அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

மூடப்பட்ட டாஸ்மாக்... நிம்மதிப் பெருமூச்சுவிட்ட திருவல்லிக்கேணி மக்கள்! - ஜூ.வி ஆக்‌ஷன்

செய்தி எதிரொலி, மூடப்பட்ட டாஸ்மாக் கடை...
பிரீமியம் ஸ்டோரி
News
செய்தி எதிரொலி, மூடப்பட்ட டாஸ்மாக் கடை...

பல ஆண்டுக்காலம் அனுபவித்த பிரச்னைக்கு விடிவுகாலம் ஏற்பட்டது போலிருக்கிறது. பள்ளி மாணவிகளும் பெண்களும் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணியின் பிரதான சாலையான காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது `கெல்லட் ஸ்கூல்’ பேருந்து நிறுத்தம். பள்ளிகள், சர்ச், மசூதி, கோயில், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் இந்த நெடுஞ்சாலையில்தான் ‘கடை எண்-812’ டாஸ்மாக் மதுபானக் கடை நீண்டகாலமாக இயங்கிவந்தது. இங்கு மது பாட்டில்கள் வாங்கும் பலர் `கெல்லட் ஸ்கூல்’ பேருந்து நிறுத்தத்தையே திறந்தவெளி பாராகப் பயன்படுத்திவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து `திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!’ - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?’ என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி அன்று விகடன் இணையதளத்தில் புகைப்படங்களுடன் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

 பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தும் காட்சி...
 பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தும் காட்சி...

அதில், சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில், பொது இடத்தில் மது அருந்துவது, மது போதையில் சண்டையிட்டு ஆபாச வார்த்தைகளில் திட்டிக்கொள்வது, சாலையில் அரை நிர்வாணமாகப் படுத்து உறங்குவது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது என போதை ஆசாமிகளின் அருவருக்கத்தக்க செயல்களால் திருவல்லிக்கேணி குடியிருப்புவாசிகளும் பயணிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவந்ததை விரிவாக எழுதியிருந்தோம். மேலும், `போதை ஆசாமிகளின் இந்த அட்டூழியங்கள் குறித்து, பலமுறை புகாரளித்தும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும்’ எனும் பொதுமக்களின் கோரிக்கையையும் கட்டுரையில் பதிவுசெய்திருந்தோம்.

 செய்தி எதிரொலி, மூடப்பட்ட டாஸ்மாக் கடை...
 செய்தி எதிரொலி, மூடப்பட்ட டாஸ்மாக் கடை...

இந்தக் கட்டுரை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மறுநாளே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடியிருக்கிறது அரசுத் தரப்பு. மேலும், கெல்லட் ஸ்கூல் பேருந்து நிறுத்தத்தின் சுற்றுப்புறமும் தூய்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேசிய திருவல்லிக்கேணி ஏரியாவாசிகள், “பல ஆண்டுக்காலம் அனுபவித்த பிரச்னைக்கு விடிவுகாலம் ஏற்பட்டது போலிருக்கிறது. பள்ளி மாணவிகளும் பெண்களும் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர். எத்தனையோ புகார்க் கடிதம் கொடுத்தோம்; பொதுமக்கள், ஜமாத் தரப்பினர் இணைந்து பல போராட்டங்களையும் நடத்திப் பார்த்துவிட்டோம். அப்போதெல்லாம் மூடப்படாத டாஸ்மாக், விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியால் இன்று தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. இதை நிரந்தரமாக மூட வேண்டும்!” என்றனர் நன்றி கலந்த கோரிக்கையுடன்.