மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முயற்சி உடையாள் 8: புகைப்படக் கலையில் புகழ்பெறலாம்...

அம்ரிதா
பிரீமியம் ஸ்டோரி
News
அம்ரிதா

- வழிகாட்டுகிறார் செலிபிரிட்டி போட்டோகிராபர் அம்ரிதா

பெண்கள் கலைநயம் மிக்கவர்கள். ஆனாலும் கலைநயம் தேவைப்படுகிற போட்டோகிராபி துறை சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்களுக்கானதாகவே இருந்தது. வெடிங் போட்டோகிராபி, ஃபுட் போட்டோகிராபி, வைல்டுலைஃப் போட்டோகிராபி என புகைப்படக் கலையின் பரிமாணங்கள் பரந்துவிரியத் தொடங்கியதும், இத்துறையில் கால்பதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. போட்டோகிராபராக தடம்பதிக்க விரும்பும் பெண்கள் தமக்கான அடையாளத்தை உரு வாக்குவது முதல் சவால்களைக் கையாண்டு, வெற்றிபெறுவது வரை வழிகாட்டுகிறார், பேபி போட்டோகிராபராக எட்டு ஆண்டுகள் அனுபவமுள்ள அம்ரிதா.

ஹாபியா... பிசினஸா?

``போட்டோகிராபி என்பது உங்கள் ஹாபியா அல்லது தொழிலா என்பதை முதலில் முடிவுசெய்யுங்கள். ஹாபி என்றால் பிரச்னை இல்லை. பொதுவாக ஆண்கள் போட்டோகிராபியை தேர்வு செய்தால், அவர்கள் கேமராவை காதலிப்பவர்கள் என்றும், பெண்கள் என்றால் ஹாபிக்காக போட்டோகிராபிக்குள் வந்திருக்கிறார்கள் என்றும் ஒரு பார்வை இப்போதுவரை சமூகத்தில் இருக்கிறது. புகைப்படம் எடுக்க என்னை அணுகுபவர்கள், பெண் என்பதற் காகவே கட்டணத்தைக் குறைத்துக் கேட்டிருக் கிறார்கள். நான் நிர்ணயித்துள்ள கட்டணம் என் திறமைக்கானது என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருந்திருக்கி றேன். கேமரா என்பது கருவியாக இருக்கலாம். ரசனை, என்பது நம் உணர்வு. லென்ஸுக்கு, ஆண், பெண் பேதமெல்லாம் தெரியாது இதனை மனதில் நிறுத்தி கட்டணத்தில் எப்போதும் கறாராக இருங்கள்.

முயற்சி உடையாள் 8: புகைப்படக் கலையில் புகழ்பெறலாம்...

பயிற்சியும் முயற்சியும்

கேமராவை கையில் எடுத்ததும், வாய்ப்புகள் குவிந்து நீங்கள் சம்பாதித்து விடமுடியாது. ஏற்கெனவே போட்டோகிராபி செய்பவர் களிடம் சில மாதங்கள் உதவியாளராகப் பயிற்சி பெறலாம். தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆராக வேலை செய்த நான், கேமரா மீதான ஆர்வத்தால் தோழியிடம் வெடிங் போட்டோகிராபியை கற்றுக்கொண்டேன். அனுபவங்களைப் பெற்ற பின், பேபி போட்டோகிராபி என்பதை என்னுடைய ஸ்பெஷலைசேஷனாக தேர்வு செய்தேன். போட்டோகிராபி என்பது நம் ரசனைக்கு ஏற்ப மாறுபடக்கூடியது என்றாலும், ஓரிடத்துக்குச் செல்லும் முன் ரெஃபரன்ஸ் படங்களைப் பார்க்க வேண்டும். அவற்றை அப்படியே காப்பி செய்யாமல், உங்களின் கற்பனைத்திறனைச் சேர்த்து புகைப்படம் எடுக்க வேண்டும். நீங்கள் எடுத்த புகைப்படம் சிறப்பாக இருக்கிறது என்று திருப்தி கொள்ளா மல், வெவ்வேறு கோணங்களில் முயற்சி செய்யும் ஆர்வம் உங்களுக்குள் இருக்க வேண்டும். அதே நேரம் கேமரா முன்பு நிற்பவர்களின் நேரத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தொடர் பயிற்சி மட்டுமே உங்களைத் தனித்துவமான போட்டோ கிராபராக காட்டும்.

