பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நூற்றாண்டின் குரல்!

அம்பேத்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பேத்கர்

க.வீரபாண்டியன் ஐ,ஏ.எஸ்; ஓவியம்: ரவி பெல்லட்

ந்திய அரசியலில் ‘மூக்நாயக்’காகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு நுழைந்தவர் பாபாசாகேப் அம்பேத்கர். ‘மூக்நாயக்’ என்றால் குரலற்றோரின் தலைவர். 1920ஆம் ஆண்டு ஜனவரி 31, அம்பேத்கர் ஆரம்பித்த `மூக்நாயக்’ முதல் இதழ் வெளிவந்தது. அந்தவகையில் இது மூக்நாயக்கின் நூற்றாண்டு.

நூற்றாண்டின் குரல்!
நூற்றாண்டின் குரல்!

`இந்த உலகம் ஊமைகளின் குரலைக் கேட்பதில்லை’ என்னும் துக்காராமின் கூற்றை இதழின் முகவுரையைப்போல அம்பேத்கர் அமைத்திருந்தார். மூக்நாயக் இதழின் வழியாக உலகத்தின் செவிகள் அதிரும்படியாக குரலற்றோரின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது என்பதுதான் அதன் மறைபொருளாக இருந்தது.

காந்தியின் வருகைக்கு முன்பு காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களாக இருந்த பாலகங்காதர திலகர், அன்னிபெசன்ட் முதலானோரின் பங்கேற்பில் நாட்டு விடுதலைக்கான போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்தன. 1920களில் காந்தியின் வருகைக்குப் பிறகு விடுதலைக்கான போராட்டங்கள் அதன் வடிவத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் பெரும் மாறுதலுக்குட்பட்டு முக்கியத் திருப்பத்தை அடைந்திருந்தன. இத்தகைய சூழல் நிலவிக்கொண்டிருந்த காலத்தில்தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயர்கல்விக்காகச் சென்ற அம்பேத்கர் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர முடியாமல் 1917-ல் இந்தியா திரும்பினார். திரும்பியதும் இந்திய தேசமே ஒரு பாதையில் சென்றுகொண்டிருந்ததைக் கூர்ந்து நோக்கினார்.

ஆனால், சுயராஜ்ஜியம், தேச விடுதலை ஆகிய அரசியல் கோரிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 20 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள்தொகையைக்கொண்ட ஆறு கோடி தீண்டப்படாத மக்களுக்கான சமூக விடுதலையையும், அரசியல் உரிமைகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை நுட்பமாகக் கவனித்துக் கேள்விகள் எழுப்பினார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் 1917ஆம் ஆண்டில் சவுத்பரோ குழுவினரிடம் அறிக்கை அளிப்பதன் மூலம் தேசிய அளவில் தன் முதல் அரசியல் நடவடிக்கையைத் தொடங்குகிறார் அம்பேத்கர். அதைத் தொடர்ந்து அவர் முன்னெடுத்த அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை `மூக்நாயக்’ இதழ் தொடங்கியது. சாதி ஒழிப்புப் போர்க்களத்தில் அம்பேத்கர் ஏந்தி நின்ற வலிமையான அறிவாயுதம்தான் மூக்நாயக் இதழ்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

அம்பேத்கர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காரணத்தினால் இதழின் ஆசிரியராகத் தன்னைப் பதிவு செய்துகொள்ளவில்லை. இருப்பினும், இதழின் தலையங்கங்களையும், பெரும்பாலான கட்டுரைகளையும் அவர்தான் எழுதினார். மூக்நாயக்கின் 19 இதழ்களிலும் வெளிவந்த கருத்துகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் 1920-ல் நிலவிய அரசியல் சூழலுக்கேற்ப அம்பேத்கர் முன்னெடுத்த நான்கு கருத்துகளை முதன்மையாகக் குறிப்பிடலாம். முதலாவதாக, அம்பேத்கர் வலியுறுத்திய சமூக விடுதலை என்பது பார்ப்பனிய மேலாதிக்கத்திலிருந்து பார்ப்பனர் அல்லாதார் மற்றும் தீண்டப்படாதார் என்ற இரு சமூகத்தினரையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தினார், இரண்டாவதாக, தேச விடுதலை என்னும் அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்காகக் காட்டும் அதே தீவிரத்தை இந்து மதத்தின் சாதியமைப்பும், ஆதிக்கச் சாதிகளும் தீண்டப்படாத மக்களின் மீது நிகழ்த்தும் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்கவேண்டிய சமூகப் பிரச்னைகளின் மீதும் காட்ட வேண்டுமென அழுத்தம் கொடுத்தார்.

