அரசியல்
Published:Updated:

பிரான்மலைக்கு பேராபத்து!

பிரான்மலை
பிரீமியம் ஸ்டோரி
News
பிரான்மலை

வேட்டையாடப்படுகிறதா ‘வேள்பாரி’யின் மலை?

தமிழ்ப் பண்பாட்டின், கொடைத்தன்மையின் பேரடையாளம் பாரி! முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் ஆட்சிபுரிந்த `பறம்புமலை’ என்று நம்பப்படும் பிரான்மலைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில், சிங்கம்புணரிக்கு அருகே பிரான்மலை அமைந்துள்ளது. பெரும்புலவர் கபிலரால் புகழ்ந்து பாடப்பெற்றதுபோலவே, 2,450 அடி உயரத்துடன் பிரமாண்டமாக நிற்கிறது பறம்புமலை. மதுரை மாவட்டத்தில் சமணக் குகைகள் அமைந்திருந்த மலைகளுக்கு, கல்குவாரி மாஃபியாக்களால் ஏற்பட்ட சோக முடிவு பிரான்மலைக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையைச் சமூக ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பிரான்மலைக்கு பேராபத்து!

இயற்கை வளம் மிகுந்த பிரான்மலையில், பல நூறு ஆண்டுகளாகச் சுரந்துவரும் வற்றாத சுனைகள் நம்மை பிரமிக்கவைக்கின்றன. மலையுச்சியில் இறைநேசர் ஷைகு அப்துல்லாவின் சமாதி அமைந்திருக்கிறது. அதன் அருகிலேயே கொடுங்குன்றநாதர் ஆலயம் அமைந்திருக்கிறது. சமய வேறுபாடின்றி, அனைத்துத் தரப்பு மக்களும் நல்லிணக்கத்துடன் வழிபடும் தலமாக விளங்குவது பிரான்மலையின் கூடுதல் சிறப்பு. அரிய வகைத் தாவரங்கள், மலர்கள், பறவை இனங்கள், நாட்டு மரங்கள், விலங்குகள் என பல்லுயிர்ச் சூழல் நிலவும் இயற்கையின் மடியாக மிஞ்சியிருக்கிறது பிரான்மலை. ‘‘இவ்வளவு சிறப்புகள்கொண்ட பிரான்மலைக்குத்தான் சிலர் வேட்டுவைக்கிறார்கள்’’ என்று சிவகங்கை மாவட்ட மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

‘பரம்புமலை பாதுகாப்பு இயக்க’த்தின் ஒருங்கிணைப்பாளர் ச.மீ.இராசகுமாரிடம் பேசினோம். ‘‘எல்லா மலைகளும் அரசாங்கத்தின் சொத்துகள். ஆனால், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பிரான்மலையைத் தனிநபர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்ல, மலையைச் சுற்றியுள்ள குன்றுகளைத் தகர்த்து, கனிம வளங்களை எடுத்துக் காசாக்குகிறார்கள். இதனால் மலையின் அஸ்திவாரம் சிதைந்து, இயற்கைப் பேரிடர் ஏற்படக்கூடிய ஆபத்தானநிலை உருவாகியிருக்கிறது. இங்குள்ள காடுகளில் வசிக்கும் தேவாங்குகள், நரிகள், மான்கள், மலைப்பாம்புகள் ஆகியவை அருகிலுள்ள கிராமங்களை நோக்கிப் படையெடுக்கும் நிலை வந்துவிடக் கூடாது” என்றார் வேதனையுடன்.

பிரான்மலைக்கு பேராபத்து!

தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த கர்ணனிடம் பேசியபோது, ‘‘பிரான் மலையில் கல்குவாரி அமைத்து, மலையை சுக்குநூறாக உடைத்துக்கொண்டிருக் கிறார்கள். செல்வாக்குமிக்க ஒரு ‘பெரிய’ மனிதரின் பெயரில் பட்டா இருப்பதால், இதைத் தட்டிக் கேட்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். `இது தொடரக் கூடாது. இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். ‘பிரான்மலையை உடைக்கவில்லை. அருகிலுள்ள குன்றுகளைத்தான் உடைக்கிறோம்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள். அந்தக் குன்றுகள்தான் மலையின் அஸ்திவாரம். அஸ்திவாரத்தைச் சிதைத்துவிட்டால், மலையின் நிலை என்னவாகும்? நாங்கள் இந்த அநியாயத்தைத் தொடரவிட மாட்டோம்.’’ என்றார்.

‘பறம்பு மலையைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ‘நாம் தமிழர்’ கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதியிடம் பேசினோம். ‘‘பிரான்மலையில், மலை மற்றும் அதன் அடிவாரத்தில் 480 ஏக்கருக்கு மேல் தனியாருக்குப் பட்டா கொடுத்துள்ளனர். அந்தப் பகுதியில்தான் 50-60 அடி ஆழத்துக்கு குவாரி செயல்படுகிறது. பிரான்மலையைப் பாதுகாக்கும் வகையில், மலைப்பகுதியில் சர்ச்சைக்குரிய பட்டாக்களை ரத்துசெய்து, மலையை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்றார்.

பிரான்மலைக்கு பேராபத்து!

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் தரப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான இராம லிங்கத்தைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ‘‘எங்கள் முன்னோர்கள், மன்னர் காலத்திலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் பாரம்பர்யமாக இங்கு வாழ்ந்துள்ளனர். சுற்றுவட்டார மக்களுக்கு எங்கள் முன்னோர்கள் உதவிகள் செய்ததால், எங்கள் பங்காளிகளுக்கு இந்தப் பகுதி பட்டா எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மலையடி வாரத்தின் அருகிலுள்ள மண் குன்றில், கல்குவாரி அமைக்க, குத்தகைக்குக் கொடுத்துள்ளோம். அதுவும், உரிய அரசு அனுமதியுடன்தான் நடைபெறுகிறது. அதற்கும் பிரதான மலைக்கும் சம்பந்தமில்லை. யாரோ சிலர் பொய்க் குற்றம் சாட்டி பிரச்னை செய்கிறார்கள்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் பேசினோம். ‘‘பிரான்மலை அடிவாரத்தில் கல்குவாரி அமைப்பதற்கு 2017-ம் ஆண்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி அளித்துள்ளார். தற்போது குவாரி செயல்படுவது குறித்து தாசில்தார் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, விதிமீறல் இருந்தால் குவாரி உரிமத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்த சம்பிரதாயமான பதில்கள் போதாது; உடனடி நடவடிக்கை அவசியம். கீழடி போன்ற மகத்தான வரலாற்று ஆதாரங்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஒரு தமிழ் வரலாற்று அடையாளத்தை, இயற்கைச் செல்வத்தை அழிக்க அனுமதிக்கலாமா?