
அகற்றப்படாத 53,000 ஆக்கிரமிப்புகள்!
வானில் அடிக்கடி கருமேகங்கள் சூழ்கின்றன. சட்டென்று மாறும் வானிலை, சடசடவென மழையாகக் கொட்டித் தீர்க்கிறது. பரவலாக, தமிழகத்தின் நிலை இதுதான் என்றாலும்கூட மொத்த மக்களின் கவனமும் சென்னையின்மீதே விழுந்திருக்கிறது. வெளியூர் சொந்த பந்தங்களிடமிருந்து, `உங்க ஏரியாவுல வெள்ளமா...’, `மழை விடாம பெய்யுதாமே...’, `பத்திரமா இருக்கீங்களா?’... இப்படியான பதற்ற விசாரிப்புகள் சென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இத்தனைக்கும் இந்த முறை பெய்தது அப்படியொன்றும் பேய்மழை அல்ல. ஓரளவு நின்று பெய்யும் அரை மணி நேர மழைக்கே தண்ணீரில் தத்தளிக்கிறது தலைநகரம். கூடவே 2015-ல் சென்னையைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தின் கோர நினைவுகளும் சூழ்ந்துகொள்ள... கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் மக்கள்.
2015 சென்னை பெருவெள்ளத்தின்போது 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தார்கள். 260-க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்கள். மிகப்பெரிய பேரிழப்பைச் சந்தித்தது சென்னை. ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் அதன் வடுவும் மாறவில்லை; வலியையும் மறக்க முடியவில்லை. அதேபோல மீண்டுமொரு பேரிடர் ஏற்பட்டால் என்னவாகும்... தலைநகரம் மிதக்குமா, மீளுமா... மழைக்கான முன்னேற்பாடுகள் எந்த அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன... 2015-ல் கற்றுக்கொண்ட படிப்பினையை அரசு செயல்படுத்தியிருக்கிறதா... ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளனவா... இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிப் புறப்பட்டது ஜூ.வி டீம். கிடைத்த பதில்களெல்லாம் அதிர்ச்சி ரகம்!

அகற்றப்படாத 53,000 ஆக்கிரமிப்புகள்!
சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளே சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்கள். இவை தவிர, கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரியிலிருந்தும் சென்னைக்குத் தண்ணீர் பெறப்படுகிறது. அடையாறு, கூவம், கொசஸ்தலை என மூன்று ஆறுகள் நகரை ஊடறுத்துப் பாய்கின்றன. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்த அதிகாரிகள் குழு, ‘சென்னை நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும், மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படாததும் தான் வெள்ளம் நகருக்குள் புகுந்ததற்குக் காரணம். இதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது அரசு.
அன்றைக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கஜலெட்சுமி, அடையாறு ஆற்றை ஒட்டியிருந்த ஏராளமான ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிந்தார். அவருடன் வெள்ள மீட்புப் பணி சிறப்பு அதிகாரியாக இருந்த அமுதாவும் களமிறங்க... முடிச்சூர் - மணிமங்கலம் சாலையில் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த பெரும் சுற்றுச்சுவர்கள், கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பெருங்களத்தூர் அம்பேத்கர் நகர்ப் பகுதியில் 100-க்கும் அதிகமான ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு, பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் இடம் மீட்கப்பட்டது. இதன் மூலம் 20 மீட்டராக இருந்த அடையாறு ஆற்றின் அகலம், 60 மீட்டராக விரிவாக்கப்பட்டது. விநாயகபுரம், சைதாப் பேட்டை ஏரியாக்களில் ஆற்றங்கரையோரம் குடியிருந்த மக்களுக்கு மாற்று இடம் அளிக்கப் பட்டது. இவ்வளவு பெரிய படிப்பினைக்குப் பிறகு அரசு சுதாரித்திருக்கிறதா என்றால்... இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இது குறித்து நம்மிடம் பேசிய சூழல் செயற்பாட்டாளர்கள் சிலர், “கூவம் ஆற்றைச் சீரமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்தது. இந்த விவகாரத்தை 2019, ஜூலை 15-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தி.மு.க தாம்பரம்
எம்.எல்.ஏ ராஜா சட்டமன்றத்தில் கிளப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘71,262 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றில், 17,400 ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி, தகுந்த முடிவு எடுக்கப்படும்’ என்றார். முதல்வர் வீராவேசமாகச் சூளுரைத்து ஓராண்டாகி விட்டது. ஆனால், ‘வாயில் வடை சுட்ட கதையாக’ 53,862 ஆக்கிரமிப்புகள் அப்படியே இருக்கின்றன.
