
விமான நிலையம் போன்ற மிக முக்கியமான இடத்தில் எப்போதுமே பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும்.
இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியிலிருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களை நீக்கிவிட்டு, தனியார் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அரசின் இந்த முடிவால் விமான நிலைய பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கந்தஹார் விமானக் கடத்தல்...
கந்தஹார் விமானக் கடத்தல் சம்பவம் பலருக்கும் நினைவிருக்கலாம். கடந்த 1999-ம் ஆண்டு, டிசம்பர் 24-ம் தேதி, மாலை 4:25 மணிக்கு நேபாளத்திலிருந்து கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி-814, கந்தஹாரில் அடுத்த நாள் தரையிறக்கப்பட்டது. இடையில் துபாயில் பெண்கள், குழந்தைகள் என 25 பேர் விடுவிக்கப்பட்டார்கள். அதோடு, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ரூபின் என்ற இளைஞரின் உடலும் துபாயில் இறக்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் கந்தஹார் தாலிபன்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, தாலிபன் அரசுடன் இந்தியாவுக்கு எந்தத் தூதரக உறவும் கிடையாது. பலகட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு வேறு வழியில்லாமல், அன்றைய வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு, மசூத் அஸார், ஒமர் சயீத் ஷேக், அகமது சர்க்கார் ஆகிய மூன்று மிக முக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விடுவிக்கச் சம்மதம் தெரிவித்தது. அந்த மூவரையும் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்த பிறகே பயணிகள் அனைவரும் மீட்டுவரப்பட்டனர். விடுவிக்கப்பட்ட இந்த மூன்று பயங்கரவாதிகளும், மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் செக்யூரிட்டி!
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, விமான நிலைய பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போதைய நிலையில், இந்தியாவிலுள்ள 65 விமான நிலையங்களில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். கடந்த 2018-19-ம் ஆண்டு, இந்தியாவிலுள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக, விமான போக்குவரத்து அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் சேர்ந்து புதிய செயல் திட்டத்தை வகுத்தன.
மேலும், விமான நிலையத்திலுள்ள சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களின் பாதுகாப்புக்கான தேவை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 3,049 இடங்களில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அந்த இடங்களுக்குத் தனியார் பாதுகாவலர்களை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து விமான நிலையத்தில் பணியாற்றும் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தற்போது விமான நிலையத்தில் பயணிகள் வரிசையை ஒழுங்குபடுத்துவது போன்ற சின்னச் சின்ன பணிகளையும் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களே செய்துவருகிறார்கள். இது போன்ற பணிகளில் மட்டுமே தனியார் பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதே சமயத்தில், தனியார் பாதுகாவலர்களும் தொழில்துறை பாதுகாப்புப்படை கட்டுப்பாட்டில்தான் இருப்பார்கள். இப்போதுபோலவே, பயணிகளைப் பரிசோதனை செய்வது உள்ளிட்ட மற்ற முக்கியப் பாதுகாப்புப் பணிகளை சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களே மேற்கொள்வார்கள்” என்றார்.

இது குறித்து முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தியாகராஜனிடம் பேசினோம். ``விமான நிலையம் போன்ற மிக முக்கியமான இடத்தில் எப்போதுமே பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும். அங்கு எப்போது வேண்டுமென்றாலும், எந்த மாதிரியான அசம்பாவிதமும் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். அதை விடுத்து தனியார் பாதுகாவலர்களை அரசு நியமித்தால் மிகப்பெரிய தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். பாதுகாப்பு குறித்து நன்கறிந்த யாருமே இந்த தனியார் செக்யூரிட்டி ஐடியாவைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த அரசு, செலவைக் குறைக்க நினைக்கிறதென்றால், டி.ஜி.ஆர் (Directorate General Resettlement) மூலம் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை இந்தப் பணியில் அமர்த்தலாம். நன்கு பயிற்சிபெற்ற அவர்களுக்கு, அனைத்துச் சூழலுக்கும் தகுந்தாற்போல் நடந்துகொள்ளத் தெரியும். அதேவேளையில் அவர்களால் ஆயுதங்களை உபயோகிக்க முடியும். மேலும், அவர்கள் கண்டிப்பாக என்றுமே இந்த நாட்டின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட மாட்டார்கள். இதை விடுத்து, தனியார் பாதுகாவலர்களை நியமித்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். தனியார் பாதுகாவலர்களை எந்தச் சூழலிலும், உள்ளே கொண்டுவரக் கூடாது” என்றார் உறுதியாக.
தீவிரவாதிகளோ, நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நினைக்கும் சமூக விரோதிகளோ வான்வழிச் சேவையைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.
சிந்தித்துச் செயல்படுமா மத்திய அரசு?