Published:Updated:

சாதிக்கட்சியா காங்கிரஸ்?

சாத்தான்குளத்தில் கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
சாத்தான்குளத்தில் கே.எஸ்.அழகிரி

கட்சிக்குள் வெடிக்கும் புது கலகம்

‘‘சாதிய அடையாளத்தைத் தூக்கிப் பிடித்துத் தான் அரசியல் செய்ய வேண்டுமா, மாநிலத் தலைவரின் அறிக்கையிலேயே சாதியை அடையாளப் படுத்தலாமா, காங்கிரஸ் என்ன சாதிக்கட்சியா?’’ - ஏற்கெனவே இருக்கும் கலகங்கள் போதாது என்று காங்கிரஸ் கட்சிக்குள் சமீபத்தில் எழுந்துள்ள புதிய கலகக்குரல் இது!

சாத்தான்குளத்தில் காவல்துறை அதிகாரிகளால் ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பெயரில் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், மறைந்த இருவரின் பெயர்களுடன், `நாடார்’ என்று அவர்களின் சமூகத்தின் பெயரையும் இணைத்துப் பயன்படுத்தி யிருந்தனர். அப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சல் கிளம்பியது.

அடுத்த சில நாள்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கவும், ஆறுதல் கூறவும் சாத்தான்குளம் சென்றார் கே.எஸ்.அழகிரி. அவரின் சாத்தான்குளம் வருகைக்காக நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. அதிலும் `ஜெயராஜ் நாடார்’, `பென்னிக்ஸ் நாடார்’ என்று மீண்டும் சாதிய அடையாளத்துடன் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. இது சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்களை உருவாக்கியது. இதற்கிடையே இந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் கோபண்ணா ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார். அது, இந்த விவகாரத்தில் இன்னமும் உஷ்ணத்தைக் கூட்டிவிட்டது.

‘‘ராஜா சர் முத்தையா செட்டியார், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஷிவ் நாடார் ஆகியோரை இந்தச் சமூகம் எப்படி அழைத்ததோ அப்படித்தான் ஜெயராஜ் நாடாரும் அழைக்கப்பட்டார். அதனால்தான் தலைவர் அழகிரியின் அறிக்கையில் அவர் பெயர் அப்படிக் குறிப்பிடப்பட்டது’’ என்றதுடன், காமராஜரையும் இந்த விவகாரத்தில் இழுத்து, ‘‘முதலமைச்சராக இருந்த காலத்தில்கூட `கு.காமராஜர் நாடார்’ என்று அழைக்கப்பட்டார். பிறகு, `பெருந்தலைவர் காமராஜர்’ என்று மக்களால் நேசிக்கப்பட்டார்’’ என்று வரிசையாக அழகிரியின் அறிக்கைக்கு ஆதரவாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

கோபண்ணா - கார்த்தி சிதம்பரம்
கோபண்ணா - கார்த்தி சிதம்பரம்

இதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. ‘‘இது முற்றிலும் அபத்தமானது; ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம்’’ என்று கோபண்ணாவுக்கு ட்விட்டரிலேயே கண்டனம் தெரிவித்தார் கார்த்தி சிதம்பரம். பீட்டர் அல்போன்ஸ் மற்றும் குஷ்புவும் கோபண்ணாவின் கருத்துக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

‘‘சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்துச் சமூகங்களுக்குமான தேசியக் கட்சியாக காங்கிரஸ் தன்னை அடையாளப்படுத்திவருகிறது. அத்தகைய கட்சியின் மாநிலத் தலைவரின் அறிக்கையும், அதற்கு ஆதரவாகக் கட்சி நிர்வாகியின் பதிலும் ஏற்புடையதா?’’ என்ற விவாதங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளன.

கார்த்தி சிதம்பரத்திடம் இது குறித்துக் கேட்டோம். ‘‘காங்கிரஸ் கட்சி கொடுக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதிலும் இது போன்று சாதியை அடையாளப்படுத்தக் கூடாது. சாதியே இந்தியாவின் சாபக்கேடு. கோபண்ணாவின் விளக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த தலைவர்களின் பெயர்களுடன், சாதி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது இருந்த நிலை இப்போது இல்லையே... அன்று சாதிப் பெயரோடு பயணித்தவர்களின் வாரிசுகள், இப்போது சாதிப் பெயரைப் பயன்படுத்துவதில்லையே... எனவே, இதை காங்கிரஸ் கட்சியின் தலைவரே செய்திருந்தாலும் தவறுதான். பென்னிக்ஸ் கல்லூரியில் சேரும்போது `நாடார்’ என்ற பெயரோடா பதிவு செய்தார்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

கே.எஸ்.அழகிரியிடம் பேசினோம். ‘‘காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் `ஜெயராஜ் நாடார்’ என்று குறிப்பிட்டிருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில்தான் எங்கள் அறிக்கையில் பெயர்களை அப்படிப் பயன்படுத்தியிருந்தோம். அவரது ஊரிலும் விசாரித்தபோது, அவரை `ஜெயராஜ் நாடார்’ என்றுதான் அழைத்துள்ளனர். நாங்களாக அப்படி அவருக்குப் பெயர் வைக்கவில்லை. உதாரணமாக, `கிருஷ்ணய்யர்’ பெயரை நாமா அவருக்கு வைத்தோம். பலரும் தங்கள் பெயருடன் சாதியை இணைத்து வைத்துள்ளனர். இதுபோன்ற வழக்கம் இந்தியாவில் பல இடங்களிலும் உள்ளது. ‘சாதி அடையாளம் இல்லை’ என்று நாம் சொன்னாலும், நம் ஊரில் சாதிக் கட்சிகள் இருக்கின்றனவே... கட்சிகளில் சாதி பார்த்துத்தான் சீட்கூட வழங்குகின்றனர்.

சாத்தான்குளத்தில் கே.எஸ்.அழகிரி
சாத்தான்குளத்தில் கே.எஸ்.அழகிரி

அதே நேரம், எங்கள் கட்சியினரே இது குறித்து விமர்சிப்பதற்கும், உட்கட்சி விவகாரத்துக்கும் நான் இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை. இறந்தவர்களின் சாதியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அடையாளப்படுத்தவில்லை. அவர்கள் ஊரில் அழைப்பதையே நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை’’ என்றார்.

ஆனால், `சாதிப் பெயரைக் குறிப்பிட்டதைத் தவிர்த்திருக்கலாம்’ என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலையாக உள்ளது!