நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள தீட்டுக்கல் பகுதியில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமான 234 ஏக்கர் வனத்தில் குத்தகை அடிப்படையில் 1955-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்வு மையம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இந்த மையம் இயங்கி வந்தாலும், வனத்துறைக்குச் சொந்தமான இடம் என்பதால் சிறிய அளவிலான வளர்ச்சிப் பணிகளைச் செய்வதானாலும் தமிழக வனத்துறையிடம் உரிய அனுமதிப் பெற்ற பின்னரே மேற்கொள்ள முடியும்.

அப்படி இருக்கையில், ஆய்வு மைய வளாகத்திலிருந்த 370 யூக்காலிப்டஸ் மற்றும் சீகை மரங்களை எந்த அனுமதியும் பெறாமல் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறை பணியாளர் மற்றும் ஆய்வு மைய விஞ்ஞானிகள் சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆய்வு மேற்கொண்டதில் இதற்கு உடந்தையாக இருந்த தெற்கு வனச்சரகர் நவீன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து கைதும்செய்யப்பட்டனர்.
மரங்களை வெட்டியதற்கு இழப்பீடாக தமிழக வனத்துறைக்கு 48.98 லட்சம் ரூபாய் இழப்பு நிதி வழங்க வேண்டும் என ஆய்வுமையத்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், ஆய்வுமைய விஞ்ஞானிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனத்துறை பரிந்துரை செய்திருந்தது. இதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. இது குறித்து நமது விகடன் தளத்திலும், ஜூனியர் விகடன் இதழிலும் கட்டுரைகளை வெளியிட்டுவந்தோம்.

இந்த நிலையில், ஆய்வு மையத்தின் ஆய்வாளர்களாக இருந்த மணிவண்ணனை அஸ்ஸாமுக்கும், கண்ணனை டேராடூனுக்கும், ராஜாவை ஒடிஷாவுக்கும் பணியிட மாற்றம் செய்து மத்திய அரசின் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மையத்தின் தலைமை அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.