மேற்கு வங்க அரசு, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன், பழங்களையும் சேர்த்துக்கொடுக்க உத்தரவிட்டிருக்கிறது. தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் அரிசி சாப்பாடு, பருப்பு, காய்கறிகள், சோயாபீன்ஸ், முட்டை வழங்கப்படுகிறது. அதோடு சேர்த்து இனி மதிய உணவில் வாரத்தில் ஒருநாள் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கக்கூடிய பழங்கள் வழங்கப்படும்.

பிரதமர் ரோஸ்ஹான் திட்டத்தின்கீழ் இவை வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால், சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் 4 மாதங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு சாப்பாட்டில் சிக்கன் மற்றும் பழங்கள் கிடைக்குமா என்று தெரியாது. இந்தத் திட்டத்துக்காக மாநில அரசு ஒரு வாரத்துக்கு ஒரு மாணவருக்குக் கூடுதலாக ரூ.20 செலவு செய்யும். மதிய உணவு திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் 40:60 என்ற சதவிகிதத்தில் செலவு செய்கின்றன.
ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிற சிக்கன் மற்றும் பழங்கள் சப்ளை செய்ய ரூ.371 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை முழுவதையும் மாநில அரசே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 1.16 கோடி மாணவர்கள் பயனடைவர்.
இந்த ஆண்டு நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலைக் கருத்தில்கொண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக மேற்கு வங்க பாஜக தலைவர்களில் ஒருவரான ராகுல் சின்ஹா அளித்த பேட்டியில், ``தேர்தலையொட்டி பள்ளிக்குழந்தைகளுக்கு சிக்கன் கொடுப்பது என்ற மேற்கு வங்க அரசின் மனமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இவ்வளவு நாள்களும் ஏன் ஏழைக்குழந்தைகளுக்கு அரிசியும் பருப்பும் மட்டும் வழங்கப்பட்டது.
பஞ்சாயத்து தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்தோடு இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் கூறுகையில், ``முதல்வர் எப்போதும் ஏழைகளின் பக்கமே இருக்கிறார். ஒவ்வொரு பிரச்னையையும் பாஜக அரசியலாக்குகிறது” என்று தெரிவித்தார்.