
காவு வாங்கும் ஃபுளோரைடு பிரச்னை... சோகத்தில் காவிரிக் கரையோர கிராமங்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி கடந்துசெல்லும் கிராமங்களில் ஒன்று வண்ணாரப்பேட்டை. பெயரில் மட்டுமே வண்ணம் பூசியிருக்கிறது கிராமம். மக்களின் முகத்தில் உற்சாகம் இல்லை... “என் கணவர், மாமனார், கொழுந்தனாரு மூணு பேருமே சிறுநீரக பாதிப்பால அடுத்தடுத்து இறந்துட்டாங்க. சொத்து பத்தெல்லாம் வித்து மருத்துவம் பார்த்தும் காப்பாத்த முடியலை. குடும்பமே அநாதையா நிக்குது!” - கண்ணீர்வழியப் பேசுகிறார் வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் மேகலா. ஒரு கண்ணீர்த்துளி உதாரணம் மட்டுமே இது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 30-க்கும் அதிகமான கிராமங்களின் நிலையும் கிட்டத்தட்ட இப்படிதான் இருக்கிறது. பலரும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதுடன், பலர் இந்த நோயால் இறந்துவிட்டார்கள். இன்னும் பலர் சிகிச்சைக்காக வீட்டையும் நிலத்தையும்கூட விற்று மருத்துவமனையில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்!

திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட மேலவெளி, வண்ணாரப் பேட்டை, ஆலக்குடி, கல்விராயன் பேட்டை, பிள்ளையார் நத்தம், சீராளூர் உள்ளிட்ட 14 ஊராட்சிகளிலுள்ள 30-க்கும் அதிகமான கிராமங்களில்தான் மக்கள் பலருக்கும் சிறுநீரக பாதிப்புகள் இருக்கின்றன. இந்தத் தகவல் நம் காதுக்கு வந்தவுடனேயே அந்த கிராமங்களுக்கு சென்றோம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தஞ்சாவூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கண்ணன், இது தொடர்பான விவரங்களை எடுத்துச் சொன்னார்...
‘‘காவிரியின் கிளை ஆறுகளான கல்லணைக் கால்வாய், வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. குடிநீர்த் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாததால், நிலத்தடி நீரையே பொதுமக்கள் குடிக்கவேண்டியிருக்கிறது. ஆனால், நிலத்தடி நீர் குடிக்க முடியாத அளவுக்கு உப்புக் கரிக்கிறது. அதனால், நிலத்தடி நீரில் என்ன பிரச்னை என்பதை ஆய்வுசெய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இதையடுத்து, நிலத்தடி நீரை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அதில் அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு கலந்து, குடிக்கத் தகுதியற்றதாக மாறியிருப்பது தெரியவந்தது. காவிரி கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் எத்தனையோ மாவட்டங்களுக்குக் குடிநீர் செல்கிறது. ஆனால், ஆற்றுக்கு அருகிலேயே வசிக்கும் எங்களுக்கு நல்ல தண்ணீருக்கு நாதியில்லை. இதனால், ஒவ்வொரு கிராமத்திலும் 20 பேருக்குக் குறையாமல் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். குடும்பத் தலைவரை இழந்ததால், பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன” என்றார் வேதனையுடன்.

வண்ணாரப்பேட்டை கிராமத்தில் ஒரு பாத்திரத்தில் பிடித்துவைத்திருந்த உப்புபடிந்த தண்ணீரை நம்மிடம் காட்டிய தெய்வசிகாமணி, “தினமும் நாங்க இதைத்தான் குடிக்கிறோம். குடிதண்ணிக் குழாயில வர்ற தண்ணியை ராத்திரி பாத்திரத்துல பிடிச்சுவெச்சு மறுநாள் பார்த்தா, அடிப்பகுதியில உப்பு படர்ந்திருக்கும். சில நேரத்துல பாத்திரத்தோட நிறமே மாறிடும். அதிகாரிகள்கிட்ட இது பத்தி முறையிட்டதுக்கு சுத்திகரிப்பு மெஷின் வெச்சுத் தர்றதா சொன்னாங்க. இதுவரைக்கும் அதைச் செய்யலை. இதனால எங்க ஊர்ல மட்டுமே சிறுநீரக பாதிப்பால சுமார் 30 பேர் இறந்துட்டாங்க. இப்பக்கூட பாருங்க... இங்க சிவக்குமார்ங்கிற விவசாயிக்கு வாரம் ஒரு தடவை டாயாலிசிஸ் செய்யணும். ஆனா, பணம் இல்லாம அல்லாடுறார்’’ என்றார் வருத்தத்துடன்!
கல்விராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணியம்மாளின் கணவர் கிளமண்ட் ராஜ் சமீபத்தில் இதே பிரச்னையால் இறந்துவிட்டார்... இன்னும் அந்தச் சோகத்திலிருந்து மீளாதவர் நம்மிடம், ‘‘நல்லா திடகாத்திரமா இருந்த என் புருஷன் ஆறு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு படுத்த படுக்கையாகிட்டார். டாக்டருங்ககிட்ட காட்டினதுக்கு கிட்னி கெட்டுப்போயிடுச்சுனு சொல்லிட்டாங்க. எங்க சக்திக்கு மீறி செலவு செஞ்சும், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இறந்துட்டார். எங்களுக்கு வேற எந்த வருமானமும் இல்லை. கல்யாண வயசுல இருக்குற பொண்ணை எப்படிக் கரையேத்துவேன்னு தெரியலை’’ என்றபடி அழத் தொடங்கிவிட்டார்.
அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் குடும்பமும் பரிதாப நிலையில் தவிக்கிறது. ‘‘உப்புநீர் பிரச்னையால எங்க வீட்டுல மட்டும் நாலு பேருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டிருக்கு. சிறுநீரகக்கல், முழங்கால் வலினு தினமும் ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சுக் கிட்டிருக்கோம். வீட்டுல சிரிச்சுப் பேசியே பல மாசம் ஆச்சுங்க” என்றார் கண்ணீர் மல்க!

மேற்கண்ட பிரச்னைகளை திருவையாறு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான துரை.சந்திரசேகரனிடம் எடுத்துச் சென்றோம். ‘‘எனது தொகுதியின் மிகப்பெரிய பிரச்னை இது. நிலத்தடி நீரைக் குடிநீர் வாரியம் மூலம் ஆய்வு செய்தபோது ஃபுளோரைடு மற்றும் உப்பு அதிக அளவு கலந்திருப்பது தெரியவந்தது. கடந்த ஆட்சியின் போதே, சட்டமன்றத்தில் இந்தப் பிரச்னையைப் பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். இப்போது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கவனத்துக்கும் இதை எடுத்துச் சென்றிருக்கிறேன். கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்கீழ், கொள்ளிடம் ஆற்றில் போர்வெல் அமைத்து, பாதிக்கப்பட்டுள்ள 30 கிராமங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் கொண்டுவருவதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. விரைவில் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்’’ என்றார் நம்பிக்கையுடன்.
குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதுடன், சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவோருக்கு மருத்துவச் சிகிச்சையும், உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டியது அரசின் கடமை!