Published:Updated:

“எதிரிக்கும் உதவிடுவதே அறம்!”

அலெய்டா குவேரா
பிரீமியம் ஸ்டோரி
News
அலெய்டா குவேரா

நான் ஒரு சாதாரண நபராகவே என்னை உணர்கிறேன். ஒரு புரட்சியாளரின் மகளாக இருப்பதால் மட்டுமே எனக்குப் பெருமை இருக்கிறது என்று எண்ணவில்லை.

``சென்னை நெகிழ வைத்திருக்கிறது. விமான நிலையத்திற்கு என்னை வரவேற்க நூற்றுக்கணக்கான தோழர்கள் வந்தனர். இங்கே நடந்த கலந்துரையாடல்கள் மூலமாக சேகுவேரா மீது தமிழக மக்கள் எவ்வளவு அன்பு வைத்துள்ளனர் என்பது தெரிந்தது. மக்களின் உரிமைகளுக்காக ஒற்றுமையாகப் போராடுகிற தலைவர்களை இங்கே பார்க்க முடிந்தது’’ என்று பரசவத்துடன் விவரிக்கிறார் அலெய்டா குவேரா. அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபப் புரட்சியில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்று, அதன்பின் பொலிவிய விடுதலைக்காகப் போராடச் சென்று உயிர் நீத்த மகத்தான புரட்சியாளர் சே குவேரா. விடுதலை வேட்கையை மக்களின் மனதில் விதைத்த மாபெரும் தலைவரின் மகளான அலெய்டா குவேரா, கடந்த வாரம் சென்னை வந்தார். விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:

‘‘அர்ஜென்டினாவில் பிறந்து கியூப விடுதலைக்குப் போராடி, பொலிவிய மண்ணில் மறைந்தார் உங்கள் தந்தை. உங்கள் தந்தையின் நாடாக எதைப் பார்க்கிறீர்கள்?’’

‘‘சே யாரையும் உயர்வு, தாழ்வு என நினைத்ததில்லை. அவரது பார்வையில் எல்லா நாட்டு மக்களும் சமம்தான். உலக மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கத்தான் போராடினார். அதனால் அவரை சர்வதேசியன் என்றே சொல்வேன்.’’

‘‘தீவிர புரட்சி, போராட்டம் என்று வாழ்ந்த உங்கள் தந்தைக்கும் உங்களுக்குமான குடும்ப உறவுகள் எவ்வாறு இருந்தன?’’

‘‘என் நினைவில் என் தந்தை எப்போதும் அன்பு மிக்கவராகவே திகழ்ந்தார். குறிப்பாக கியூபாவின் அமைச்சராக இருந்தபோது தினமும் 17 மணி நேரம் உழைத்தார். இருந்தும் ஓய்வு நேரங்களை எங்களோடுதான் செலவிட்டார். அவரை வெளியில் முரட்டுத் தனமானவராக பலரும் பார்க்கின்றனர். ஆனால் அவர் மிக மென்மையானவர். நானும் என் சகோதரன் கமிலோவும் அவரது தோள்களில் ஏறிக்கொண்டு குதிரைச் சவாரி செய்யச் சொல்லிக் கேட்போம். அவரும் சலிக்காமல் எங்களைச் சுமந்துகொண்டு வீட்டைச் சுற்றி சுற்றி விளையாட்டுக் காட்டுவார். எங்கள் தாயின் மேல் அளவு கடந்த அன்பை வைத்திருந்தார். அவருக்காக பல காதல் கவிதைகளை எழுதியுள்ளார்.’’

‘‘கியூப முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவைப் பற்றி…’’

‘‘என் தந்தை பொலிவியாவில் இறக்கும்போது எனக்கு 7 வயது. அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை எங்களிடம் சொல்லி, ஆறுதல் செய்தவர் பிடல் காஸ்ட்ரோதான். அவரை ‘தியொஸ்’ (மாமா) என்றுதான் அழைப்பேன். அவ்வாறு அழைத்தாலும் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு தந்தையாகவே இருந்தார். சொல்லப்போனால் தந்தை இல்லை என்ற எண்ணமே அவர் இருந்ததால் எங்களுக்கு எழவில்லை.’’

