கட்டுரைகள்
Published:Updated:

மருத்துவர்கள் போன் மட்டும்தான் டார்கெட்! - விநோத செல்போன் திருடன்!

மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவமனை

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சொத்துப் பிரச்னை காரணமாக முனியாண்டி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்

திருடுபவர்களில் சில ‘ஸ்பெஷலிஸ்ட்டு’கள் உண்டு. பீரோவை உடைத்துத் திருடுவது, சுவரில் ஓட்டை போட்டுத் திருடுவது, விலையுயர்ந்த செல்போன்களை மட்டும் திருடுவது எனத் திருட்டில்கூட ஒரே பொருள், ஒரே மாடலில் திருடுபவர்கள் ஏராளம். ஆனால், பழிவாங்குவதற்காக மருத்துவர்களின் செல்போன்களைத் திருடுபவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... சென்னை காவல்துறையிடம்தான் அப்படியொரு விநோத திருடன் சிக்கியிருக்கிறார்.

நவம்பர் 29-ம் தேதி சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், வார்டு எண் 111-ல் பெண் மருத்துவர் ஒருவர் நோயாளிகளைப் பரிசோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது மேஜையில் வைத்திருந்த அவரது விலையுயர்ந்த ஐபோன் திருடு போய்விட்டது. அன்றைய தினமே, அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு மருத்துவர், ஒரு செவிலியரின் செல்போன்களும் திருடப்பட்டிருந்தன. இது குறித்து, மருத்துவமனையிலுள்ள காவல் நிலையத்தில் மருத்துவர்கள் புகார் அளித்தனர்.

மருத்துவர்கள் போன் மட்டும்தான் டார்கெட்! - விநோத  செல்போன் திருடன்!

சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸ் ஆய்வுசெய்தபோது, போலீஸாருக்குப் பரிச்சயமான வியாசர்பாடி முனியாண்டி என்பவர்தான் இந்தத் திருட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, இதே ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவர் ஒருவரின் செல்போனைத் திருடிய வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்ற முனியாண்டி, சமீபத்தில்தான் வெளியில் வந்திருந்தார். முனியாண்டியைக் கைதுசெய்த போலீஸார், “ஏன் மருத்துவர்களின் செல்போனை மட்டுமே குறிவைக்கிறாய்?” என விசாரிக்க, அதற்கு முனியாண்டி சொன்ன காரணம்தான் ருசிகரம்.

இந்த விசாரணை குறித்து நம்மிடம் பேசிய போலீஸார் சிலர், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சொத்துப் பிரச்னை காரணமாக முனியாண்டி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். அதனால் அவருக்கு உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவரின் ஒரு கைவிரல் மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் முனியாண்டியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர். தனது விரல் பறிபோனதற்கு மருத்துவர்கள்தான் காரணம் என்று மருத்துவர்கள்மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார் முனியாண்டி. இதனால், மருத்துவர்கள், செவிலியர்களின் செல்போன்களை மட்டும் குறிவைத்துத் தொடர்ந்து திருடிவந்திருக்கிறார்.

சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பல்வேறு மருத்துவமனைகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட செல்போன்களைத் திருடியிருக்கிறார். மேலும், தமிழகம் தாண்டி ஆந்திராவிலுள்ள திருப்பதி அரசு மருத்துவமனைகளிலும் முனியாண்டி தனது கைவரிசையைக் காட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் செல்போன்களைத் திருடியிருக்கிறார்.

முனியாண்டி
முனியாண்டி

முனியாண்டி, மற்ற நோயாளிகளைப்போலவே கையில் ஒரு நோட்புக்குடன் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவார். உடலில் தீக்காயங்களுடன் இருப்பதால், முனியாண்டியின் மீது யாருக்கும் பெரிதாக எந்தச் சந்தேகமும் வரவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பணியிலுள்ள மருத்துவர்களிடம், நோயாளிபோலவே சிகிச்சை குறித்துப் பேசுவார். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் அசரும் நேரம் பார்த்து அவர்களின் செல்போனைத் திருடிக்கொண்டு அங்கிருந்து நடையைக் கட்டிவிடுவார். மருத்துவர்களிடம் திருடிய விலையுயர்ந்த செல்போன்களை, சென்னை பர்மா பஜார் போன்ற பகுதிகளில் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை வந்த விலைக்கு விற்றிருக்கிறார். நாங்கள் விசாரித்தபோது, ‘எனது விரல்களை அகற்றியதால் மருத்துவர்கள், செவிலியர்களை எனக்குப் பிடிக்காது. அவர்களின் செல்போன்களை மட்டுமே திருடுவேன். பொதுமக்கள் பாவம். அவர்கள் செல்போன் மீது கைவைக்க மாட்டேன். செல்போன்களை விற்றுக் கிடைக்கும் பணத்தில், குடித்து சந்தோஷமாக இருப்பேன்’ என்று எங்களையே திகைக்கவைத்தார் முனியாண்டி” என்றனர்.

முனியாண்டியிடமிருந்து செல்போன்களை விலைக்கு வாங்கிய மருது என்பவரை, காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அதோடு, முனியாண்டி கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர் திருடி விற்பனை செய்த மொபைல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யும் முயற்சியை மேற்கொண்டுவருகிறார்கள்.

வித்தியாசமான திருடன்தான்!