
ஜெயசீலன் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள இன்ஜினீயரிங் கல்லூரியின் ஓனரைச் சந்தித்து, மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி 75 லட்சம் ரூபாயை ஏமாற்றியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
‘ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், முதலில் அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்ற ‘சதுரங்க வேட்டை’ ஃபார்முலாவில் பணக்காரர்களை மோசடி செய்த தம்பதி போலீஸில் சிக்கியிருக்கிறார்கள். விசாரணையில் வெளிவந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சி ரகம்!
கேரள மாநிலம், திருச்சூர் அருகேயுள்ள மாரைக்காடு தானத்பரன்பில் ஹவுஸ் பகுதியில் ‘நவரத்னா ஹைப்பர் மார்கெட்’ என்ற நிறுவனத்தை நடத்திவருபவர் உமர். தொழிலதிபரான இவருக்கு கொரோனா காலகட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்காக, தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் கேட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் அவரின் நண்பர் ஒருவர், சென்னையைச் சேர்ந்த ஜெயசீலனை அறிமுகப்படுத்திவைத்திருக்கிறார். ஜெயசீலனிடம் போனில் பேசிய உமர், தனக்கு 100 கோடி ரூபாய் கடன் தேவைப்படுவதாகக் கேட்டிருக்கிறார். ‘நேரில் வாங்க... ஏற்பாடு செய்கிறேன்...” என்று ஜெயசீலனும் உறுதியளித்திருக்கிறார்.

அதன்படி 2020-ம் ஆண்டு உமர், ஜெயசீலனை சென்னையில் சந்தித்திருக்கிறார். அப்போது, “நாங்கள் ஸ்ரீபாலாஜி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறோம். எங்களுக்கு நிதி நிறுவனங்களுடன் பழக்கம் இருப்பதால் நீங்கள் கேட்கும் கடன் தொகையை வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். அதற்கு பிராசஸிங் ஃபீஸ், டாக்குமென்ட் சார்ஜ் என 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்” என ஜெயசீலனும், அவருடைய மனைவி ராமலட்சுமியும் கூறியிருக்கின்றனர். அதற்குச் சம்மதித்த உமர், வங்கி மூலமாகவும், ரொக்கப் பணமாகவும் 50 லட்சம் ரூபாயை ஜெயசீலன், ராமலட்சுமியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், வாக்குறுதியளித்தபடி 100 கோடி ரூபாய் கடனை வாங்கிக் கொடுக்காமல் இருவரும் ஏமாற்றிவந்திருக்கின்றனர்.
இதையடுத்து 2022-ம் ஆண்டு உமர், சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடித் தடுப்புப் பிரிவில் புகாரளித்தார். அப்போது ஜெயசீலன், ராமலட்சுமிக்கு வங்கி மூலம் பணம் அனுப்பிய ஆதாரங்களையும் போன் உரையாடல்களையும் கொடுத்தார் உமர். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ஜான்விக்டர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ், குற்றம்சாட்டப்பட்ட ஜெயசீலன், ராமலட்சுமியைத் தேடினார். ஆனால், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இருவரின் செல்போன் சிக்னல், திருநெல்வேலியில் காட்டியதை வைத்து அங்கு சென்ற போலீஸார் ஜெயசீலன், ராமலட்சுமியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடி தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``கைதுசெய்யப்பட்ட ஜெயசீலன்மீது ஏற்கெனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரின் சொந்த ஊர் குமரி மாவட்டம். இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்திருக்கிறார். அங்கு ஒன்றாகப் பணிபுரிந்த ராமலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்திருக்கின்றனர். இதையறிந்த ஜெயசீலனின் முதல் மனைவி, அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். ராமலட்சுமிக்கும் ஜெயசீலனுக்கும் 20 வயது வித்தியாசம்.
ஜெயசீலன், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். அவருக்கு உதவியாக ராமலட்சுமி இருந்துவருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ‘ஏழுமலையான்’ பெயர்கொண்ட பஞ்சாயத்துத் தலைவர் ஒருவரின் பழக்கம் ஜெயசீலனுக்குக் கிடைத்திருக்கிறது. அவர் கடன் வாங்கித் தருவதாகவும், மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகவும் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிவந்திருக்கிறார். அந்தப் பஞ்சாயத்துத் தலைவரின் பெயரைச் சொல்லித்தான் ஜெயசீலனும் ராமலட்சுமியும் தொழிலதிபர் உமரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அந்தப் பஞ்சாயத்துத் தலைவரைத் தேடிவருகிறோம்.
ஜெயசீலன் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள இன்ஜினீயரிங் கல்லூரியின் ஓனரைச் சந்தித்து, மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி 75 லட்சம் ரூபாயை ஏமாற்றியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அந்த வழக்கிலும் ஜெயசீலனைக் கைது செய்திருக்கிறோம். இவர்கள் இருவரிடம் விசாரித்தபோது, தென்மாவட்டங்களில் நெய்வேலி என்.எல்.சி நிறுவனம், 15,000 ஏக்கரில் சோலார் மின்திட்டம் அமைப்பதாகச் சொல்லி, நில உரிமையாளர்கள் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு போலியாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய நெய்வேலி என்.எல்.சி-யிடமும் விசாரிக்கவிருக்கிறோம்.
ஜெயசீலனும் ராமலட்சுமியும் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார்கள். சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மாதம் 45,000 ரூபாய் வாடகையில் குடியிருந்த இவர்கள், தலைமறைவு வாழ்க்கைக்காகவே திருநெல்வேலியிலும் வாடகைக்கு வீடு எடுத்துவைத்திருக்கிறார்கள். தங்களைப் பெரிய ஆள் என்று நம்பவைப்பதற்காக, தொழில் சந்திப்புகளைப் பெரும்பாலும் நட்சத்திர ஹோட்டல்களில்தான் நடத்தியிருக்கிறார்கள். சந்திப்புக்குச் செல்கையில் கழுத்து நிறைய கவரிங் நகைகளையும், விலையுயர்ந்த பட்டுப் புடவையையும் அணிவதை ராமலட்சுமி வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசும் திறமையுள்ள ஜெயசீலனும் கோட், சூட் என டிப்டாப்பாக வாடகை சொகுசு கார்களில் சென்றிருக்கிறார்” என்றார்.
இந்தத் தம்பதிக்குப் பின்னாலிருக்கும் பஞ்சாயத்துத் தலைவர் சிக்கினால்தான், இவர்கள் மொத்தம் எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறார்கள், எத்தனை கோடியை ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவரும் என்கிறது போலீஸ்!