“எதிரிக்கும் உதவிடுவதே அறம்!”

‘‘புரட்சியாளரின் மகளாக இருந்துகொண்டு இப்போது மருத்துவராகப் பணியாற்றும் அனுபவங்கள் எப்படி இருக்கின்றன?’’

‘‘நான் ஒரு சாதாரண நபராகவே என்னை உணர்கிறேன். ஒரு புரட்சியாளரின் மகளாக இருப்பதால் மட்டுமே எனக்குப் பெருமை இருக்கிறது என்று எண்ணவில்லை. சொல்லப்போனால் பிறப்பு என்பது ஒரு மரபணு விபத்துதான் (Genetic Accident). அதற்காக நான் எப்படிப் பெருமை கொள்ள முடியும்? நான் எனது வாழ்நாளில் எப்படி வாழ்கிறேன், நல்ல மனிதராக இருக்கிறேனா என்பதில்தான் எனது பெருமை உள்ளது.

சே குவேராவின் மகள் என்பதால் மட்டும் எனக்கு எந்த முன்னுரிமையும் தரப்படவில்லை. நான் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, யாரும் எளிதில் அணுகமுடியாத குக்கிராமங்களுக்குச் சென்று மருத்துவ சேவை செய்தேன். மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவிலும், ஆப்பிரிக்க நாடான அங்கோலாவிலும் மருத்துவ சேவையைத் தொடர்ந்தேன். இன்றும் அப்பணிகளை மக்களுக்காகத் தொடர்கிறேன். ஆக மருத்துவராக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதையே பெருமையாகக் கொள்கிறேன்.’’

‘‘இன்றைய சூழலிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதனை எதிர்கொள்ள பெண்களுக்கு நீங்கள் அறிவுறுத்துவது?’’

‘‘கல்விதான் இங்கு பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆயுதம். அது அவர்களுக்கு எழுதப் படிப்பதற்கு மட்டுமல்லாமல், ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராகப் போராடி சுயமாகச் செயல்படவும், சிந்திக்கவும் உதவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், அடிமையானவர்கள் என்னும் நிலையிலிருந்து அவர்களை மீட்கிறது.’’

‘‘தற்போது உங்கள் நாடு சந்திக்கும் அரசியல் நெருக்கடி என்ன? அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?’’

‘‘கியூபாவின் உள்ளே எந்த அரசியல் சிக்கலுமில்லை. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் நிறைய பிரச்னைகள் உள்ளன. எங்கள் மருத்துவர்களால் புதிய நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால், அதை உருவாக்கத் தேவையான மூலப் பொருள்களைப் பிற நாடுகளிடம் இருந்தே பெற வேண்டிய சூழல் இருக்கிறது. ஏனெனில் அதை இறக்குமதி செய்ய எந்த நாட்டின் கப்பல் எங்கள் துறைமுகத்திற்கு வந்தாலும், அமெரிக்காவிற்குள் செல்ல 6 மாதத் தடை விதிக்கப்படுகிறது. இதனால், பல நாடுகள் எங்களோடு வர்த்தகம் செய்ய அச்சப்படுகின்றன. ஆகவே, நாங்கள் மூன்று, நான்கு இடைத்தரகர்கள் மூலமாகவே மூலப் பொருள்களை வாங்குகிறோம். இது கடுமையான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்துகிறது. இருந்தும் கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம் வழங்கப்படுகின்றன. சோஷலிசத்தின் தேவை, நாங்கள் செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் போன்றவற்றைக் குறித்து எங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.’’

‘‘பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உதவி செய்திருக்கிறீர்களே?’’

‘‘சர்வதேசியம்தான் கியூப நாட்டின் அடித்தளம். உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களையும் நேசிப்பதே எங்கள் கொள்கை. ஆகவே, எங்களையும் எங்கள் மருத்துவர்களையும் எதிர்க்கும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் பிரச்னை என்று வரும்போது உதவுகிறோம். மக்களுக்குப் பிரச்னை என்று வரும்போது எங்கள் நாடு, எதிரி நாடு என்று பிரித்துப் பார்க்காமல் பாரபட்சமின்றி உதவிடுவோம். அதுவே அறம்.’’