தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை 43 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 16,000 ஊழியர்கள் மூலம் வீடு வீடாகக் கணக்கெடுப்புப் பணி நடந்துவருகிறது. இந்தக் கணக்கெடுப்பில் சுமார் 500 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை சென்னை மாநகராட்சி தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சூழலில் துபாயிலிருந்து சென்னை திரும்பிய 71 வயது நபர் வீட்டிலேயே தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர். அதன்படி சென்னை மண்ணடியில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர், வெளிநாட்டுக்கு சுறா மீன்களின் வால் பகுதியை ஏற்றுமதி செய்யும் பிசினஸ் செய்துவந்தார். அதற்காக துபாய், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்வார். கடந்த 2-ம் தேதி அவரின் உடல் நலம் மோசமானது. அதனால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காலை 9.25 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டார். காலை 11.45 மணிக்கு அவர் இறந்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபர், இறந்ததும் அவர் கொரோனாவால் இறந்திருக்கக்கூடும் என மருத்துவமனை நிர்வாகம் கருதியது. ஆனால் கொரோனாவால் இறக்கவில்லை என அவரின் உறவினர்கள் கூறினர். இதையடுத்து, அந்த நபரின் சடலத்தைச் சொந்த ஊரான ராமநாதபுரம் கீழக்கரைக்குக் கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். அதற்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ-வும் சம்மதித்து சடலத்தைச் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதிக் கடிதம் ஒன்றை வழங்கினார்.

அந்தக் கடிதத்தில் 10 பேர் உடன் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதனால் 2 கார்கள், ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபரின் சடலம் கீழக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சாதாரண மரணம் எனக் கருதி 300-க்கும் மேற்பட்டவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தச் சூழலில் கடந்த 4-ம் தேதி வந்த பரிசோதனை முடிவில் அந்த நபருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை, அவரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தினர். மேலும் அந்த நபரின் வீடு அமைந்துள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டன.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கே இதற்கெல்லாம் காரணம் என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி குற்றம் சாட்டியிருந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. மேலும் ஆர்.எம்.ஓ-வின் கையொப்பமிட்ட மார்ச்சுவரி கார்டு மற்றும் அனுமதிக் கடிதம் ஆகியவை வெளியாகின. அதில், மார்ச்சுவரி கார்டில் இறந்தவர் கூலி வேலை செய்வதாகவும் 1900 சம்பளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூச்சுத்திணறலே இறப்புக்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலத்தைக் கொண்டு செல்ல ஆர்.எம்.ஓ கொடுத்த கடிதத்தில் முதுமையின் காரணமாக இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நபருக்கு ஏன் 2 காரணங்களை ஆர்.எம்.ஓ கூறினார் என்று தெரியவில்லை. அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தச் சூழலில் இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், `என்னுடைய அப்பாவுக்குக் கொரோனா தொற்று இல்லை. ஆனால் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' என்று இறந்தவரின் மூத்த மகள் கூறியுள்ளார்.
இளையமகள் அனுப்பிய வாட்ஸ்அப் பதிவில், `என்னுடைய அப்பாவுக்குக் கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது. அதனால் நாங்கள் அனைவரும் தனிமைப்படுத்தியுள்ளோம். அதை நம்பாதவர்கள் எங்களின் வீட்டில் வந்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு பதிவுகளுக்கும் கீழக்கரை பகுதி மக்கள் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்து அவர்களும் சமூகவலைதளத்தில் பதிலளித்துள்ளனர்.

`144 தடை உத்தரவால் வீட்டுக்குள்ளேயே நிம்மதியாக இருந்தோம். ஆனால் கொரோனா தொற்றை மறைத்த அந்தக் குடும்பத்தினரால் இன்று கீழக்கரைப் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எந்த தைரியத்தில் இப்படி உங்களால் பேச முடிகிறது. கீழக்கரையைத் தலைகீழாக்கிவிட்டீர்கள். அதனால், கீழக்கரை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள்தான் உங்கள் மீது புகார் கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கீழக்கரை காவல் நிலைய போலீஸார் க விசாரித்துவருகின்றனர். இந்தச் சூழலில் அனுமதிக் கடிதம் கொடுத்த ஸ்டான்லி மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ-வுக்கு அன்பளிப்பாக விலைஉயர்ந்த பொருள் ஒன்று கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து ஆர்.எம்.ஓ ரமேஷிடம் கேட்க அவரை பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவரின் விளக்கத்தைப் பெற முடியவில்லை. அவரின் செல்போன் நம்பருக்கான இன்கம்மிங் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``ஆர்.எம்.ஓ ரமேஷ், விரைவில் ஓய்வு பெற உள்ளார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் அனுமதிக் கடிதம் கொடுத்தார். மற்றபடி யாரிடமும் எதையும் பெறவில்லை. அன்பளிப்பு வாங்கியதற்கான ஆதாரத்தை முதலில் வெளியிடச் சொல்லுங்கள். இன்றைய காலகட்டத்தில் மருத்துவப் பணி என்பது சவாலாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவருகின்றனர். இந்தச் சூழலில் இந்தக் குற்றச்சாட்டு மருத்துவர்களைக் களங்கப்படுத்தும் வகையில் உள்ளது" என்றனர்.