Published:Updated:

இடம், பொருள், ஆவல்: குறுகலான சாலையின் பெயர் பிராட்வே... இதை உருவாக்கிய ஆங்கிலேயர் யார் தெரியுமா?!

பிராட்வே
News
பிராட்வே

கறுப்பர் நகரத்தின் மத்தியில், முத்தியால்பேட்டையையும் பெத்தநாயக்கன்பேட்டையையும் பிரிக்கும் நீண்ட கழிவுநீர் ஓடை ஒன்று 12 அடி ஆழத்தில் அப்போது ஓடிக் கொண்டிருந்தது.

Published:Updated:

இடம், பொருள், ஆவல்: குறுகலான சாலையின் பெயர் பிராட்வே... இதை உருவாக்கிய ஆங்கிலேயர் யார் தெரியுமா?!

கறுப்பர் நகரத்தின் மத்தியில், முத்தியால்பேட்டையையும் பெத்தநாயக்கன்பேட்டையையும் பிரிக்கும் நீண்ட கழிவுநீர் ஓடை ஒன்று 12 அடி ஆழத்தில் அப்போது ஓடிக் கொண்டிருந்தது.

பிராட்வே
News
பிராட்வே
குறுகலாக இருக்கும் இந்தச் சாலைக்கு ஏன் ‘பிராட்வே' என்று பெயர் வைத்தார்கள் என சென்னை பிராட்வேக்கு வரும் பலருக்கு நினைப்பு எழும். ஒரு காலத்தில் சென்னையின் இதயமாக இருந்த பகுதி பிராட்வே; சென்னையிலிருந்து வெளியூர் போக இங்குதான் பஸ் பிடிக்க வேண்டும். சென்னையின் முக்கிய அடையாளமான பிராட்வே சாலை, ஒரு கழிவுநீர் ஓடையைத் தூர்த்து உருவாக்கப்பட்டது என்பது ஆச்சர்யமான வரலாறு!
பிராட்வே
பிராட்வே

17-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களின் பிடியிலிருந்தது மதராஸப்பட்டினம். அப்பேரரசின் பிரதிநியாக மதராஸப்பட்டினத்தை நிர்வகித்து வந்தார் வேங்கடாத்ரி நாயக்கர். 1639-ல் இவரிடம் பேசி இந்த நிலப்பகுதியை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதி சர் பிரான்சிஸ் டே வாங்கினார்.

ஐந்தே ஆண்டுகளில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டி, அதைத் தங்கள் அதிகாரப்பூர்வ தலைமையகமாகக் கொண்டு வணிகத்தை ஆரம்பித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. கோட்டைக்குள் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு சேவகம் செய்யும் பணி உள்ளூர் மக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த மக்களுக்குக் கோட்டையை ஒட்டி வாழ்விடங்களை அமைத்துத் தந்தது கம்பெனி.

கோட்டைக்கு உள்ளே ஆங்கிலேயர்கள் வாழ்ந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்' என்றும், கோட்டைக்கு வெளியே உள்ளூர் மக்கள் வாழ்ந்த பகுதி ‘கறுப்பர் நகரம்' என்றும் ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டது. கோட்டையின் வடக்குச் சுவரை ஒட்டி, இப்போது ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றக் கட்டடங்கள் அமைந்திருக்கும் பகுதியில் தொடங்கியது கறுப்பர் நகரம். இங்கு உள்ளூர் மக்களும் வணிகம் செய்வதற்காகச் சென்னைக்கு வந்த பல்வேறு இன மக்களும் வாழ்ந்து வந்தார்கள்.

வெள்ளையர் நகரம் - கறுப்பர் நகரம்
வெள்ளையர் நகரம் - கறுப்பர் நகரம்

இப்படி வளரத் தொடங்கிய மதராஸப்பட்டினம், 1746-ல் நடந்த போரில் பிரெஞ்சுகாரர்களின் வசமானது. நான்கே ஆண்டுகளில் பிரிட்டிஷார் மதராஸப்பட்டினத்தை மீண்டும் கைப்பற்றினார்கள். கோட்டையை ஒட்டி நெருக்கமாக கறுப்பர் நகரம் இருந்தால், எதிரிகள் உள்ளே வந்துவிடுவார்கள் என்று பயந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், கறுப்பர் நகரத்தை அழித்துத் தரைமட்டமாக்கினர்.

