சமூகம்
Published:Updated:

“கோலமிடுவது கலாசார உரிமை... கமிஷனரே அவதூறு பரப்பலாமா?”

காயத்ரி கந்தாதை
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி கந்தாதை

பாகிஸ்தான் ஆதரவு சர்ச்சை... கடுகடுக்கும் காயத்ரி கந்தாதை

‘‘கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு, பாகிஸ்தானுடன் தொடர்பு’’ - இப்படியொரு பகீர் குண்டை வீசியிருக்கிறார், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். அதையடுத்து, ‘‘போராடத் துணிபவர்களை ஒடுக்க எடுக்கப்படும் பயமுறுத்தும் நடவடிக்கைதான் இது’’ என்ற விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு அமல்படுத்தியபோது, அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. கட்சித் தலைவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக, ‘வேண்டாம் CAA, வேண்டாம் NRC’ என்ற வாசகத்தை வீட்டுவாசலில் கோலமிட்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை சிலர் முன்னெடுத்தனர்.

டிசம்பர் 29-ம் தேதி, சென்னை பெசன்ட்நகரில் தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் இப்படிக் கோலமிட்டு போராட்டம் நடத்தியவர்களை உடனடியாக அப்புறப்படுத்த முயன்றது போலீஸ். எவ்வளவோ முயன்றும் போராட்டக்காரர்கள் கலையாததால், இறுதியில் அவர்களைக் கைதுசெய்தது போலீஸ்.

“கோலமிடுவது கலாசார உரிமை... கமிஷனரே அவதூறு பரப்பலாமா?”

கைதுசெய்யப்பட்டவர்கள் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் பற்றவைத்த ‘கோல நெருப்பு’ தமிழகமெங்கும் காட்டுத்தீயாகப் பரவியது. போராட்டக்காரர் களை அறிவாலயத்துக்கே அழைத்து தன் ஆதரவைத் தெரிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். `தி.மு.க மகளிரணியினர் அனைவரும் தங்கள் வீடுகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கோலமிட வேண்டும்’ என்று, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி உத்தரவிட்டார். தி.மு.க தலைவர்களின் வீடுகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கோலங்கள் பளிச்சிட்டன. வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், தானே களமிறங்கி வேளச்சேரி வி.சி.க அலுவலகத்தில் கோலமிட்டார்.

பெசன்ட்நகர் பீச்சோடு முடிந்திருக்கக்கூடிய இந்தப் போராட்டத்தை தமிழகமெங்கும் பரவவைத்த பெருமை, சென்னை போலீஸைத்தான் சாரும். போராட்டக்காரர்களை அவர்கள் கைதுசெய்த பிறகே, தமிழகமெங்கும் கோலப்போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. தி.மு.க-வினர் மட்டுமல்லாது, இதற்கு முன்பு தங்கள் வீடுகளில் கோலம் போட்டு பழக்கமே இல்லாத முஸ்லிம்களும் தங்கள் வீட்டு வாசலில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

காயத்ரி கந்தாதை
காயத்ரி கந்தாதை

இந்த நிலையில், புத்தாண்டு அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ‘‘கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்களில் காயத்ரி கந்தாதை என்கிற பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில், அந்தப் பெண் ‘பைட்ஸ் ஃபார் ஆல்’ என்ற பாகிஸ்தான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம், ‘அசோசியேஷன் ஆஃப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜர்னலிஸ்ட்’ என்ற அமைப்பைச் சேர்ந்ததாக இருக்கிறது. காயத்ரி எந்த அளவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளார், இவருக்கும் அந்த அமைப்புக்கும் என்ன தொடர்பு என விசாரித்துவருகிறோம். அறப்போர் இயக்கம், ‘வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா’ என இங்கு இருக்கும் சில அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக உள்ளன.

“கோலமிடுவது கலாசார உரிமை... கமிஷனரே அவதூறு பரப்பலாமா?”

கோலம் போடும் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. அதையும் மீறி பெசன்ட்நகரில் சிலர் கோலம் போட்டனர். அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், ஒருவர் வீட்டில் ஏற்கெனவே போட்டிருந்த கோலத்தில் `NO TO CAA, NRC’ என எழுதினார்கள். அந்த வீட்டில் இருந்த 92 வயது முதியவர், `யாருடைய அனுமதி பெற்று இப்படிச் செய்கிறீர்கள்?’ எனக் கேட்க, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீஸுக்கு தகவல் கிடைத்தவுடன், போராட்டம் நடத்தியவர்களை அங்கேயிருந்து கிளம்புமாறு அறிவுறுத்தி, வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றோம். பொதுமக்களிடம் பிரச்னை செய்ததால்தான் இந்த விவகாரத்தில் போலீஸ் தலையிட்டது. கோலம் போட்டதால் யாரும் கைதுசெய்யப்படவில்லை” என விளக்கமளித்தார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ‘‘கோலப் போராட்டத்துக்கு நாங்கள் மட்டுமா ஆதரவு தெரிவித்தோம். இதில் எங்கள் பெயரை மட்டும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சில மாதங்களுக்கு முன் கூட்டம் ஒன்று நடத்துவதற்காக போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். அவரோ அமைச்சர் வேலுமணியிடம் அனுமதி வாங்கிவரச் சொன்னார். நாங்கள் மறுத்துவிட்டோம். இதனால் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு வழிகளில் எங்களுக்கு இடையூறு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது இப்படியொரு குற்றச்சாட்டை எங்கள்மீது சுமத்துகிறார்’’ என்றார்.

“கோலமிடுவது கலாசார உரிமை... கமிஷனரே அவதூறு பரப்பலாமா?”

‘வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள், கமிஷனர்மீது வழக்கு தொடர இருப்பதாகக் கூறினர்.

இந்த நிலையில் மதுரை ‘மக்கள் கண்காணிப்பகம்’ அலுவலகத்துக்கு வந்திருந்த காயத்ரி கந்தாதையிடம் பேசினோம்.

‘‘வழக்குரைஞரான நான், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிவருகிறேன். எனக்கு தொடர்புள்ளதாக கமிஷனர் கூறிய ‘பைட்ஸ் ஃபார் ஆல்’ என்ற அமைப்பு, பாகிஸ்தானில் இயங்கிவரும் ஒரு மனித உரிமை அமைப்பு.

“கோலமிடுவது கலாசார உரிமை... கமிஷனரே அவதூறு பரப்பலாமா?”

பாகிஸ்தான், பர்மா, மலேசியா, பங்களாதேஷ் உட்பட நாடுகளில் மத சிறுபான்மையினர், நாத்திகர்கள், மாற்றுப் பாலினத்தவர் எப்படியெல்லாம் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்று 2015-16 ஆண்டுகளில் கட்டுரைகள் எழுதியிருந்தேன். பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியும் அதில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரைகளை முழுமையாகப் படித்துப்பார்க்காமல் பொத்தாம்பொதுவாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக எழுதியதாக கமிஷனர் அவதூறு பரப்புகிறார்.

கோலம் போடுவது கலாசார உரிமை. பெசன்ட்நகரில் நாங்கள் கோலம் போட்டபோது, வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்துடன்தான் கோலமிட்டோம். எங்களை கைதுசெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், நாங்கள் அங்கு செல்வதற்கு முன்பே போலீஸார் திரளாகக் கூடியிருந்தனர். வீட்டு உரிமையாளரின் அனுமதியில்லாமல் கோலம் போட்டு நாங்கள் பிரச்னையில் ஈடுபட்டதாகச் சொல்வது தவறு’’ என்றார் விளக்கமாக.