அலசல்
Published:Updated:

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்... குத்தகைக்குக் கேட்கும் தமிழக அரசு! -

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்

களமிறங்கிய ஜூ.வி...

பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க-வுக்கு, கொரோனாப் பிரச்னையைச் சமாளிப்பது இமாலயப் பணியாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை வழங்குவது, ஆக்சிஜனைத் தேடி ஓடுவது, படுக்கைகளை அதிகரிப்பது என கொரோனாவைச் சுற்றியே ஸ்டாலின் அரசு சுழன்றுகொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்னைக்கு ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசியால் மட்டுமே முடியும் என்ற யதார்த்தத்தை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்துள்ளார். அதனால், அவரது கவனம் செங்கல்பட்டை நோக்கித் திரும்பியிருக்கிறது. மத்திய அரசு, தேவையான அளவுக்குத் தடுப்பூசியை வழங்கவில்லை. மாநில அரசுகளுக்கு நேரடியாகத் தடுப்பூசி விற்பனை செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன. இந்தச் சூழலில் ‘கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்... குத்தகைக்குக் கேட்கும் தமிழக அரசு! -

செங்கல்பட்டு அருகே திருமணி கிராமத்தில், வெறிநாய்க்கடி ஊசி உட்பட 13 வகையான தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட தொழிற்சாலை 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்நிலத்தைத் தமிழக அரசு இலவசமாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசிகளைச் சோதிப்பதற்கான அனிமல் ஹவுஸ் உட்பட சகல வசதிகளுடன் ரூ.594 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஹெச்.பி.எல் (HLL Biotech Limited) என்ற இந்தப் பொதுத்துறை நிறுவனம், பல ஆண்டுகளாகப் பயனற்றுக் கிடக்கிறது. இந்நிறுவனம் பற்றிய விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகத் திரட்டி, ‘‘RTI அம்பலம்: ‘மருந்து’க்குக்கூட மருந்து தயாரிக்கவில்லை!” என்று 30.9.2020 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம்.

பின்னர், கொரோனா இரண்டாவது அலை தன் கோரமுகத்தைக் காட்டத் தொடங்கிய சூழலில், திருமணி கிராமத்துக்குச் சென்று ஹெச்.பி.எல் நிறுவனத்தைப் பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் அதிகாரிகள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப் பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளுடன் ‘‘பூட்டிக்கிடக்கும் தடுப்பூசித் தொழிற்சாலை... கண்டுகொள்ளாத மோடி அரசு!’’ என்று விரிவான கட்டுரையை 2.5.2021 தேதியிட்ட ஜூ.வி-யில் வெளியிட்டோம். அது, மாநில அரசு உட்பட பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. சில தினங்களிலேயே, சென்னை உயர் நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளையும் ஹெச்.பி.எல் நிறுவனம் இயக்கப்படாதது குறித்து மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பியது.

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்... குத்தகைக்குக் கேட்கும் தமிழக அரசு! -

தமிழக அரசின் கவனம் ஹெல்.பி.எல் நிறுவனத்தை நோக்கித் திரும்பியது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட அதிகாரிகள், ஹெச்.பி.எல் நிறுவனத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். தி.மு.க-வின் வடசென்னைத் தொகுதி எம்.பி-யும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக ஆலோசனைக்குழு உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராசாமி ஹெச்.பி.எல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

அச்சமயத்தில், ‘‘தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசு... ஏற்று நடத்துமா தமிழக அரசு?’’ என்ற தலைப்பில் ஹெச்.பி.எல் பற்றிய விரிவான கட்டுரையை 26.5.2021 தேதியிட்ட ஜூ.வி-யில் வெளியிட்டோம். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி கலாநிதி வீராசாமி, ஹெச்.பி.எல் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் வில்சன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி-யான டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டவர்களின் கருத்துகளுடன் அந்தக் கட்டுரை வெளியானது.

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்... குத்தகைக்குக் கேட்கும் தமிழக அரசு! -
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்... குத்தகைக்குக் கேட்கும் தமிழக அரசு! -
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்... குத்தகைக்குக் கேட்கும் தமிழக அரசு! -
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்... குத்தகைக்குக் கேட்கும் தமிழக அரசு! -

‘‘ஹெச்.பி.எல் நிறுவனத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்துமா?’’ என்ற கேள்வியுடன் அக்கட்டுரை வெளியானவுடன், அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறின. முதல்வர் ஸ்டாலினின் கார் செங்கல்பட்டு நோக்கி விரைந்தது. ஹெச்.பி.எல் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், ‘‘செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்தும் என்று அறிவித்தார். அத்துடன், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி, அதைத் தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கொடுத்தனுப்பினார். டெல்லிக்கு விரைந்த தங்கம் தென்னரசு, பிரதமர் அலுவலகத்தில் கடிதத்தை அளித்துவிட்டு, மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்தார். டெல்லியின் முடிவுக்காகத் தற்போது காத்திருக்கிறது ஸ்டாலின் அரசு.