அங்கே வசித்தவர்களுக்கு முத்தியால்பேட்டை, பெத்தநாயக்கன்பேட்டை ஆகிய இரு பகுதிகளிலும் இடம் கொடுத்தனர். அந்தப் பகுதி புதிய கறுப்பர் நகரமாக உருவானது.

இடங்கை பிரிவினர் என்று அழைக்கப்பட்ட சிறு வணிகர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் முத்தியால்பேட்டையிலும், வலங்கை பிரிவினர் என்று அழைக்கப்பட்ட வர்த்தகர்கள், நில உடைமையாளர்கள், பட்டயக் கணக்காளர்கள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தரகர்கள் பெத்தநாயக்கன்பேட்டையிலும் வாழ்ந்துவந்தார்கள். இரண்டு பேட்டைகளுக்கும் இடையில், தோட்டங்களும் வயல்வெளிகளும் அமைந்திருந்தன.

கட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய கறுப்பர் நகரம் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆங்கிலேயே நகர உருவாக்கத்தின் தொடக்க கால உதாரணங்களில் ஒன்றாகும். மதராஸப்பட்டினம் என்னும் கிராமம், மெட்ராஸ் என்னும் நகரமாக பரிணமிக்க இதுவே காரணமானது.

மெட்ராஸ் மாநகரம்
மெட்ராஸ் மாநகரம்

கறுப்பர் நகரம் மெட்ராஸின் முதன்மை வணிக மையமாக உருவெடுத்தது. இதன் விளைவாக பிரிட்டிஷார் மட்டுமின்றி போர்ச்சுகீசியர்கள், ஆர்மேனியர்கள் போன்ற வேறு பல நாட்டினரும் புதிய கறுப்பர் நகரத்தில் அதிகளவில் குடியேறத் தொடங்கினார்கள். புதிய கறுப்பர் நகரத்தின் எல்லைகளைக் குறிக்கும் வகையில் நகரைச் சுற்றிலும் எல்லை ஸ்தூபிகள் நிறுவப்பட்டன. அவற்றில் ஒன்று மட்டும் இப்போது பாரிமுனை டேர் மாளிகையின் முன்பு நின்றுகொண்டிருக்கிறது.

வெள்ளையர் நகரம் என்பது தூய்மையான, ஒழுங்குமிக்க, ஆங்கிலேயத் தன்மையுடன் நிர்வகிக்கப்பட்டது. கறுப்பர் நகரமோ அலங்கோலமாகக் கிடந்திருக்கிறது. வெள்ளையர் நகரத்துக்குள் இடம் கிடைக்காத வெளிநாட்டு வணிகர்களும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் கறுப்பர் நகரத்துக்குள் வசித்தாலும், அப்பகுதியை மேம்படுத்தவில்லை பிரிட்டிஷ் நிர்வாகம்.

கறுப்பர் நகரத்தின் மத்தியில், முத்தியால்பேட்டையையும் பெத்தநாயக்கன்பேட்டையையும் பிரிக்கும் நீண்ட கழிவுநீர் ஓடை ஒன்று 12 அடி ஆழத்தில் அப்போது ஓடிக் கொண்டிருந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் ஸ்டீபன் பாப்ஹேம் என்ற பிரிட்டிஷ் வழக்கறிஞர் மெட்ராஸ் நகரத்துக்கு வந்துசேர்ந்தார். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், சில காரணங்களால் பெரும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தார். இந்தியாவில் வழக்கறிஞர் தொழில் செய்து சம்பாதிக்கலாம் என்று வந்தார்.

ஸ்டீபன் பாப்ஹேம்
ஸ்டீபன் பாப்ஹேம்
ஹாசிப் கான்

சென்னையிலேயே தங்க நினைத்த பாப்ஹேமுக்குக் கறுப்பர் நகரத்தில் வீடு கிடைத்தது. முத்தியால்பேட்டையையும் பெத்தநாயக்கன்பேட்டையையும் பிரிக்கும் கழிவுநீர் ஓடையை ஒட்டி பாப்ஹாமின் வீடு அமைந்திருந்தது. கறுப்பர் நகரத்தின் அவலமாக இருந்த அந்த கழிவுநீர் ஓடையை மூட நினைத்தார் பாப்ஹேம்.

