சென்னை, நந்தம்பாக்கத்தில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு செக்யூரிட்டியாக சகாப்சிங் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு பணியாற்றிவந்தார். 2019-ம் ஆண்டு, ஜனவரி 13-ம் தேதி அதிகாலையில் செக்யூரிட்டி சகாப்சிங், மெயின் கேட்டில் பணியிலிருந்தபோது அங்கு வந்த நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர், கதவைத் திறக்கும்படி கூறியிருக்கிறார். அதற்கு ஆசிரமத்திலிருப்பவர்களின் அனுமதியிலில்லாமல் கதவைத் திறக்க முடியாது என செக்யூரிட்டி சகாப்சிங் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து சகாப்சிங்கை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது சகாப்சிங் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் சகாப்சிங் தரப்பில் ஆலந்தூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சகாப்சிங் தரப்பில் வழக்கறிஞர் செல்வம் சௌந்தர் ஆஜராகினார். சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், மனுதாரர் சகாப்சிங்கை தாக்கியதோடு அவரின் செல்போனையும் பறித்திருக்கிறார். அது தொடர்பாக டி.ஜி.பி-யிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வாதிட்டார்.
இன்ஸ்பெக்டர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், சம்பவத்தன்று மனுதாரர், நள்ளிரவில் சாலையில் சுற்றித் திரிந்திருக்கிறார். அவரிடம் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்திருக்கிறார். அதற்கு மனுதாரர் எந்தவித பதிலும் சொல்லாததால் அவரின் செல்போன் நம்பரைப் பெற்றிருக்கிறார். இதற்கிடையில் அந்த ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அலுவலர் மணி என்பவர், போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தொடர்புகொண்டு மனுதாரர் சகாப்சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதனால் போலீஸார் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதையெல்லாம் மறைத்து மனுதாரர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், ``மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும்போது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பது தெரியவருகிறது. மேலும். இன்ஸ்பெக்டருக்கு எதிராக மனுதாரர் சகாப்சிங் புகார் கொடுத்தபோது, அதற்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக் கழித்திருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக மனுதாரர் புகாரை ஆலந்தூர் மாஜிஸ்ட்ரேட்டும் தள்ளுபடி செய்திருக்கிறார். எனவே மாஜிஸ்ட்ரேட் உத்தரவை ரத்துசெய்து, இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தி, இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடுகிறேன். இதைச் செய்யத் தவறினால் விசாரணையை வேறு ஒரு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற நேரிடும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும்" என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
இது குறித்து வழக்கறிஞர் செல்வம் சௌந்தரிடம் பேசினோம். ``மனுதாரர் சகாப்சிங்கை அப்போதைய நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. அதற்கு அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். இன்ஸ்பெக்டர் மீதே நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகாரளித்ததால் போலீஸார் புகாரை வாங்க மறுத்திருக்கிறார்கள். அதனால்தான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆலந்தூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் மனுதாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாப்சிங் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் நீதிபதி, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது இரண்டு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவுக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.