Published:Updated:

`எச்சரிக்கை!' மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து சென்னையில் கருத்தரங்கம்

Modi, Xi Jinping
Modi, Xi Jinping

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரது சந்திப்பு அக்டோபர் 11 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. அதுதொடர்பாக, 'உஹான் டு மாமல்லபுரம்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

தெற்காசிய பிராந்தியத்தில் முக்கியமான இரு பெரும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் இரண்டாவது சந்திப்பை மேற்கொள்ளவிருப்பதால், சிறப்புக் கவனம் பெற்றிருக்கிறது மாமல்லபுரம். பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், சென்னையில் இந்தியா - சீனா நாடுகள் பேச்சுவார்த்தை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

Wuhan to Mamallapuram
Wuhan to Mamallapuram

சென்னை சிட்டிசன்ஸ் ஃபோரம் என்ற அமைப்பு நடத்திய இந்தக் கருத்தரங்கம், 'உஹான் டு மாமல்லபுரம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. கருத்தரங்கத்தின் சிறப்புப் பேச்சாளர்களாக ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி சேஷாத்ரி வாசன், அரசியல் அறிவியல் நிபுணர் லாரன்ஸ் பிரபாகர் வில்லியம்ஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரும் வெளியுறவுத் துறை நிபுணருமான சேஷாத்ரி சாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி சேஷாத்ரி வாசன் முதலில் பேசினார். "1962-ம் ஆண்டுக்குப் பிறகு, இரு நாடுகள் இடையே இருந்த விரிசலை, கடந்த ஆண்டு உஹான் நகரில் இந்தியா சீனா அரசுகளிடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தை, சிறப்பான எதிர்காலத்தை நம்முன் திறந்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு 8-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. போதி தர்மர் பௌத்தத்தைப் பரப்புவதற்காகக் காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்றார். அதனால் சீன அரசு காஞ்சிபுரத்தில் அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்றை நிறுவ விரும்புகிறது" எனத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர், "கடந்த அக்டோபர் 1 அன்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 70-வது ஆண்டு விழாவை அந்நாட்டு அரசு கொண்டாடியது. அதில் சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. தொழில்நுட்பத்துறையில் சீனாவின் முன்னேற்றத்தைப் பேசினார் அதிபர் ஜின்பிங். 2049-ம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா நடக்கவுள்ளது. அதற்குள் உலகளவில் சீனாவை முதலிடத்துக்குக் கொண்டுவரும் திட்டத்தை அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

Wuhan to Mamallapuram
Wuhan to Mamallapuram
சீனா இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான, காஷ்மீர் விவகாரத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பது நலம். அவ்வாறு பேசினால், இந்தியாவும் ஹாங்காங், திபெத் விவகாரங்களைப் பேசலாம்.
கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி சேஷாத்ரி வாசன்

இந்தியாவில் சீனா முதலீடு செய்ய விரும்புகிறது. எனினும், சீனா - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் 62 பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்கிறது. ஆதலால், சீனாவுடன் வர்த்தகரீதியான தொடர்பு வைத்துக்கொள்வது நல்லதாக இருப்பினும், அது எச்சரிக்கையோடு அணுகப்பட வேண்டும். சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதால், இந்தியா தன்னை அரசியல், ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றில் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

சீனா இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான, காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பேசாமல் இருப்பது நலம். அவ்வாறு பேசினால், இந்தியாவும் ஹாங்காங், திபெத் விவகாரங்களைப் பேசலாம். சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுவது, மறைமுகமாகத் தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகும். எனவே, இந்தியா சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என முடித்தார்.

அடுத்ததாகப் பேசினார் அரசியல் அறிவியல் நிபுணர் லாரன்ஸ் பிரபாகர் வில்லியம்ஸ். "உஹானும் மாமல்லபுரமும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கலாசாரத்தோடு தொடர்புடையவை. இந்திய விடுதலைக்குப் பிறகு, எல்லைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவும் சீனாவும் வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; அவை கலாசார சக்திகள். மோடி இந்திய - சீனப் பிரச்னையின் அடிப்படையைப் பேசுகிறார். இந்த முறை, இருநாட்டுத் தலைவர்களும் முரண்பாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும். அனைத்துப் பிரச்னைகளும் தீரவில்லை என்றபோதும், இந்தியாவின் அணுகுமுறை பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது" என்றார்.

உஹானில் நடந்த முதல் பேச்சுவார்த்தை டோக்லாம் பிரச்னையைத் தீர்த்து வைத்தது. மாமல்லபுரம், லடாக் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். இந்தியப் பெருங்கடல் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். தீவிரவாதத்தை எதிர்கொள்ள இருநாடுகளும் பேச வேண்டும். அணு ஆயுதப் போரைத் தடுப்பது குறித்தும், விண்வெளி குறித்தும் உரையாடல்கள் அவசியம்.
அரசியல் அறிவியல் நிபுணர் லாரன்ஸ் பிரபாகர் வில்லியம்ஸ்.
Wuhan to Mamallapuram
Wuhan to Mamallapuram

"1962-ம் ஆண்டு வரை, இந்தியாவும் சீனாவும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. அந்தப் போர், இரு நாட்டு உறவுகளுக்குப் பின்னடைவாக இருந்தது. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய எல்லைகள் இருக்கின்றன; மக்கள்தொகை அதிகமாகப் பெருகியுள்ளது. ஆதலால் டெல்லி மீதும் பீஜிங் மீதும் அழுத்தம் தொடர்கிறது. 90-களுக்குப் பிறகு, சீனா அமைதி வழியில், வளரும் நாடாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது. இந்தியா ஒருபோதும் சீனாவின் நிலத்தை ஆக்கிரமித்தது இல்லை. எனவே, இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சீனாவின் பொருளாதாரம் இந்தியாவைவிட 5 மடங்கு பெரியது. இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் எந்தப் போர் நடந்தாலும், அது அணு ஆயுதப் போராக மாற வாய்ப்புள்ளது" என்ற லாரன்ஸ் பிரபாகர் வில்லியம்ஸ் தொடர்ந்தார்.