ஸ்மார்ட்டாக யோசியுங்கள்

ஆர்வம் இருந்தாலும், போட்டோகிராபியை தேர்வுசெய்ய பல பெண்கள் தயங்குவதற்கு முக்கிய காரணம், முதலீடு. கேமரா, லைட், லென்ஸ், ஷூட்டுக்கான பொருள்கள் என அதிகமான செலவுகள் இருக்கும். நான் என் முந்தைய வேலையில் சேமித்த பணத்தில் முதல் கேமராவை வாங்கினேன். புதிய கேமரா வாங்க முடியாத வர்கள் நல்ல நிலையில் இருக்கும் செகண்டு ஹேண்டு கேமராவை வாங்கலாம். லென்ஸ், லைட் இவற்றையெல்லாம் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். எடுத்த உடன் ஸ்டூடியோ செட்டப் பற்றி யோசிக்காமல், அவுட் டோர் ஷூட், வாடகை இடங் களைத் தேர்வு செய்யலாம். கூடுமானவரை செலவைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். எடிட்டிங், டிசைனிங், பிரின்டிங் என போட்டோகிராபி சார்ந்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டு களத்தில் இறங் கினால், குறைந்த முதலீட்டில் போட்டோகிராபி கனவு சாத்தியமே.

பொறுப்பு முக்கியம்

போட்டோகிராபி துறையில் நம்பிக்கை மிக மிக முக்கியம். யாரை புகைப்படம் எடுத்தாலும், அவர்களின் அனுமதி இல்லா மல் அவர்களின் புகைப்படத்தை வேறு எங்கும் பகிராதீர்கள். புகைப்படத்துக்கான எடிட்டிங், பிரின்டிங், ஆல்பம் மேக்கிங் போன்ற காரணங்களுக்காக மற்றவர்களை அணுகுகிறீர்கள் என்றால், வேலைக்காக நீங்கள் கொடுக்கும் புகைப்படத்தை வேறு எங்கும், எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று எழுத்துபூர்வமான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். மேலும் எப்போதும் ஒரு பேக் அப் வைத்துக்கொள்வது நல்லது. புகைப்படம் எடுக்கும்முன், வாடிக்கையாளர்களின் தேவை என்ன, எந்த நிகழ்வு முக்கியம் என்பதை முன்பே கேட்டுத் தெரிந்துகொண்டால் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலும்.

பயணம்... பாதுகாப்பு... பிளானிங்

வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். இதுபோன்ற சூழலை உங்கள் குடும்பத்தினருக்கு முன்பே புரியவைப்பது நல்லது. எந்த ஊருக்குச் செல்கிறீர்கள், எங்கு தங்கப்போகிறீர்கள் என்பதை முன்பே திட்டமிட்டு, நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்களை செக் லிஸ்ட் போட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் களையே தங்கும் விடுதிகளை புக் செய்யச் சொல்லலாம். அவர்கள் புக் செய்துள்ள இடம் பற்றி ஆன்லைன் ரெவ்யூக் களையும் ஒரு முறை செக் செய்துகொள்ளுங்கள். நிகழ்ச்சி முடிந்த பின்பு இருப்பிடம் திரும்ப பாதுகாப்பான போக்கு வரத்து வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதை முன்பே தெரிவித்து விடுவது நல்லது.

அம்ரிதா
அம்ரிதா

சோஷியல் மீடியாவில் சுய விளம்பரம்

நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் அடிக்கடி பதிவிடுவது நல்லது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை அவர்களின் அனுமதி பெற்று, டேக் செய்வது கூடுதல் ப்ளஸ். உங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் உங்களின் போட்டோகிராபி குறித்த தெளிவான விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள மெயில் ஐடி, தொலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். அந்த எண் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

நோ டென்ஷன்

போட்டோஷூட்டின்போது, ‘இப்படி போட்டோ எடு, அப்படி போட்டோ எடு’ என வாடிக்கையாளர்களின் உறவினர்கள் நம்மை நிர்பந்திப்பார்கள். அதற்காக டென்ஷனாக கூடாது. வெடிங் போட்டோகிராபி, ஈவென்ட் போட்டோகிராபி தவிர, பெரும்பாலான போட்டோஷூட்டுக்கான நேரத்தை நீங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மதம் சார்ந்த திருமண நிகழ்ச்சிகள், மெஹந்தி ஃபங்ஷன் போன்று மணப் பெண்ணுடன் தொடர்புடைய சில நிகழ்ச்சிகள், பேபி போட்டோகிராபி போன்றவற்றில் ஆண்களைவிட பெண் போட்டோகிராபர்களையே பலரும் விரும்புகிறார்கள்.

இது உங்களுக்கான ப்ளஸ்.''

- சாதிப்போம்...