மூன்றாவதாக, சுயராஜ்ஜியம் யாருக்கானது, யாருடைய நன்மைக்கானது என்னும் கேள்விகளை எழுப்பினார். நான்காவதாக, சுயாட்சியைவிட நாட்டுக்குத் தேவையானது நல்லாட்சிதான் என்று வாதிட்டார். நல்லாட்சியின் பண்புகளாகத் தனிமனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சம உரிமைகள், சம வாய்ப்புகள் போன்றவற்றை அம்பேத்கர் அடையாளம் காட்டினார். குரூரமான முறையில் இயங்கும் இந்தியச் சாதிக் கட்டமைப்பை எளிதாகப் புரிய வைக்கும் அம்பேத்கரின் புகழ்பெற்ற மேற்கோளான ‘சாதியமைப்பு பல அடுக்குமாடிக் கட்டடம் போன்றது’ என்பதை மூக்நாயக் இதழில்தான் எழுதினார். இந்த அமைப்பு கீழ் அடுக்கிலிருக்கும் திறமையுள்ளவர்கள் மேலே முன்னேறிச் செல்வதற்கு எந்தவித வாய்ப்பையும் வழங்காமல் ஒரு மாடியில் பிறந்தவன் சாகும் வரையில் அதே மாடியில் வாழும் நிர்பந்தத்தை உருவாக்குகிறது என்றார். இவ்வாறாக, அரசியல் விடுதலை என்னும் கருத்தாக்கத்தின் முன்நிபந்தனையாக சமூக விடுதலையை முன்வைத்தார்.

`மூக்நாயக்’ உள்ளிட்ட தன் இதழ்கள் அனைத்தையும் பல சிக்கல்களுக் கிடையில்தான் அம்பேத்கர் நடத்தினார். திலகர் நடத்திய `கேசரி’ பத்திரிகை மூக்நாயக் இதழ் குறித்த விளம்பரத்தைக் கூட - அதற்கான விளம்பரக் கட்டணத்தைக் கட்டிய பிறகும் - வெளியிட மறுத்துவிட்டது. மக்களிடையே பரவலாக வாசிக்கப்பெறும் புகழ்பெற்ற பத்திரிகைகள் தீண்டப்படாதவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் செய்தியாக்குவதில்லையென்றும், அவர்களின் அரசியல் கோரிக்கைகள் சாதி இந்துக்களால் நடத்தும் பத்திரிகைகளால் கவனிக்கப்படாமல் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன என்றும் ஆதங்கத்துடன் முதல் இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டு எழுதினார்.

19 இதழ்களுடன் மூக்நாயக் இதழின் ஆயுள் முடிந்துவிட்ட போதிலும் 36 ஆண்டுகளாக (ஜனவரி, 1920 - டிசம்பர், 1956) பத்திரிகையாளராக அம்பேத்கர் தன் இறுதிமூச்சு பிரியும்வரை எழுத்துப்பணியைத் தொடர்ந்தார். மூக்நாயக் இதழைத் தொடர்ந்து பகிஷ்கரித் பாரத் (விலக்கப்பட்ட இந்தியா: ஏப்ரல், 1927 - நவம்பர், 1929), ஜனதா (மக்கள், 1930 - 1956) முதலான இதழ்களையும் தொடர்ந்து நடத்தினார். 1956ஆம் ஆண்டில் அம்பேத்கர் இறப்பதற்கு முன்பு ஜனதா இதழ் ப்ரபுத்த பாரத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வார இதழாக வெளிவந்தது (விழிப்புற்ற இந்தியா: பிப்ரவரி 4, 1956 - 1960).

அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கை அனைத்துச் சமூகத்திற்குமானது. எல்லாருக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும் விழிப்புற்ற இந்தியா உருவாக வேண்டுமென்பதுதான் அவரின் வாழ்நாள் கனவு. அதனால்தான் அதுவரை ஜனதா என்ற பெயரில் வெளிவந்த இதழின் பெயரை மாற்றி விழிப்புற்ற இந்தியா என்னும் பொருள்பட ‘ப்ரபுத்த பாரத்’ என்ற பெயரில் வார இதழாக வெளியிட்டார்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

மூக்நாயக் இதழில் தொடங்கிய இக்கருத்துப் போராட்டங்களைத்தான் பின்னாள்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அரசுக் கொள்கைகளாக மாற்றினார். இட ஒதுக்கீடு என்னும் அரசியல் உரிமையை தலித் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் வழங்கும் வகையில் ‘Backward class’ என்னும் பதத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் பயன்படுத்தினார்.

அதைப் புரிந்துகொள்ளாமல் அறிவிழந்து அவரின் சிலைகளை உடைக்கும், இழிவுபடுத்தும் செயல்களைச் செய்யும் ஒவ்வொருவரும் தனக்கும் தன் நலன்களுக்கும் சேர்த்துச் சிந்தித்த மகத்தான மனிதர் அம்பேத்கர் என்பதை உணர வேண்டுமென்பதுதான் மூக்நாயக் நூற்றாண்டு நினைவூட்டும் செய்தி. இல்லையெனில், மனிதர்களைப் பிளவுபடுத்தி ஒடுக்குமுறைகளைச் செய்யும் சாதியச் சமூகமாய் நாம் தொடரும்வரை அம்பேத்கர் என்ற மூக்நாயக்கின் குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.