சினிமா
Published:Updated:

பாதகம் செய்பவரைக் கண்டால்...

பாதகம் செய்பவரைக் கண்டால்...
பிரீமியம் ஸ்டோரி
News
பாதகம் செய்பவரைக் கண்டால்...

‘குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ எவ்விதத் தீங்கும் இழைக்க மாட்டேன்’ என்று உறுதியளித்து அந்தக் கொள்கை ஆவணத்தில் கையெழுத்திடவேண்டும்.

பாரம்பரியப் பள்ளி, ஒழுக்கத்தில் உயர்ந்த பள்ளி, கல்வித்தரத்தில் இமையம், அட்மிஷன் கிடைப்பதே சிரமம் என்று பெருமையான வெளிப்பூச்சு பூசிக்கொண்டிருந்த சென்னை பத்ம சேஷாத்ரி, மகரிஷி வித்யா மந்திர் போன்ற பள்ளிகளில் பல ஆண்டுகளாக மாணவிகள், அந்தப் பள்ளியின் ஆசிரியர்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான விவகாரம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் கிளம்பிய சிறுபொறி இப்போது பெருந்தீயாக மாறியிருக்கிறது.

“ஆன்லைன் வகுப்பிலேயே வக்கிரப் புத்தியோடு நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், பள்ளிக்கூடத்தில் நேரடியாக எப்படி நடந்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தனை ஆண்டுக்காலம் அந்த ஆசிரியரை வளாகத்தில் அனுமதித்த குற்றத்துக்காகவே நிர்வாகம்மீது அதிகப்பட்ச நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன்.

தேவநேயன் எழுப்புகிற இன்னொரு கேள்வி அழுத்தமானது. ஒவ்வொரு மாவட்டத்திலும், குழந்தைகளின் பாதுகாப்புக்காக இயங்கும் அரசு அமைப்புகள் பத்துக்கும் மேலே இருக்கின்றன. குற்றம் நடந்தபிறகே அவையெல்லாம் மீடியா வெளிச்சத்துக்கு வருகின்றனவே ஒழிய, தவறுகளைத் தடுக்க முனைவதில்லை என்கிறார் அவர்.

பாதகம் செய்பவரைக் கண்டால்...
Laura Benvenuti

“ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தை நலக்குழுவில் 5 பேர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 12 பேர், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு எஸ்.ஐ தலைமையில் குழந்தை நல காவல் அலுவலர்கள், துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்கள் குழந்தைகள்மீதான குற்றங்களுக்கு எதிரான காவல் பிரிவு, சைல்டு ஹெல்ப் லைனில் 12 பேர், மாவட்டக் குழந்தைக் கடத்தல் பிரிவு, மாவட்டக் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர், மாவட்டச் சிறார் காவல் குழு... இப்படிக் கணக்குப் பார்த்தால் 60 பேர் நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பள்ளிகள், இல்லங்கள், விடுதிகள், காப்பகங்கள் எனக் குழந்தைகள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் இவர்கள் போய் ஆய்வு செய்யலாம். பத்மசேஷாத்ரியிலோ, மகரிஷியிலோ இந்த அமைப்புகளில் உள்ள எவரேனும் ஆய்வு செய்திருந்தால் எப்போதோ அந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.

கர்நாடகா, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் ‘பள்ளிகளில் குழந்தைப் பாதுகாப்புக் கொள்கை’ உண்டு. சி.பி.எஸ்.இ பள்ளிகள் அனைத்தும் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பத்ம சேஷாத்ரி பள்ளியில் அந்தக்கொள்கை கடைப்பிடிக்கப்படவில்லை.

தலைமையாசிரியர் முதல் அட்டென்டென்ஸ் எடுத்துச்செல்லும் உதவியாளர் வரை பள்ளியோடு தொடர்புடைய அனைவரும் ‘குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ எவ்விதத் தீங்கும் இழைக்க மாட்டேன்’ என்று உறுதியளித்து அந்தக் கொள்கை ஆவணத்தில் கையெழுத்திடவேண்டும். ஆசிரியர் முதல் பள்ளியின் தோட்டக்காரர் வரை எவரைப் பணிக்கு எடுத்தாலும் அவரின் பின்னணியை, பழைய வரலாற்றை ஆய்வு செய்வதையும் இந்தக் கொள்கை கட்டாயப்படுத்துகிறது. ஒரு பள்ளியில் குற்றம் செய்துவிட்டு கட்டப்பஞ்சாயத்தில் தப்பி இன்னொரு பள்ளிக்கு வேலைக்குச் செல்லமுடியாது.

