ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மட்டும் சென்னை மெரினா கடற்கரையில் பிரத்யேகப் பாதையை உருவாக்கி, மாற்றுத்திறனாளிகள் கடலைப் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சக மனிதர்களைப்போல எப்போது வேண்டுமானாலும் கடற்கரைக்குச் செல்லவேண்டும், கடலில் கால் வைக்க வேண்டும் என்பது மாற்றுத்திறனாளிகளின் ஆசைகளில் ஒன்று. வீல் சேர் கடற்கரை மணலில் செல்ல முடியாது என்பதால், அவர்களின் ஆசை நிறைவேறுவது சிரமமாகவே இருந்தது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் ஆசையைப் பூர்த்திசெய்யும் வகையில் அவர்களுக்காகவே பிரத்யேகமாக நான்கு வீல் சேர்கள் சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் மாற்றுத்திறனாளிகள் கடலுக்குச் செல்லலாம். இந்த வீல் சேர் பயன்பாடு குறித்து, சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.
``பிரத்யேக நடைபாதை அல்லது வீல் சேர் ஏற்பாடு செய்துதருமாறு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தொடர்ந்து எங்களுக்குக் கோரிக்கைகள் வந்துகொண்டே இருக்கும். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின், சுதேஷ் தர்ஷன் என்ற திட்டத்தின் கீழ் புதிதாக நான்கு வீல் சேர்களை வாங்கினோம். கடந்த சில வாரத்துக்கு முன்புதான், இந்த வீல்சேர்களை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்குக் கொடுத்தோம்.

சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட நான்கு வீல் சேர்களும், சாதாரண நிலத்திலும், கடற்கரை மணலிலும் சுலபமாகச் செல்லும். இதைச் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அவ்வையார் சிலைக்கு அருகில் வைத்திருக்கிறோம். அங்கு பாதுகாப்பாளர் ஒருவர் எப்போதும் இருப்பார். மாற்றுத்திறனாளிகள் அவரை அணுகினால், வீல் சேரைப் பயன்படுத்தக் கொடுப்பார். அதை நகர்த்த ஓர் உதவியாளருடன், எப்போது வேண்டுமானாலும் வீல் சேரைப் பயன்படுத்தி கடற்கரைக்குச் செல்லலாம்; மகிழ்ச்சியடையலாம்.
வீல் சேரைப் பயன்படுத்த நேரக்கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் எதுவும் இல்லை. பயன்படுத்திய பின்னர் மீண்டும் அதே இடத்தில் கொண்டுவந்து ஒப்படைத்துவிட வேண்டும். இதுவரை 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த வீல் சேர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், மேற்கொண்டு கூடுதலான வீல் சேர்களை வாங்கும் யோசனையும் இருக்கிறது. இந்த வீல் சேர் பயன்பாடு குறித்து மாற்றுத்திறனாளிகளிடம் விழிப்புணர்வு அதிகமாக வேண்டும்" என்றார் அந்த அதிகாரி.