இன்றைய பார்க் டவுன் பகுதியில் அப்போது நரிமேடு எனும் சிறு குன்று இருந்தது. கோட்டையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த அந்தக் குன்றை உடைக்கத் தீர்மானித்தது பிரிட்டிஷ் நிர்வாகம். இதையறிந்த பாப்ஹேம், குன்றை உடைத்து அப்புறப்படுத்தப்படும் மண்ணைக் கொண்டு கறுப்பர் நகரத்தில் உள்ள கழிவுநீர் ஓடையை மூடிக்கொள்ள அனுமதி வாங்கினார். அதன்படி கழிவு நீர் ஓடை மூடப்பட்டது. அட்டப்பள்ளம் என்று அழைக்கப்பட்ட இந்த ஓடைக்கு, மண்ணடி என்று பெயர் வர இதுவே காரணமானது. பிறகு, மண்போட்டு மூடிய கழிவுநீர் ஓடையைச் சீர்படுத்தி, அதைச் சாலையாக மேம்படுத்தினார் பாப்ஹேம். கறுப்பர் நகரத்தின் மைய சாலையாக உருவெடுத்த அது, பாப்ஹேமின் பெயராலேயே ‘பாப்ஹேம்’ஸ் பிராட்வே’ என்று அழைக்கப்பட்டது.

பாப்ஹேம்’ஸ் பிராட்வே
பாப்ஹேம்’ஸ் பிராட்வே

வழக்கறிஞரான பாப்ஹேம் சமூக அக்கறை மிக்கவராக இருந்தார். கறுப்பர் நகரத்தின் வாழ்விடப் பகுதிகளை மேம்படுத்தியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த மெட்ராஸ் நகரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் திட்டங்களை உருவாக்கத் தொடங்கினார். அவரது அர்ப்பணிப்பான செயல்பாட்டைக் கவனித்த பிரிட்டிஷ் நிர்வாகம் நகர வரைமுறைக் குழுவுக்குப் பாப்ஹேமையே செயலாளராக நியமித்தது.

1790-களில் சென்னை நகரத்தின் மக்கள்தொகை சுமார் 3 லட்சத்தைத் தொட்டிருந்தது. குறிப்பாகக் கறுப்பர் நகரத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனது. அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகச் சந்தை ஒன்றை உருவாக்கப் பாப்ஹேம் திட்டமிட்டார். அப்போதைய பிராட்வேக்கும் இன்றைய ஆவுடையப்ப நாயக்கன் தெருவுக்கும் இடைப்பட்ட பாப்ஹேமுக்குச் சொந்தமான இடத்தில் சந்தை ஒன்று தொடங்கப்பட்டது. ‘பாப்ஹேம் சந்தை’ என்றே பெயரிடப்பட்ட அந்தச் சந்தை மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

சந்தை
சந்தை

1865 வரை இங்கு இயங்கிவந்தது ‘பாப்ஹேம் சந்தை’. பிராட்வேயில் மக்கள் நெருக்கம் தொடர்ந்து அதிகரித்ததால் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த பீப்புள்ஸ் பார்க்குக்கு அதை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தது பிரிட்டிஷ் நிர்வாகம். மெட்ராஸ் மாநகராட்சியின் பொறியாளராக இருந்த சாமுவேல் ஜோஸ்வா லோன் அந்தச் சந்தையைக் கட்டினார். அப்படி உருவானதுதான் மூர் மார்க்கெட். மெட்ராஸ் மாநகராட்சியின் அப்போதைய தலைவராக இருந்த சர் ஜார்ஜ் மூர் பெயர் அதற்கு வைக்கப்பட்டது.

