
முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இருப்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால். அவர் எதிர்ப்பையும் மீறித்தான் மாநகர காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்பட்டதாம்.
சில நாள்களுக்கு முன்பு ‘தாம்பரம், ஆவடி ஆகியவை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்’ என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, ‘சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும்’ என்று செப்டம்பர் 13-ம் தேதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு உடன்பாடு இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் முணுமுணுக்கும் நிலையில், இன்னொரு பக்கம் இரண்டு புதிய போலீஸ் கமிஷனர் பதவிகளைப் பிடிக்க ரேஸ் சூடுபிடித்திருக்கிறது.

‘ஏன் பிரிக்கப்படுகிறது சென்னை மாநகர காவல்துறை, புதிய கமிஷனர் பதவி ரேஸில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?’ என்பதை அறிய காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். நம்மிடம் பேசிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், “வடக்கே மணலியில் தொடங்கி, தெற்கே வண்டலூர் வரையிலும், மேற்கே நசரத்பேட்டையில் ஆரம்பித்து கிழக்கே ஈ.சி.ஆர் மாயாஜால் வரையிலும் சென்னை பெருநகர காவல்துறையின் எல்லைகள் விரிந்திருக்கின்றன. மொத்தம் 12 காவல் மாவட்டங்களின்கீழ் 135 காவல் நிலையங்கள் பெருநகர காவல் எல்லைக்குள் வருகின்றன. பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்களின் எண்ணிக்கையையும் உயர்த்தவேண்டியிருக்கிறது. இவற்றை நிர்வகிப்பது சென்னை காவல்துறைக்குக் கூடுதல் சுமையாகிவிடும் என்பதால்தான், சென்னை காவல்துறையை மூன்றாகப் பிரித்து ஆவடியிலும் தாம்பரத்திலும் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
சென்னை காவல் எல்லையிலிருந்து தாம்பரம், குரோம்பேட்டை, அடையாரின் சில பகுதிகள், செங்கல்பட்டு காவல் எல்லையிலிருந்து கூடுவாஞ்சேரி ஆகிய காவல் மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்படுகிறது. சென்னை விமான நிலைய காவல் எல்லையையும் தாம்பரம் ஆணையரகத்துடன் இணைக்கலாமா என்று ஆலோசனை நடைபெறுகிறது. அதேபோல, சென்னையிலிருந்து அம்பத்தூர், பூந்தமல்லி, அண்ணாநகர் காவல் மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில காவல் நிலையங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்கப்படவிருக்கிறது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, ஆணையரகங்களுக்குக் காவல் எல்லையைப் பிரிக்கும் பணி விரைவுப்படுத்தப்படவிருக்கிறது” என்றவர்கள், புதிய கமிஷனர் பதவிக்கான ரேஸில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்கள்.

“தாம்பரம் போலீஸ் கமிஷனராக ஏ.டி.ஜி.பி ரவியும், ஆவடிக்கு சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருக்கும் தாமரைக்கண்ணனும் நியமிக்கப்படலாம் என்று பேச்சு இருக்கிறது. ஆனால், ஏ.டி.ஜி.பி அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டால், அவர்கள் கட்டுப்பாட்டில் குறைந்தது 50 காவல்நிலையங்களாவது இருக்க வேண்டும் என்பது மரபு. ஆவடிக்கும் தாம்பரத்துக்கும் புதிதாக தலா 30 காவல் நிலையங்கள் வருவதே சந்தேகம்தான். இதனால், ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரிகளை நியமிக்கலாம் என அதிகாரிகள் முதல்வரிடம் ஆலோசனை அளித்திருக்கிறார்கள். திருநெல்வேலி, ஈரோடு காவல் ஆணையர்களாக ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரிகள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றனர்.
முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இருப்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால். அவர் எதிர்ப்பையும் மீறித்தான் மாநகர காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்பட்டதாம். இந்தப் பிரிப்பை முடிவு செய்வதற்கான கூட்டத்துக்குக்கூட அவர் அழைக்கப்படவில்லை என்பதால், சங்கர் ஜிவால் தரப்பு மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், வேறு துறைக்கு அவர் மாறுதல் கேட்டதாகவும், காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இது பற்றியும் நம்மிடம் பேசிய சென்னை காவல்துறை உயரதிகாரி ஒருவர், “மாநகர காவல்துறையைப் பிரிப்பதற்கு தொடக்கத்திலிருந்தே சங்கர் ஜிவால் எதிர்ப்பு தெரிவித்துவந்தார். ‘ஒரே குடையின் கீழ் மாநகர காவல்துறை இருந்தால்தான், நிர்வகிப்பதற்குச் சிரமம் இருக்காது’ என்று அவர் கூறியதை டி.ஜி.பி., உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., முதல்வர் அலுவலக அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால் சங்கர் ஜிவாலுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது உண்மைதான். முதல்வர் அலுவலகத்திடமும் தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். அதற்காக வேறு துறைக்கு சங்கர் ஜிவால் மாறுதல் கேட்கவில்லை. சென்னை மாநகர காவல்துறை கமிஷனராக தொடரவே அவர் விரும்புகிறார்” என்றனர்.
தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரிகளை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடைபெறுவதால், ஆணையர் பதவியைப் பிடிக்க ரேஸ் சூடு பிடித்திருக்கிறது. ஐ.ஜி-க்கள் வனிதா, பிரேம் ஆனந்த் சின்ஹா, அன்பு உள்ளிட்டவர்கள் இதில் முன்னிலையில் உள்ளனர்.
தி.மு.க தரப்புக்கு ஏ.டி.ஜி.பி ரவி நெருக்கமானவர் என்பதால், அவரை தாம்பரம் ஆணையராக பணியமர்த்த செனடாப் ரோட்டில் ஆலோசனை பரபரக்கிறது என்கிறார்கள். ‘மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளையும் இணைத்து தாம்பரம் காவல் ஆணையர் பதவிக்கு மட்டும் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தை வழங்கிவிட்டு, ஆவடிக்கு ஐ.ஜி-யை ஆணையராக்கலாம்’ என்றொரு ஆலோசனையும் ஓடுகிறது. புதிய ஆணையர் பதவியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும்வரை இந்தப் பரபரப்பு ஓயாது என்கிறார்கள் காக்கிகள்.
ஏற்கெனவே சென்னை புறநகர் ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டபோது சென்னை மாநகர போலீஸ் இரண்டானது. ஆனால், சில ஆண்டுகளிலேயே அந்தப் பதவி ஒழிக்கப்பட்டு சென்னை ஒருங்கிணைந்தது. இப்போது என்னவாகுமோ?