மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) என்று சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட மத்திய பிளாஸ்டிக் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் 1968ல் துவங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் இங்கு உள்ளன. இங்கு, 59.19 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு அடுக்கு உடைய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். தமிழக சுகாதர மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியமம், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், "பிளாஸ்டிக் துறை வளர்ச்சியில், சிப்பெட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் தமிழகம் வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

அத்துறைக்கு தேவையான பிளாஸ்டிக் சார்ந்த உதிரி பாகங்கள், மருத்துவத் துறைக்கு தேவையான பிளாஸ்டிக் கருவிகள், வேளாண் துறைக்கு தேவையான பொருட்கள் அனைத்திற்கும், சிப்பெட்டின் பங்களிப்பு முக்கியமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பெட்ரொ கெமிக்கல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது என்று பேசியுள்ளார். மேலும், பேசிய அவர் இத்துறையின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்தத் தொழில்நுட்ப மையத்தால் திறன் பெற்ற தொழிலாளர்கள், அதிகம் கிடைப்பார்கள் இதனால், அதிக வேலை வாய்ப்பு உருவாகும். மேலும், தென் மாநிலங்களில் அதிக சிப்பெட் மையங்களை உருவாக்கும் வகையில், தமிழகத்தில் துாத்துக்குடி மாவட்டத்தில் புதிய மையம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கர்நாடகா, குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் சிப்பெட் மையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.