மூர் மார்க்கெட் உருவான பிறகு, பிராட்வேயில் இருந்த ‘பாப்ஹேம் சந்தை’ இடிக்கப்பட்டு, பூங்காவாக மாற்றப்பட்டது. மூர் மார்கெட்டைக் கட்டிய பொறியாளர் லோனைச் சிறப்பிக்கும் வகையில், அந்தப் பூங்கா ‘லோன் சதுக்கப் பூங்கா’ என்று அழைக்கப்பட்டது. இன்று அது, சுதந்திரப் போராட்ட வீரர் பொட்டி ஸ்ரீராமுலுவின் நினைவாக ‘ஸ்ரீராமுலு பார்க்' என்று அழைக்கப்படுகிறது.
மூர் மார்க்கெட்
மூர் மார்க்கெட்

19-ம் நூற்றாண்டில் மெட்ராஸின் முதன்மை வணிகச் சாலையாக உருவெடுத்த, ‘பாப்ஹேம்’ஸ் பிராட்வே’, காலப்போக்கில் பாப்ஹேமின் பெயர் மறைந்து பிராட்வே என்று மட்டும் அழைக்கப்பட்டது.

மெட்ராஸ் மாகாணத்தின் முதல் மந்திரியாக இருந்த ‘ஆந்திர கேசரி’ பிரகாசம் நினைவாக, பிற்காலத்தில் ‘பிரகாசம் சாலை’ என்று ‘பிராட்வே'யின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அரசியல், இலக்கியம், சினிமா, வணிகம், ஆன்மிகம், மருத்துவம் என பல துறைகளுக்கும் மையமாக இருந்துள்ளது பிராட்வே. பாரதி ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ பத்திரிகை நம்பர் 34, பிராட்வே என்ற முகவரியிலிருந்துதான் வெளிவந்திருக்கிறது.

பாரதி ‘இந்தியா’
பாரதி ‘இந்தியா’

தமிழின் முன்னோடிச் சிற்றிதழான ‘மணிக்கொடி’ அலுவலகம் பிராட்வே டக்கர்ஸ் லேனில்தான் இயங்கியிருக்கிறது. நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகளான பி.எஸ்.ராமையா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் உள்ளிட்ட பலர், பிராட்வேயில் வாழ்ந்திருக்கின்றனர். பாரி நிலையம், பூம்புகார் பதிப்பகம் போன்ற தமிழின் பழமையான பதிப்பகங்களின் வேர் பிராட்வேயில்தான் இருக்கிறது.

மணிக்கொடி
மணிக்கொடி
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் புகழ்பெற்ற படங்களில் ஒன்றான, ‘ஹரிதாஸ்’ மூன்று தீபாவளிகள் தொடர்ந்து ஓடியது இங்கிருக்கும் பிராட்வே திரையரங்கில்தான்.
பிராட்வே திரையரங்கம்
பிராட்வே திரையரங்கம்

12 ஏப்ரல் 1799-ல் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட சர்ச் மிஷினரி சொசைட்டியின் நூற்றாண்டை ஒட்டி கட்டப்பட்ட நூற்றாண்டு அரங்கம், டக்கர்ஸ் தேவாலயத்துக்கு எதிரே பிராட்வேயின் பழைமைக்குச் சான்றாக நிற்கிறது. 1980-கள் வரை செயல்பாட்டில் இருந்ததாகச் சொல்லப்படும் இந்த அரங்கம் இப்போது சிதிலமடைந்து கிடக்கிறது.

கறுப்பர் நகரம், பிரிட்டனின் புதிய பேரரசரின் பெயரால் 1911-ல் ஜார்ஜ் டவுன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது; ஜார்ஜ் டவுனின் மையச் சாலையான பிராட்வே உருவாகக் காரணமாக இருந்த ஸ்டீபன் பாப்ஹேமின் பெயர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு வெகுகாலம் முன்பே மறக்கப்பட்டுவிட்டது.

சென்னை
சென்னை
சைனா பஜார் ரோடு எனப்படும் என்.எஸ்.சி.போஸ் சாலையில் தொடங்கும் பிராட்வே, பழைய ஜெயில் ரோடு எனப்படும் இப்ராஹிம் சாகிப் தெருவில் முடிகிறது. பிராட்வே என்ற பெயருக்கேற்ப அகன்று விரிந்திருந்த இந்தச் சாலை இப்போது குறுகிச் சிறுத்துவிட்டது. சாலையின் இருபுறமும் நூற்றாண்டு தாண்டி நிற்கும் கட்டடங்கள் உருக்குலைந்து முகம் மாறி வரலாற்று எச்சங்களாக மிஞ்சியிருக்கின்றன!