கட்டுரைகள்
Published:Updated:

அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்...சீர்திருத்தப் பள்ளியில் நடந்த கொடூரம்!

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுவர் சீர்திருத்தப் பள்ளி

தன் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகப்பட்ட பிரியா, இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த 17 வயது சிறுவன் ஒருவனை அங்கிருந்த ஊழியர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அங்கிருந்த ஆறு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சீர்திருத்தப் பள்ளியில் நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகிலுள்ள கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. கணவரை இழந்த இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என ஆறு பிள்ளைகள். அந்தப் பகுதியில் குடிநீர் ஏற்றும் லாரிகள் நிற்கும் இடத்தில் வாட்ச்வுமனாக வேலைசெய்வதுடன், அங்கேயே குடும்பத்துடன் வசித்தும் வருகிறார். வறுமை காரணமாக, பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் தனது மூத்த மகன் கோகுல்யை குன்றத்தூர் பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு பொம்மைக்கடையில் வேலைக்குச் சேர்த்திருக்கிறார்.

அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்...சீர்திருத்தப் பள்ளியில் 
நடந்த கொடூரம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு திருட்டு வழக்கில் கைதான கோகுல், செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான். கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தவன், தாம்பரம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இருந்த பேட்டரிகளைத் திருடிய வழக்கில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி, மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். அடுத்த நாள் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறான்.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி மாலை செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து கோகுல்யின் தாய் பிரியாவுக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. ‘‘உங்கள் மகன் பூரி சாப்பிடும்போது வலிப்பு ஏற்பட்டது. அவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோம். நீங்களும் விரைவாக வர வேண்டும்” என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் அழைத்த அதே நபர், ‘‘உங்கள் மகன் இறந்துவிட்டான்” என்று சொல்லியிருக்கிறார்.

அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்...சீர்திருத்தப் பள்ளியில் 
நடந்த கொடூரம்!

தன் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகப்பட்ட பிரியா, இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரையடுத்து, செங்கல்பட்டு பகுதி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மாஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடந்தது. இந்த விசாரணையில் பல்வேறு உண்மைகள் தெரியவந்தன. அந்தச் சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்திருக்கிறான் என்பது இந்த விசாரணை மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுவர் கூர் நோக்கு இல்ல கண்காணிப்பாளர் மோகன், பணியிலிருந்த காவலர்கள் சந்திரபாபு, வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட் ராஜ், விஜயகுமார் ஆகிய ஆறு பேரும் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

கூர்நோக்கு இல்லத்தில் என்ன நடந்தது என்று செங்கல்பட்டு காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘கோகுல் ஏற்கெனவே அந்த இல்லத்தில் இருந்தவன் என்பதால், இரண்டாவது முறையாக அங்கு சென்றபோது, அங்கிருந்த ஊழியர்களிடம் திமிராக நடந்துகொண்டதாகச் சொல் கிறார்கள். இதில் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர், கோகுல்யைப் பிரம்பால் கடுமை யாகத் தாக்கியிருக்கிறார். வலி தாங்க முடியாத அந்தச் சிறுவன், அவரின் கையில் கடித்து வைத்திருக்கிறான். இதைக் கண்டு ஆத்திரமடைந்து, மற்ற ஊழியர்களும் சிறுவனைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் அந்தச் சிறுவன் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறான். அதிர்ச்சி யடைந்த ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல், அவனுக்கு வலிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் இறந்ததுபோல அவனது அம்மாவிடம் நாடகமாடியிருக்கிறார்கள்” என்றார்கள்.

அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்...சீர்திருத்தப் பள்ளியில் 
நடந்த கொடூரம்!

கூர்நோக்கு இல்லத்திலிருந்த சிறுவன் அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அதன் பதிவாளர் அனு சௌத்ரி கூர்நோக்கு இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்.

செங்கல்பட்டு மட்டுமன்றி தமிழகம் முழுவதுமுள்ள கூர்நோக்கு இல்லங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. இதுபோல இன்னொரு சம்பவம் நடக்காமலிருக்க, அரசு அனைத்து இல்லங்களிலும் உடனடி ஆய்வுசெய்ய உத்தரவிடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

விரைந்து செய்யுமா அரசு?