புதுச்சேரி: பாஜக வேட்பாளருக்கு எதிராக 117 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை!

15 சாட்சிகள், 16 ஆவணங்கள் மற்றும் 13 வாக்குமூலங்களை உள்ளடக்கி, ஜான்குமார் மீது 117 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகையை, அரசு வழக்கறிஞர் பிரவீன்குமார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஜான்குமார், தனது சொத்துகளை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து கடந்த 2020, அக்டோபர் 1-ம் தேதி, `குமாரபாளையத்தில் 2.4 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஜே.வி.ஆர் நகரில், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகளின் விவரங்களைக் குறிப்பிடாமல் அரசையும், தேர்தல் ஆணையத்தையும் திட்டமிட்டு ஏமாற்றும் நோக்கில் ஜான்குமார் செயல்பட்டிருக்கிறார்’ என்று புதுச்சேரி போராளிகள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் செல்வமுத்துராயன் புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்யும்படி ஓதியன்சாலை காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவையடுத்து இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜான்குமார் அப்போது தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் பிரமாண பத்திரத்தில் உண்மையை மறைத்து மனுத் தாக்கல் செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது காவல்துறை.
இந்தநிலையில், அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அதையடுத்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதே காமராஜர் நகர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ஜான்குமாரும், அவரது மகன் ரிச்சர்டு நெல்லித்தொப்பு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகவும் களமிறங்கியிருக்கின்றனர்.
இந்தச் சூழலில்தான் 15 சாட்சிகள், 16 ஆவணங்கள் மற்றும் 13 வாக்குமூலங்களை உள்ளடக்கிய ஜான்குமார் மீதான 117 பக்கங்கள்கொண்ட குற்றப் பத்திரிகையை, அரசு வழக்கறிஞர் பிரவீன்குமார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இது ஜான்குமார், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.