Published:Updated:

`8 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 77 அமைச்சர்கள்!' - மத்திய அரசின் நோக்கம் என்ன..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை ( மாதிரி படம் )

77 அமைச்சர்களைக்கொண்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு குழுக்கள் ஒவ்வொன்றிலும் 9 முதல் 10 அமைச்சர்கள் வரை இடம்பெறுவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் செயல்திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் (மாதிரி படம்)
மத்திய அமைச்சரவைக் கூட்டம் (மாதிரி படம்)

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்:

2019-ம் ஆண்டு மோடி இரண்டாவது முறை பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, நீண்டகாலம் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில், கடந்த 2021, ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை முதன்முறையாக விரிவுபடுத்தப்பட்டது. அதில், 53-ஆக இருந்த மத்திய அமைச்சரவையின் பலம் 77-ஆக அதிகரித்தது.

எட்டு குழுக்களாகப் பிரிப்பு:

இந்த நிலையில், 77 அமைச்சர்களைக்கொண்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தற்போது எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த எட்டு குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும், 9 முதல் 10 அமைச்சர்கள் வரை இடம்பெறுவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய இணை அமைச்சர் ஒருவரும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள்:

அதாவது, இந்த எட்டு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களாக, மத்திய அமைச்சர்களான ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் பூரி, அனுராக் தாகூர், நரேந்திர சிங் தோமா் ஆகியோர் இருப்பார்கள் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அமைச்சர்கள், தங்கள் அலுவலகங்களின் செயல்பாடுகள், நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மோடி - ஓம் பிர்லா
மோடி - ஓம் பிர்லா

குழுக்கள் உருவாக்கத்தின் பின்னணி:

மத்திய அமைச்சரவையின் 77 அமைச்சர்களை எட்டு குழுக்களாகப் பிரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை மாதத்திலிருந்தே நடந்துகொண்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் மோடி தலைமையில் ஐந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, அமைச்சரவைச் செயல்பாடுகள், நாடாளுமன்ற நடவடிக்கைகள், கவனத்துடன்கூடிய அமலாக்கம், தனிப்பட்ட திறன்கள், சக்திவாய்ந்த தகவல் தொடர்பு, துறைப் பணிகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்து தலைப்புகளின் கீழ், தலா ஐந்து மணி நேரமாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லோக் சபா தலைவர் ஓம் பிர்லா, ராஜ்ய சபா தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Cabinet Expansion: மத்திய அமைச்சர்கள் சிலர் ராஜினாமா; 43 பேர் இன்று பதவியேற்பு?! - பரபரக்கும் டெல்லி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழுக்கள் உருவாக்கத்தின் நோக்கம்:

2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில்கொண்டு, இப்போதே தன்னை வலிமைப்படுத்திக்கொள்ளும் வேலைகளை மத்திய பா.ஜ.க அரசு தொடங்கியிருக்கிறது. அதற்காக, கட்சியின் உட்கட்டமைப்பு தொடங்கி, அரசுத்துறைகள் வரை பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறது. அந்த வகையில், மத்திய அரசுத் துறைகளை ஒழுங்குபடுத்துவதில் தனி கவனம் செலுத்தியிருக்கிறது. ஆகவேதான், அமைச்சரவைக்குழு எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு
மத்திய அரசு

குறிப்பாக, மத்திய அரசின் ஒவ்வொரு துறையையும் முறையாகக் கண்காணித்து, குறைபாடுகளைக் களைந்து, தொழில்நுட்பரீதியாகச் செயல்பாட்டுத்திறனின் வேகத்தை அதிகரித்து, மேம்படுத்துவதற்காக இந்தப் பிரத்யேகக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தொழில்நுட்பம் தொடர்பான வளங்களை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் அடங்கிய தொகுப்பை ஏற்படுத்துவது, அதனடிப்படையில் பிரிக்கப்பட்ட எட்டு குழுக்களையும் திறம்பட வழிநடத்திச் செல்வது, முதலிய திட்டமிடல்கள் போடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், ஒவ்வொரு துறைசார்ந்த நிர்வாகத்திலும் வெளிப்படைத்தன்மை உருவாகும்; செயல்பாட்டுத்திறன் அதிகரிக்கும் என மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

குழுக்கள் செயல்படும்விதம்:

ஒவ்வோர் அமைச்சரின் அலுவலகத்துக்கும் பிரத்யேகமாக ஓர் இணையதளம் உருவாக்கப்படும். அதில் மத்திய அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், கொள்கைகள், சாதனைகள், செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெறும். துறைசார்ந்து அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள் தொடர்பாகத் தகவல் பலகை ஒன்றும் உருவாக்கப்படும். மேலும், கூட்டங்கள் நடத்துதல், கடிதத் தொடர்பை நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளும் இதில் அடங்கும். இந்தப் பணிகள் அனைத்தும் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் எட்டு குழுக்களால் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், நாட்டிலிருக்கும் அனைத்து மாநிலங்கள், மாநில அமைச்சகங்கள் மற்றும் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகங்களுடனும் இந்தக் குழுக்கள் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மோடி அமைச்சரவை  2.0
மோடி அமைச்சரவை 2.0

மத்திய அமைச்சரவையை எட்டு குழுக்களாகப் பிரித்து, அவற்றில் 9 அல்லது 10 அமைச்சர்களை உறுப்பினர்களாக அமர்த்தி, அவற்றுக்கெனத் தனியாக ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து, அவற்றின் மூலம் நிர்வாகத்திறனை மேம்படுத்த நினைக்கும் மத்திய அரசின் முயற்சி எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு