Published:Updated:

`கழிவுநீர்த் தொட்டியை சூழ்ந்த விஷ வாயு!'- தொழிலாளியைக் காப்பாற்ற இறுதிவரை போராடிய தீயணைப்பு வீரர்

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தவரை மீட்கும் தீயணைப்பு வீரர்
News
கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தவரை மீட்கும் தீயணைப்பு வீரர்

சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடியில் கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கிய தொழிலாளியைக் காப்பாற்ற தீயணைப்பு வீரர் ஒருவர் வாயோடு வாய் வைத்து காற்றை ஊதிய வீடியோ வைலராகிவருகிறது.

Published:Updated:

`கழிவுநீர்த் தொட்டியை சூழ்ந்த விஷ வாயு!'- தொழிலாளியைக் காப்பாற்ற இறுதிவரை போராடிய தீயணைப்பு வீரர்

சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடியில் கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கிய தொழிலாளியைக் காப்பாற்ற தீயணைப்பு வீரர் ஒருவர் வாயோடு வாய் வைத்து காற்றை ஊதிய வீடியோ வைலராகிவருகிறது.

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தவரை மீட்கும் தீயணைப்பு வீரர்
News
கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தவரை மீட்கும் தீயணைப்பு வீரர்

திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது. இந்தப் பணியில் மதுரவாயல் சீமாத்தம்மன்நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த பாலா (37), பிரதீப், கார்த்தி, ஜெகன் உட்பட 4 பேர் ஈடுபட்டனர். 15 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியிலிருந்து முதலில் நீர் அகற்றப்பட்டது. பின்னர், தொட்டிக்குள் இருந்த கழிவுகளை அகற்ற தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

முதலுதவி அளிக்கும் காட்சி
முதலுதவி அளிக்கும் காட்சி

கழிவுநீர் தொட்டியில் முதலில் பாலா என்பவர் இறங்கினார். அப்போது விஷவாயு அவரைத் தாக்கியது. அதனால் மூச்சுத்திணறி, தொட்டிக்குள் விழுந்தார். அதைப்பார்த்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே பாலாவை வெளியில் தூக்க முயற்சி செய்தனர். ஆனால், கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு இருப்பதால் மற்றவர்கள் உள்ளே இறங்கவில்லை. பின்னர், பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு அலுவலர் இளங்கோ தலைமையில் 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கினர். தொட்டிக்குள் விழுந்த பாலாவைக் கயிறு மூலம் வெளியில் எடுத்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சீத்தாராமன், சுபாஷ் ஆகியோர் பாலாவுக்கு முதலுதவி அளித்தனர். அதில் சீத்தாராமன், பாலாவின் வாயோடு வாய் வைத்து ஊதி முதலுதவி அளித்தார். பாலாவின் இதயத்தை அழுத்தினார் சுபாஷ். சுமார் 20 நிமிடங்கள் இந்த முதலுதவி அளிக்கப்பட்டது.

முதலுதவி அளிக்கும் தீயணைப்பு வீரர்கள்
முதலுதவி அளிக்கும் தீயணைப்பு வீரர்கள்

இதற்கிடையில், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களும் முதலுதவி அளித்தனர். தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுமார் அரை மணி நேரம் போராடியும் பாலாவின் உடலில் எந்தவித அசைவும் இல்லை. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பாலா, ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ``பத்துக்கு பத்து அளவு உள்ள கழிவு நீர் தொட்டி 15 அடி ஆழமானது. அந்தக் கழிவுநீர்தொட்டியில் 13 அடி வரை உள்ள கழிவுநீரை தொழிலாளர்கள் வெளியேற்றிவிட்டனர். 2 அடியிலிருந்த சேறு, சகதியை அகற்றத்தான் பாலா என்ற தொழிலாளி உள்ளே இறங்கியுள்ளார். கழிவுநீர் தொட்டியில் விஷவாயு இருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. உள்ளே இறங்கி சேறை அகற்ற முயன்றபோதுதான் விஷவாயு தாக்கியுள்ளது.

முதலுதவி அளிக்கும் தீயணைப்பு வீரர்கள்
முதலுதவி அளிக்கும் தீயணைப்பு வீரர்கள்

அதனால் பாலா மூச்சுத்திணறி மயங்கி விழுந்துவிட்டார். அவரை வெளியில் கொண்டு வரமுடியாமல் மற்ற தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் முன்பாதுகாப்புடன் கழிவுநீர் தொட்டியிலிருந்து பாலாவை வெளியில் கொண்டுவந்தோம். பாலாவை உயிரோடு காப்பாற்றப் போராடினோம். ஆனால், எங்களின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. அது வருத்தமாக உள்ளது" என்றனர்.

தீயணைப்பு வீரர் சீத்தாராம், பாலாவின் வாயோடு வாய் வைத்து ஊதி அவரைக் காப்பாற்ற முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் உள்ளவர்களை நெகிழ வைத்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலானது. பாலாவைக் காப்பாற்றுவதற்கு சீத்தாராமன் செய்த முயற்சிக்கு சக தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.