“தடுப்பூசித் தயாரிப்பை உடனே தொடங்க வேண்டும்!” - தங்கம் தென்னரசு தடாலடி

செங்கல்பட்டு ஹெச்.பி.எல் நிறுவனத்தை இயக்குவதற்குத் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் பேசினோம்.

‘‘ஹெச்.பி.எல் நிறுவனத்தை நேரில் ஆய்வுசெய்துவிட்டு வந்த பிறகு, முதல்வர் ஸ்டாலின் அதுபற்றி என்ன சொன்னார்?”

‘‘இயக்கப்படாமல் கிடக்கும் அந்நிறுவனத்தைத் தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தார் முதல்வர். நேரடியாக அவரே அங்கு சென்றார் என்றால், அந்த அளவுக்கு அதன்மீது அவருக்கு ஆர்வம் இருக்கிறது. செங்கல்பட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்குத் திரும்பிய முதல்வர், உடனடியாக என்னை அலைபேசியில் அழைத்தார். திருநெல்வேலியில் கொரோனா நிவாரண நடவடிக்கைகளில் இருந்த என்னை உடனே சென்னைக்கு வரச் சொன்னார். உடனே சென்னைக்குச் சென்றுவிட்டேன். தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டி.ஆர்.பாலு எம்.பி ஆகியோரை வைத்துக்கொண்டு முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 100 ஏக்கரில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் அந்த வளாகம் குறித்தும், அங்கிருக்கும் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகள் பற்றியும் முதல்வர் ஆச்சர்யத்துடன் கூறினார்.’’

‘‘அந்த நிறுவனத்தை இயக்குவது தொடர்பான தமிழக அரசின் யோசனைகள் என்ன?”

‘‘இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. அது மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனம். அங்கு உடனடியாக மத்திய அரசு உற்பத்தியைத் தொடங்க வேண்டும். அல்லது, தமிழக அரசு அந்த நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும். இரண்டில் எது வேண்டுமானாலும் இருக்கலாம். மொத்தத்தில், அங்கு உற்பத்தியைத் தொடங்க வேண்டும், வெறுமனே பூட்டி வைத்திருக்கக் கூடாது என்பதுதான் முதல்வரின் எண்ணம்.’’

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்... குத்தகைக்குக் கேட்கும் தமிழக அரசு! -

“எதன் அடிப்படையில் முதல்வர் உங்களை டெல்லிக்கு அனுப்பிவைத்தார்?”

‘‘அது தடுப்பூசி தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. எனவே, மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் என்கிற முறையில் எனக்கு அந்தப் பொறுப்பை முதல்வர் வழங்கினார். உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி, எங்களிடம் கொடுத்தனுப்பினார். நானும் டி.ஆர்.பாலு எம்.பி-யும் பிரதமர் அலுவலகத்தில் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்தோம். அவர், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியாவையும் அழைத்தார். அவர்களிடம் பேசியபோது, ‘ஹெச்.பி.எல் நிறுவனத்தை நடத்துவதற்கு விருப்பமுள்ள தனியார் நிறுவனங்களிடம் கடந்த ஜனவரியிலிருந்து பேசிவருகிறோம். விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுடன் மத்திய அரசு சேர்ந்து செயல்படுவதாக இருந்தால், மத்திய அரசே ஹெச்.பி.எல்-ஐ செயல்படுத்தும். தமிழக அரசு கேட்பதுபோலக் குத்தகை அடிப்படையில் கொடுக்கலாமா என்பது பற்றி உங்களுக்கு விரைவில் பதில் சொல்கிறோம்’ என்று கூறினார்கள்.

‘தமிழ்நாட்டில் இவ்வளவு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நிறுவனம் வீணாகிவிடக் கூடாது என்று, தமிழக அரசின் நோக்கத்தைத் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்தோம். இன்னும் பத்து நாள்களில் முடிவை எட்டக்கூடும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதைப் பார்க்கும்போது, பேச்சுவார்த்தையில் முன்னேற்ற மிருப்பதாகத் தெரிகிறது.”

“மத்திய அரசு, தனியாருடன் சேர்ந்து அந்த நிறுவனத்தை இயக்குவதில், தமிழக அரசின் கருத்து என்ன?”

‘‘தாமதிக்காமல் அங்கு உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம். தமிழக அரசிடம் கொடுக்கிறார்கள் என்றால், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றிப் பல யோசனைகள் இருக்கின்றன. தமிழகத்தின் நலனைக் கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட முடிவுகளைத் தமிழக முதல்வர் எடுப்பார்.”