"தற்காலச் சூழலில், இந்தியா சீனாவோடு இணைந்துகொள்வது பயனளிக்கும். உஹானில் நடந்த முதல் பேச்சுவார்த்தை டோக்லாம் பிரச்னையைத் தீர்த்து வைத்தது. மாமல்லபுரம், லடாக் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். இந்தியப் பெருங்கடல் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். தீவிரவாதத்தை எதிர்கொள்ள இருநாடுகளும் பேச வேண்டும். அணு ஆயுதப் போரைத் தடுப்பது குறித்தும், விண்வெளி குறித்தும் உரையாடல்கள் அவசியம். இருநாட்டுத் தலைவர்களும் முதிர்ச்சியுடையவர்கள். எனவே, ஆசியா - பசிஃபிக் பகுதியில் அமைதி நிலவ, இது நிகழ வேண்டும்" என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரும் வெளியுறவுத் துறை நிபுணருமான சேஷாத்ரி சாரி இறுதியாகப் பேசினார். "மாமல்லபுரத்தில் இந்தியா, சீனா நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொள்வதில் வரலாற்று ரீதியான குறியீடுகள் உள்ளன. உஹான் நகரும் அப்படியான சிறப்பு வாய்ந்தது. 1967-ம் ஆண்டு, சீன அதிபர் மாவோவின் ஆட்சியில் நிகழ்ந்த போராட்டங்களில், உஹான் நகரில் சீன மக்கள் விடுதலைப் படையின் முக்கியமான தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். உஹான் சீனாவின் பலத்தைக் குறிக்கும் நகரம். ஜி ஜின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ராணுவத்தின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும் ஒரே நேரத்தில் செயல்படுகிறார். சீனாவின் மூன்று முக்கியப் பொறுப்புகளைத் தாங்கும் முதல் அதிபர் ஜின்பிங்தான்" என்றார்.

Wuhan to Mamallapuram
Wuhan to Mamallapuram
இந்தியா மென்மையான நாடாகக் கருதப்பட்டாலும், அதிரடியான முடிவுகளை இந்தியாவால் எடுக்க முடியும். இந்தியாவும் சீனாவும் தங்கள் கலாசார வரலாற்றுப் பின்னணியோடு, எதிர்கால முடிவுகளை எடுக்க வேண்டும்.
சேஷாத்ரி சாரி

தொடர்ந்து பேசிய சேஷாத்ரி சாரி, "உலக நாடுகளுக்கு இடையிலான போட்டியில், தற்போது கிழக்குப் பகுதியின் நாடுகளின் கை ஓங்கியுள்ளது. பல்வேறு துறைகளில் பலம்வாய்ந்த நாடுகளாக 4 நாடுகள் கருதப்படுகின்றன. அவை, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகியன. இந்தப் பட்டியலில் 3 நாடுகள் உலகத்தின் கிழக்குப் பகுதியில் இருப்பவை. மாயன், அஸ்டெக் ஆகிய நாகரிகங்களைத் தவிர்த்து, உலகின் 7 பழைமையான நாகரிகங்கள் கிழக்கில் தோன்றியவை. காலனிய ஆட்சியால் பிராந்திய அரசியல்களில் மாற்றம் ஏற்பட்டன. முதல் உலகப் போர் காலனியத்தை அசைத்துப் பார்த்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், காலனிய ஆட்சிகள் முடிவுக்கு வந்தன. அதன் பிறகு, பனிப்போர் உலகத்தை இரு துருவங்களாக மாற்றியது.

சோவியத் உடைந்த பிறகு, அது ஒரு துருவமாக மாறியது. தற்போது அது பல துருவங்களாக மாறியுள்ளது. இந்தியா, சீனா ஆகியவற்றின் பிராந்திய, சர்வதேச அரசியலைப் பற்றி விவாதம் நடைபெற வேண்டும். தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் கோரியபோது, இந்திய - சீன உறவுகள் உறைந்த நிலையில் இருந்தது. ராஜீவ் காந்தி ஆட்சி முதல் வாஜ்பாய் ஆட்சி வரை, இந்திய - சீன உறவுகள் மீட்பு நிலையில் இருந்தன. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய - சீன உறவுகள் ஏறுமுகத்தில் இருக்கின்றன.

பலமான பொருளாதாரத்துக்காக, இந்தியா 2014 முதல் 2018 வரை, பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. இந்தியா மென்மையான நாடாகக் கருதப்பட்டாலும், அதிரடியான முடிவுகளை இந்தியாவால் எடுக்க முடியும். இந்தியாவும் சீனாவும் தங்கள் கலாசார வரலாற்றுப் பின்னணியோடு, எதிர்கால முடிவுகளை எடுக்க வேண்டும். மாமல்லபுரத்தில் நடக்கும் இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிய வேண்டும்" என்று பேசி முடித்தார்.

மோடி - ஜின்பிங் சந்திப்பு... புதுப் பொலிவு பெறும் மாமல்லபுரம்!
பின் செல்ல