ஓலைக் குடிசைகள்தான் ஆக்கிரமிப்பா?
சரி, முதல்வர் அகற்றியதாகக் குறிப்பிட்ட 17,400 ஆக்கிரமிப்புகளும் ‘கல்வித்தந்தைகள்’ கட்டிய வானுயரக் கல்லூரிகளா, கார்ப்பரேட் மருத்துவ மனைகளா, பிரமாண்டமான ஜவுளிக் கடைகளா, மலைக்கவைக்கும் மால்களா என்றால் சத்தியமாக இல்லவே இல்லை. ஓலைக் குடிசையில் சாக்கைப் போட்டு ஒண்டியிருப்பவர்களை விரட்டிவிட்டு, ‘ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டோம்’ என்று பொல்லாத கணக்கு எழுதுகிறது அரசு. சொல்லப்போனால், அந்தக் குடிசைகளையெல்லாம் அகற்றவே தேவையில்லை... வெள்ளம் வந்தால், தானாக மிதந்து சென்றுவிடும்.
பாடிக்கு அருகேயுள்ள பிரபல துணிக்கடை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தை ஒரு குளத்தின்மீது அமைத்திருக்கிறார்கள். இதற்கு வருவாய்த்துறையே விதிமுறையை மீறி பட்டா கொடுத்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நில உபயோகத்தை மாற்றித் தரும்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் விண்ணப்பித்திருப்பதால், மேல் நடவடிக்கை ஏதுமில்லாமல் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. இது மட்டுமா..?
சென்னை மாதவரம் மண்டலத்தில் ஆக்கிரமிப்புகளால் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது புத்தகரம் தாங்கல் ஏரி. 2016-ல் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஏரியில் கட்டப்பட்டிருந்த 50-க்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டன. இந்தப் பணியைத் தொடங்கிய அன்றே, ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடங்கியது. அதோடு சரி... இன்றுவரை அங்கு ஆக்கிரமிப்புகள் நீடிக்கின்றன. இதற்கெல்லாம் உச்சமாக, தமிழக அரசே அந்த ஏரியில் கழிவுநீர் அகற்றும் மையத்தை அமைத்ததுதான் கொடுமையிலும் கொடுமை” என்று கொட்டித் தீர்த்தார்கள்.
இதைத் தொடர்ந்து தற்போதைய கள நிலவரம் அறிவதற்காக, அடையாறு கரையோரத்தில் ஜூ.வி டீம் பயணம் மேற்கொண்டது. 40 சதவிகித இடங்களில் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மீதியுள்ள இடங்களில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து பெயரளவுக்கு வேலை பார்த்திருக்கிறார்கள். பயணத்தின்போது நாம் சந்தித்த பொழிச்சலூரைச் சேர்ந்த டி.ரத்தினம், “தரப்பாக்கம், பொழிச்சலூர், கெருகம்பாக்கம், வரதராஜபுரம், அனகாபுதூர் பகுதிகள்ல அடையாறு கரைகளை பலப்படுத்தவே இல்லைங்க. இப்போ செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்டாங்கன்னா, 2015 வெள்ளம்போல வந்துடுமோன்னு பயத்தோடவே பொழுதைக் கழிக்கிறோம்” என்றார் அச்சத்துடன்.

பணக்காரர்களுக்குப் பாதுகாப்பு!
அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன், “இந்த ஏரியாவுல அஞ்சு வருஷமா ஒரு ஆற்றுப் பாலத்தைக் கட்டிக்கிட்டு இருக்காங்க. இன்னும் வேலை முடிஞ்சபாடில்லை. பல இடங்கள்ல ஆறு அகலப்படுத்தவுமில்லை, தூர்வாரவுமில்லை. அதனால, சின்னதா மழை பெஞ்சாக்கூட ஊருக்குள்ள தண்ணி புகுந்துடுது” என்றார் ஆற்றாமையுடன். ஆற்றங்கரையையொட்டி, ராமாவரத்திலிருக்கும் தனியார் மருத்துவமனை, தனியார் தொழில்நுட்பப் பூங்கா ஆகியவற்றின் பக்கவாட்டுச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், ஆற்றின் மறுகரையிலிருக்கும் ஜாபர்கான்பேட்டையில் அரசின் ஓரவஞ்சனை அப்பட்டமாகவே தெரிந்தது.
இது குறித்துப் பேசிய ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சித்திக், “அடையாறு ஆற்றின் ஒரு கரையில ஈக்காட்டுத்தாங்கல் இருக்கு. அங்கே கோடீஸ்வரங்க வசிக்குறாங்க. அதனால, அந்தப் பக்கம் இருக்கிற கரைகளை உயரமா எழுப்பியும், கழிவுகளை நீக்கியும் அரசாங்கம் நல்லாவே வேலை செஞ்சிருக்கு. மறுகரையில ஜாபர்கான் பேட்டை, சூளைப்பள்ளம், நெசப்பாக்கம், சைதாப்பேட்டை குடிசைப் பகுதிகள் வரை ஏழை, நடுத்தர மக்கள் இருக்கோம். இந்தப் பக்கம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அரசு எடுக்கலை. கரைகளும் பலப்படுத்தப்படலை. ஒருவேளை வெள்ளம் வந்தா, இந்த ஏரியா முழுக்கவே தண்ணி ரொம்பிடும்” என்றார் கவலையுடன்.

சென்னை சாலைகள் மிதப்பது ஏன்?
கொசஸ்தலை, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்களிலும் 30 முதல் 40 சதவிகித கரைகளே பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அவலம் ஒருபக்கம் என்றால், மழைநீர் வடிகால்வாய்களைப் பெயரளவுக்கு அமைத்துவிட்டு, அவற்றைக் கால்வாய்களுடன் இணைக்காமலேயே வைத்துள்ளனர். மழைநீர் வடிகால்வாய்கள் அனைத்துமே பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு... இவற்றில் ஒன்றுடன் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், மழைநீர் கடலில் கலக்க முடியும். இந்த இணைப்பைச் செய்யாததால், சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தால்கூட, சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றன.
இது பற்றி நம்மிடம் பேசிய சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்துறையின் சில அதிகாரிகள், “சென்னையின் உள் மற்றும் பிரதான சாலைகளின் மொத்த நீளம் சுமார் 3,000 கி.மீ. கடந்த 2015 சென்னை வெள்ளத்துக்குப் பிறகு மேற்கண்ட சாலைகளை ஆய்வு செய்ததில் 900 கி.மீ தொலைவுக்கு மட்டுமே மழைநீர் வடிகால்கள் இருப்பது தெரியவந்தது. இதற்காக, 334 இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 290 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ‘பிப்ரவரி, 2019-ம் ஆண்டுக்குள் வடிகால்கள் கட்டும் பணி நிறைவடையும்’ என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இன்றும் கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படிக் கட்டப்பட்ட இடங்களிலும்கூட, கூவத்தில் 89 இடங்களிலும், அடையாற்றில் 36 இடங்களிலும், பக்கிம்ஹாம் கால்வாயில் 132 இடங்களிலும் இணைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள், குப்பைகளாலும் சகதியாலும் அடைக்கப்பட்டிருக்கின்றன. இவை தூர்வாரப்படவில்லை” என்றார்கள்.
பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பனோ, “பாதிக்கும் மேல் ஏரி, குளங்கள் நிரம்பாததாலும், மழை தொடர்ச்சியாகப் பெய்யாததாலும் வெள்ளம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை. அதேசமயம், அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்தான் கவலையளிக்கின்றன. இதற்கு அ.தி.மு.க., தி.மு.க என இரு தரப்புமே முக்கியக் காரணம். பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, சென்னை மாநகருக்குள் மழைநீர் வடிகால்வாய்களைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒன்றுகூட அடையாறு, கூவம் கால்வாய்களோடு இணைக்கப்படவில்லை. இதனால், மழை பெய்தவுடன் தண்ணீர் வடிகால்வாய்க்குள் சென்று, அது நிரம்பியவுடன் சாலையில் பொங்கிவழிகிறது. சென்னையின் நீர் மேலாண்மைக் கட்டமைப்பில் மிகத் தவறான விஷயம் இது” என்றார் ஆதங்கத்துடன்.
நமது டீம் பார்த்தவரை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றங்கரை யோரப் பகுதிகளில் சுமார் 40 சதவிகிதம் மட்டுமே கரைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. மீதமிருக்கும் இடங்களில் பெயரளவுக்கு வேலை செய்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்கள் துறை 1,894 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டமைப்புகளையும்,
30 கால்வாய்களையும் பராமரித்துவருகிறது. இவை பெரிய கால்வாய்களுடன் இணைக்கப்படாததால், மழைநீர் சாலையிலேயே தேங்கிவிடுகிறது. இதேநிலை தொடர்ந்தால், நூறாண்டுகள் காணாத வரலாற்று மழையெல்லாம் தேவையில்லை... சென்னை மாநகரை மூழ்கடிப்பதற்கு மூன்று மணி நேர மழை போதும். அரசு துரிதமாகச் செயல்பட்டு, பலப்படுத்தப்படாமல் இருக்கும் பகுதிகளில் கரைகளை பலப்படுத்துவதுடன், மழைநீர் வடிகால்வாய் இணைப்புகளையும் சீரமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே 2015 துயரச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்.
மழை நீர் உயிர் நீர்... அதுவே உயிரைப் பறிக்கும் படி செய்துவிடக் கூடாது இந்த அரசு!
***
இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
மேக வெடிப்பு அபாயம்!
“காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு, ‘குறைந்த நேரத்தில் அதிதீவிர மழைப் பொழிவு’ ஏற்படலாம். உதாரணமாக, கேரளாவின் சராசரி மழையளவு 3,000 மி.மீ. சுமார் இரண்டரை மாதங்களிலிருந்து மூன்று மாதங்களில் இந்த அளவை எட்டுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் ஒரே வாரத்தில் சுமார் 1,500 மி.மீ அளவுக்கு கேரளாவில் மழை பொழிந்தது. மூணாறு நிலச்சரிவுக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். சென்னையில் எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு 1.25 லட்சம் கன அடி அளவுக்குச் சென்று சேர வேண்டிய கொற்றலை ஆற்று நீர், எண்ணூர் துறைமுகம் மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையம் ஆக்கிரமிப்புகளால் 50 ஆயிரம் கன அடிகூட சென்று சேரவில்லை. அந்த நீர், குடியிருப்புகளுக்குள் புகுந்துவிட்டிருக்கிறது. 2015 வெள்ளத்துக்குப் பிறகு, இதே எண்ணூர் பகுதி சதுப்பு நிலத்தில் சுமார் 600 ஏக்கர்களை அரசே ஆக்கிரமித்திருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளைத் தூர்வாரி, மீட்டுருவாக்கம் செய்தால் மட்டுமே வெள்ள ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்.”
- சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

“அச்சம் வேண்டாம்!”
“செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகபட்சமே 33,000 கன அடி நீர்தான் திறந்துவிட முடியும். ஆனால், 2015-ல் ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் அடையாற்றில் ஓடியது. தவிர, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செம்பரம்பாக்கம், தாம்பரம் பகுதிகளில் கனமழை பெய்ததும் அந்த வெள்ளத்துக்கு ஒரு காரணம். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இப்போதே தண்ணீரைத் திறந்துவிட்டால், வரும் நாள்களில் மழை வரவில்லையென்றால், தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும். அதேசமயம், இந்த வருடம் சென்னைக்கு வெள்ளம் வருமா, வராதா என்பதைப் பெய்யப்போகும் மழை அளவைவைத்துத்தான் சொல்ல முடியும். ஒருவேளை 2015-ம் ஆண்டு அளவுக்கு மழை பெய்தால், வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மழை அளவை நாம் ஓரிரு நாள்களுக்கு முன்னர்தான் கூற முடியும். ஆனாலும், மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம்.”
