைப் பிடிச்சதுக்கு மாட்டுக்கயிறால என்னை அடிச்சாங்க. அசிங்கமா திட்டுனாங்க. இதுக்கு முன்னால நடந்த போட்டிகள்லயும் மைதானத்துக்குள்ள வெச்சே மொத்தமாச் சேர்ந்து அடிச்சுருக்காங்க. `எங்க மாட்டைப் பிடிப்பியா?’ன்னு வெளியில வெச்சும் அடிச்சிருக்காங்க. இதையெல்லாம் இதுவரை வெளியில சொன்னதில்லை. இவ்வளவு அவமானம், காயங்களுக்குப் பின்னாலதான் இந்தப் பரிசை வாங்குறோம். ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னாலயே இந்தத் தாக்குதல் நடந்தாலும் யாரும் கண்டுக்குறதில்ல. நான் இந்த ஜல்லிக்கட்டுல கலந்துக்குவேன்னு தெரிஞ்சு மூணு மாசத்துக்கு முன்னாடியே மாடு வளர்க்கிற சில பேரு என்னிடம் வம்பிழுத்து, தாக்குனாங்க. அதைப் பெருசு பண்றதில்ல; போலீஸுக்கும் போறதில்ல. இதுக்கு மேலயும் இதை அனுமதிக்கக் கூடாது... என்னை மாதிரி யாரும் தாக்கப்படக் கூடாதுங்கறதாலதான் இப்ப இதைச் சொல்றேன். உங்க மாட்டைப் பிடிக்கக் கூடாதுன்னா... எதுக்காக மாட்டை வாடிவாசலுக்குக் கொண்டு வர்றீங்க... மாடு பிடிச்சு ஏற்பட்ட காயங்களைவிட மாட்டுக்காரங்க தாக்கி உண்டான காயம்தான் அதிகமாக இருக்கு உடம்புல” என்றார் வருத்தமாக.

மாட்டுக்காரங்க என்னை அடிச்சாங்க... அசிங்கமா திட்டுனாங்க! - ஜல்லிக்கட்டு வீரர் வேதனை

விடுதலைச் சிறுத்தைகள் இளைஞரணி மாநில நிர்வாகி மாலின், “நாம் என்னதான் தமிழர் பாரம்பர்ய விளையாட்டு என்று ஜல்லிக்கட்டைக் கொண்டாடினாலும், அதன் பின்னால் சாதி ஆதிக்கமும், பணபலமும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. இன்றும் பல ஜல்லிக்கட்டுக் குழுக்களில் பட்டியல் சமூகத்தினரைச் சேர்க்காமலும், அதிலேயே ஒரு பிரிவினரைச் சேர்ப்பது; மற்றவர்களைப் புறக்கணிப்பது என்பதும் தொடர்கின்றன. ஜல்லிக்கட்டு நடத்தும் குழுக்களுக்கு அரசு, நிதி வழங்குகிறது. தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் நன்கொடையும், ஸ்பான்சரும் கிடைக்கின்றன. இதற்கெல்லாம் கணக்கு வழக்குகள் இல்லை. இதன் காரணமாகவே ஜல்லிக்கட்டுக்குழுப் பதவிகளைச் சிலர் விடாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதில் பணமும் அதிகாரமும் விளையாடுகின்றன. எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசே நேரடியாக நடத்த வேண்டும்” என்றார்.

இது குறித்துத் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி.ராஜசேகரனிடம் கேட்டோம். “நிகழ்ச்சியில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்றார். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசியபோது, “என்னிடம் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. நீங்கள் சொன்ன விஷயத்தை விசாரித்து, இனி ஜல்லிக்கட்டில் இதுபோல் நடக்காத வகையில் கண்காணிப்போம்” என்றார்.

மாலின், ராஜசேகரன், அனீஷ் சேகர்
மாலின், ராஜசேகரன், அனீஷ் சேகர்

அமைச்சர் பி.மூர்த்தியிடம் இது குறித்துக் கேட்டதற்கு, “மூன்று ஜல்லிக்கட்டுகளையும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். இது போன்று மாடுபிடி வீரர்கள் பாதிக்காத வகையில் மாட்டுக்காரர்களை எச்சரிப்போம். மாடுகளை விடும்போது சாதிப் பெயர் சொல்லி அறிவிக்கக் கூடாது என்றாலும், அவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்த பெயர்களை அப்படியே அறிவித்துவிடுகிறார்கள். அடுத்த ஜல்லிக்கட்டில் இது போன்ற பிரச்னைகள் எழாத வகையில் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு, `ஏறு தழுவுதல்’ என்றொரு பெயர் உண்டு. மனிதரைச் சமமாக எண்ணித் தழுவாமல், மாடு தழுவுவது நாகரிகமும் அல்ல, வீரமும் அல்ல!