“இடி விழுந்த மாதிரி ஒரு சத்தம்... குடும்பமே சிதைஞ்சுபோச்சே...” - கதறித்துடிக்கும் மாற்றுத்திறனாளி!

ஆஸ்பத்திரியில இருந்தப்போ, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்த்துட்டுப் போனார். குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலை கொடுக்கணும், நிவாரண உதவி வழங்கணும்னு கேட்டோம்
ஒரே நாள் மழை... வீடு இடிந்து, மனைவி இறந்து, மகள் சுயநினைவு இழந்து, கைக்குழந்தையின் அழுகையுடன் தவித்துக்கொண்டிருக்கிறார் மாற்றுத்திறனாளி கேசவேல்.
சென்னை சைதாப்பேட்டை, நெருப்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் கேசவேல். மாற்றுத்திறனாளியான இவர், அதே பகுதியிலுள்ள கடையில் பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்துவந்தார். மனைவி லட்சுமி, குழந்தைகள் கிருத்திகா, மோனிகா என சந்தோஷ வாழ்க்கை நடத்திவந்த கேசவேலின் குடும்பத்தை, கடந்த 9-ம் தேதி சென்னையைத் தாக்கிய மாண்டஸ் புயல், ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்டுவிட்டது.

அன்றைய தினம் இரவு பெருமழையுடன் வீசிய காற்றில், கேசவேலின் சின்னஞ்சிறு வீட்டின் மீது பக்கத்து அடுக்குமாடி வீட்டின் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில், கேசவேலின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட மொத்தக் குடும்பமும் இடிபாடுகளுக்குள் சிக்கி, படுகாயமுற்றனர். இதில், லட்சுமி, சிறுமி கிருத்திகா இருவருக்கும் உடலிலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. கேசவேலுக்குத் தலையில் பலத்த காயம். கைக்குழந்தையான மோனிகா லேசான காயத்துடன் உயிர் தப்பினாள். அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் லட்சுமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், குழந்தை கிருத்திகாவை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஐ.சி.யூ-வில் வென்டிலேட்டர் உதவியுடன் லட்சுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ‘‘இதயத்துடிப்பு இருக்கிறது... எனவே காப்பாற்றிவிடலாம்’’ என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால், மருத்துவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார் லட்சுமி.
தலைக் காயத்துக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த கேசவேல், மனைவியின் மரணச் செய்தியைக் கேட்டு மயக்க நிலைக்குச் செல்லவே, மறுபடியும் அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேசவேலைச் சந்தித்துப் பேசினோம். “அன்னைக்கு நைட்டு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். வீட்டுல சாப்பாடு பண்ணாததால பொண்டாட்டிக்கும் புள்ளைகளுக்கும் பக்கத்து கடையிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். எல்லாரும் சந்தோஷமா சாப்பிட்டுட்டு படுத்தோம். நல்ல தூக்கத்துல இருந்தப்ப, திடீர்னு இடி விழுந்தா மாதிரி பெரிய சத்தம் கேட்டுச்சு. அவ்வளவுதான் சார்... என் பொண்டாட்டியும், என்னோட மூன்றரை வயசு குழந்தையும் ரத்த வெள்ளத்துல துடிச்சுக்கிட்டு கிடந்தாங்க...’’ என்று நினைவுகூர்ந்தவர் மேற்கொண்டு பேச முடியாமல் அழுதார்.
கேசவேலின் மூன்றரை வயது மகள் கிருத்திகா ஒரு வாரத்துக்கும் மேலாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். குழந்தையின் தற்போதைய நிலை குறித்து மருத்துவமனையின் இயக்குநர் எழிலரசியிடம் பேசினோம். “கிருத்திகா எப்படி அனுமதிக்கப்பட்டாளோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறாள். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகிறோம். விரைவில் உடல்நலம் பெறுவாள் என எதிர்பார்க்கிறோம். அனைத்து வகையான மருத்துவ உதவிகளையும் செய்துவருகிறோம். குழந்தையின் தலை மற்றும் மூளையில் பலமாக அடிபட்டிருக்கிறது. அதனால், குழந்தை மீண்டுவர இன்னும் காலமெடுக்கும்.” என்றார்.
நம்மிடம் பேசிய கேசவேலின் தாய் அலமேலு, “எங்களுக்குச் சொந்த ஊரு திருவண்ணாமலை. எனக்கு மூணு பொண்ணு. கேசவேலு ஒரே பையன். அங்க வேலை ஏதும் இல்லாததால ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கு வந்தான். என் பையன்தான் இப்படி இருக்கான்... அவனுக்குப் பொறக்குற புள்ளைகளாவது எந்தக் குறையுமில்லாம கை கால் நல்லா இருக்கணும்னு எப்பவும் வேண்டிப்பேன். அந்தச் சாமியும் நல்ல ஆரோக்கியத்தோட ரெண்டு பேரக் குழந்தைங்களைக் குடுத்துச்சு. கஷ்டப்படுற குடும்பம்னாலும் குருவிக்கூடு மாதிரி சந்தோஷத்துக்குப் பஞ்சமே இருக்காது. ஆனா, இந்த பாழாப்போன புயல் மழையில இப்பிடி எம்புள்ளயோட குடும்பமே ஒட்டுமொத்தமா நொறுங்கிப்போச்சே...’’ என்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.
கேசவேலுன் தங்கை சங்கீதா, “எங்க அண்ணனால இனி முன்ன மாதிரி வேலை செய்ய முடியாது. ஆஸ்பத்திரியில இருந்தப்போ, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்த்துட்டுப் போனார். குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலை கொடுக்கணும், நிவாரண உதவி வழங்கணும்னு கேட்டோம். ஆனா, அரசு நிவாரண உதவி வழங்குறது சம்பந்தமா இதுவரைக்கும் யாரும் எதுவும் சொல்லலை. அரசு உதவி இல்லாட்டி அண்ணன் குடும்பத்தால தாக்குப்பிடிக்க முடியாது” என்றார் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு.
இந்தச் சம்பவத்தில், கேசவேலின் ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையான மோனிகா சிறிய அளவிலான காயங்களோடு உயிர் தப்பிவிட்டாலும், அம்மாவைத் தேடி அழும் அதற்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியாமல் தவிக்கிறது ஒட்டு மொத்தக் குடும்பமும். தாயின் அரவணைப்பும், தாய்ப்பாலும் கிடைக்காமல் வீறிடும் அந்தக் குழந்தையின் அழுகை நம் இதயத்தையும் கனக்கச் செய்கிறது.
புயலால் சிதைந்துபோன கேசவேலின் குடும்பத்துக்கு உதவுமா அரசு?