- பிரதீப் ஜான், தமிழ்நாடு வெதர்மேன்
***
தமிழக அரசின் நீர் மேலாண்மைக்குச் ‘சிறந்த’ உதாரணமாகச் சோழவரம் ஏரியைச் சொல்லலாம். காரணம், சென்னையைச் சுற்றி தொடர்ச்சியாக கனமழை பொழிந்து, பெரும்பாலான ஏரிகள் நிரம்பியிருக்கும் நிலையில், 1,081 கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் இன்றுவரை (19.11.2020) 170 கனஅடி நீர் மட்டுமே நிரம்பியிருக்கிறது. ஏரிக்கு நீர்வந்து சேரும் கால்வாய்கள் மற்றும் நீர்வழித் தடங்களின் ஆக்கிரமிப்பும் பராமரிப்பின்மையுமே இந்நிலைக்குக் காரணம். அதனாலேயே ஏரிக்கு வந்துசேர வேண்டிய நீர் எங்கோ சாலையிலோ, குடியிருப்பு பகுதியிலோ தேங்கி நின்று மக்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் நீர் மேலாண்மை நிபுணர்கள்.
பிற மாவட்டங்களின் நிலை என்ன?
* கடந்த 2015-ல் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்தபோது சுமார் 16 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, 4,500 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அந்த அச்சத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. விழுப்புரத்தைப் பொறுத்தவரை பேருந்து நிலையம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி, கலைக் கல்லூரி என அனைத்தும் ஏரிகளை ஆக்கிரமித்தே கட்டப்பட்டிருப்பதால், மழைக்காலங்களில் ஊரே தண்ணீரில் மிதக்கிறது. வீடூர் மற்றும் சாத்தனூர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஊருக்குள் புகுந்து தாண்டவமாடுகிறது. நீர்நிலைகள் அனைத்தையும் அரசும் தனியாரும் போட்டி போட்டுக்கொண்டு கூறுபோட்டுவிட்டதால், ‘பாதுகாப்பாக இருங்கள்’ என்று மக்களை அறுவுறுத்துவதைத் தவிர மாவட்ட நிர்வாகத்தால் எதையும் செய்ய முடியவில்லை.
* கடலூர் மாவட்டம் புவியியல்ரீதியாகவே ஆறுகளின் வடிகால் பகுதியாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை இயற்கைச் சீற்றத்துக்கு உள்ளாகிவருகிறது. கெடிலம், தென்பெண்ணை, பரவனாறு, உப்பனாறு, வெள்ளாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளும் வடிநீர் ஆறுகளாகவே அமைந்திருப்பதால், இங்கு மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கைத் தவிர்க்க முடியவில்லை. பெருக்கெடுத்து வரும் வெள்ளம் உப்பனாற்றில் கலக்க முடியாதபடி, சிப்காட் தொழிற்சாலைகள் மதில் சுவர்களை எழுப்பியிருக்கின்றன. இதனால், 2015-ல் சோனாஞ்சாவடியில் வெள்ளம் புகுந்ததால், அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அக்ரஹாரத்து ஏரியின் நீர்வழிப்பாதைகள் கடுமையான ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கின்றன. இதனால், சமீபத்தில் பெய்த மழையால் ஏரி நிரம்பி வழிந்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
* திருநெல்வேலியில், மேலப்பாளையம் காயிதே மில்லத் நகரில் மழைநீர் செல்லும் கால்வாய் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதால் கடந்த வாரம் பெய்த மழையிலேயே சாலைகள் குளமாக மாறின. ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக வெள்ளநீர் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.