ஆனந்த் - ராஜகோபால்
ஆனந்த் - ராஜகோபால்

இந்தக் கொள்கையின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைப் பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்தக்குழுவில், பள்ளி நிர்வாகி, பெண் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இருக்கவேண்டும். பள்ளியில் கருத்துப்பெட்டி ஒன்றை வைக்க வேண்டும். அந்தப் பெட்டி தலைமையாசிரியர் அறையிலோ, ஆசிரியர்கள் அறையிலோ இருக்கக்கூடாது. குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை, குழந்தைப் பாதுகாப்புக் குழு கூடி இந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கவேண்டும். அதில் குறிப்பிடப்படும் புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும். பாலியல் வன்முறை ஏதும் நடந்தால் காவல்துறைக்குப் புகார் அளிப்பது அந்தக்குழுவின் கடமை. தமிழகத்தில் உள்ள எல்லாப்பள்ளிகளிலும் இந்தக் குழந்தைப் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம்

2008-ல் மனு கொடுத்தோம். எதுவுமே நடக்கவில்லை...” என்கிறார் தேவநேயன்.

“ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உளவியல் ஆலோசகர் இருக்கவேண்டும் என்று விதியிருக்கிறது. பிள்ளைகளை ஆற்றுப்படுத்தி அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிவதுதான் அவர்கள் வேலை. பெரும்பாலான பள்ளிகளில் அப்படியொரு பணியிடமே இல்லை. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பக்கத்து அறையில் இருந்தாலும் வாட்ஸப்பில் பேசிக்கொள்கிறார்கள். பெற்றோர் பிள்ளைகள் தோளில் கைபோட்டுப் பேச வேண்டும். பிள்ளைகளைப் பேசவிட்டுக் கேட்கவேண்டும்...” என்கிறார், உளவியல் வல்லுநர் முனைவர் நப்பின்னை சேரன்.

குழந்தைகள்மீதான வன்முறைகளைத் தடுக்கவும், கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பு மாநிலக் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம். கல்வி உரிமைச் சட்டம், போக்ஸோ சட்டம் போன்றவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் இந்த அமைப்புதான். இந்த ஆணையத்தில் குழந்தைகள் உரிமை தொடர்பாக நிபுணத்துவம் பொருந்திய ஒருவர்கூட இல்லை என்று குற்றம் சாட்டுகிறார் தேவநேயன்.

தேவநேயன் - நப்பின்னை சேரன் - ஜெயலட்சுமி
தேவநேயன் - நப்பின்னை சேரன் - ஜெயலட்சுமி

“குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருக்கும் சரஸ்வதி ரங்கசாமி அ.தி.மு.க-வின் மகளிரணி நிர்வாகியாக இருந்தவர். உறுப்பினர்கள் பலரும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள். கேரளா, கர்நாடகாவிலெல்லாம் இந்த ஆணையம் அவ்வளவு வலுவாக இருக்கிறது. கேரளாவில் பழங்குடியினக் குழந்தைகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயிரிழப்பதாக ஒரு ஆய்வுமுடிவு பத்திரிகைகளில் வெளியானது. உடனடியாக கேரளக் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சம்மன் அனுப்புகிறது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலஜா ஆணையத்துக்குச் சென்று ‘இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதியளித்தார்.

தமிழகத்தில் இந்த ஆணையத்துக்கு ஒரு வழக்கறிஞர் இல்லை. உறுப்பினர்கள் அமர்ந்து பேச அறைகூட இல்லை. இந்த லட்சணத்தில்தான் மாநிலக் குழந்தை உரிமை ஆணையமே இயங்குகிறது. தமிழகத்தில்தான் போக்ஸோ சட்ட அமலாக்கம் மிக மோசமாக இருக்கிறது. பதியப்படும் வழக்குகளுக்கு 6 மாதத்திற்குள் நீதி பெற்றுத்தரவேண்டும் என்பது விதி. மொத்த வழக்குகளில் 14 சதவிகிதம்கூடத் தீர்ப்பு வருவதில்லை. கண்காணிக்க வேண்டிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் செயலிழந்து கிடக்கிறது...” என்கிறார் தேவநேயன்.

பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபிறகு, பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸப் எண் வெளியிடப்பட்டது. இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

“என் எண்ணில் இதுவரை 100 புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. அவற்றில் 90 சதவிகிதம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை இதுவரை பத்ம சேஷாத்ரி பள்ளியின் மீதான 5 புகார்களோடு மொத்தம் 12 புகார்கள் வந்திருக்கின்றன. கராத்தே மாஸ்டர் கெபி ராஜ் என்பவரை இந்தக் குற்றச்சாட்டில் கடைசியாகக் கைது செய்திருக்கிறோம். அனைத்துப் புகார்களும் விசாரிக்கப்படும். தவறிழைத்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பிவைத்தால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றுதான் பெற்றோர்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை அடியோடு தகர்க்கிறது பத்ம சேஷாத்ரி பள்ளியின் பாலியல் புகார்கள். இதில் ஆறுதலடைய வேண்டிய ஒரே விஷயம், ‘இதை வெளியில் சொன்னால் என்ன நினைப்பார்களோ?’ என்று நினைக்காமல் மாணவிகள் வெளிப்படையாகச் சொல்ல வந்திருப்பது. நவீன வாழ்க்கையும் சமூகவலைதளங்களும் பெண்களுக்கு இத்தகைய துணிச்சல் மனப்பான்மையையும் சுதந்திர வெளியையும் உருவாக்கித்தந்திருக்கிறது.

2006-ல் பள்ளிகளில் 2 பாலியல் குற்றங்கள் பதிவான நிலையில், 2019-ல் 35 குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் பல குற்றங்கள் பள்ளிகள் அளவிலோ, காவல் நிலைய அளவிலோ பேசி முடிக்கப்படுவதுண்டு. அவற்றையும் கணக்கில் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

2012-ல், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ‘பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் உடனடியாகத் தகுதிநீக்கம் செய்யப்படும். உடனடியாக அவர் பணி இழப்புக்கு உள்ளாவார்’ என்கிறது. உண்மையில் இத்தகைய நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றனவா என்கிற கண்காணிப்பு அவசியம்.

ராஜகோபால்மீது முதன்முறையாகப் புகார் வரவில்லை. பலமுறை புகார்கள் வந்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜகோபாலே சில ஆண்டுகளாகவே தான் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே ராஜகோபால் மட்டும்தான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டாரா, வேறு யாராவது ஈடுபட்டார்களா, இத்தகைய அநீதிகளுக்குத் துணைபோனவர்கள் என அத்தனைபேர் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை.

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள், அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்திலும் ரகசியப் புகார்கள் பெறப்பட்டு குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டரீதியாக இத்தகைய பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு இருக்கும் நடைமுறைகள் ஏட்டளவில் இருப்பதை மாற்றி நடைமுறைப்படுத்திட வேண்டும். பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் பயப்பட வேண்டிய நிலை வந்துவிடக்கூடாது. அது இப்போதும் எதிர்காலத்திலும் நல்லதல்ல.

*****

பாதகம் செய்பவரைக் கண்டால்...

மாநிலக் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதியிடம் இந்த விவகாரம் பற்றி உரையாடினோம்.

“ஆண்டுக்காண்டு பள்ளிகளில் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய ஆணையம் என்னதான் செய்கிறது?”

“புகார்கள் வரும்போது பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கிறோம். பத்ம சேஷாத்ரி பள்ளியில் நேரடி விசாரணை நடத்தி, சம்மன் வழங்கியிருக்கிறோம். அதுதவிர, புகாருக்கு உள்ளாகியிருக்கிற மகரிஷி வித்யாமந்திர், செயிண்ட் ஜார்ஜ், செட்டிநாடு பள்ளிகளுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு எங்கள் அறிக்கையை அரசுக்கு அனுப்புவோம்.’’

“பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் ஆணையம் முறையாகச் செயல்படவில்லை என்று புகார் கிளம்பியிருக்கிறது. ஆணைய உறுப்பினர்கள் சிலர் விவகாரத்தை முடக்க முயன்றதாகவும் பேசப்படுகிறதே?”

“இன்னும் நாங்கள் விசாரிக்கவேயில்லையே. அப்புறம் எப்படிச் சொல்வார்கள்? ஆணைய உறுப்பினர் ஒருவருக்கு வந்த புகாரின் அடிப்படையில்தான் விசாரணையைத் தொடங்கினோம். எந்தத் தலையீடும் இல்லை.”

“போக்ஸோ சட்டச் செயல்பாட்டை நீங்கள்தான் கண்காணிக்கிறீர்கள். தமிழகத்தில் அந்தச் சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்கிறார்களே?”

“அப்படியெல்லாம் இல்லை. போலீஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் வேலையை நாங்கள் முறையாகத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.”

****

பாதகம் செய்பவரைக் கண்டால்...

புத்தகத்தைக் கிழித்தெறிந்த வகுப்பறையின் கதையைப் படித்த தமிழகம், இப்போது கால்களை வாரிவிட்ட மைதானத்தின் கதையையும் படித்துக்கொண்டிருக்கிறது. பள்ளி ஆசிரியரைத் தொடர்ந்து, சென்னையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடெமி என்ற தடகளப் பயிற்சி மையத்தை நடத்திவரும் முன்னணிப் பயிற்சியாளர் நாகராஜன்மீது அவரிடம் பயிற்சி பெற்ற பெண்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இது வழக்காகவும் மாறியிருக்கிறது.பல்வேறு தடகள வீரர்களை உருவாக்கியவர், வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்று இத்தனை காலம் கொண்டாடப்பட்டவர் நாகராஜன். ஆனால், அந்தப் பிம்பத்துக்குப் பின்னால்தான் இத்தனை ஆண்டுகளாகத் தன் குரூர முகத்தை மறைத்துவைத்திருக்கிறார். 14, 15 வயதுச் சிறுமிகள் உட்பட தன்னிடம் பயிற்சி பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட வீராங்கனைளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார் என்று புகார்.

பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து தன் வேலையைக் காட்டியிருக்கிறார் நாகராஜன். ‘`வறுமையான குடும்பத்திலிருந்து, கிராமத்திலிருந்து வந்த பொண்ணுங்கள ரொம்பவே டார்கெட் பண்ணுவாரு’’ என்கிறார்கள் அவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனைகள். ‘`அவரால நான் இப்போ ஹவுஸ்வைஃபா இருக்கேன்’’ என்று சொல்லும் முன்னாள் தடகள வீராங்கனையின் வார்த்தையில் அவ்வளவு ரணம். எத்தனை கனவுகளை உடைத்திருக்கிறார்கள். எத்தனை பேரை மீண்டும் சமையலறைக்கே அனுப்பியிருக்கிறார்கள்!

ஒதுங்கி நிற்பதல்ல, ஓங்கிக் குரல் கொடுப்பதுதான் பாதுகாப்பு என்பதை நம் சமூகம் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அப்படிப் புரிந்துகொண்ட பெற்றோர்கள் இருந்தால், தங்கள் கனவின் மீதான பயம் இல்லாமல் பெண்கள் நிச்சயம் வெளியே சொல்வார்கள். இப்போது நாகராஜன் மீதான குற்றச்சாட்டு வெளிவந்திருப்பதும் அப்படியான ஒரு தந்தையால்தான். தன் மகளிடம் தவறாக நடந்துகொண்ட பயிற்சியாளர்மீது நேரடியாக தடகள சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். தன் மகளுக்கு மோசமானவள் என்ற அடையாளத்தை அந்தப் பயிற்சியாளர் கொடுக்க முயன்றும், தன் மகளை நம்பி, மீண்டும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்.

‘`சாதிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். பொண்ணுங்க தங்களோட முழு எனர்ஜியையும் இந்த மாதிரி கழுகுகிட்ட இருந்து காப்பாத்திக்கிறதுக்காகவே செலவு பண்றாங்களே. ஒவ்வொரு நாளும் பிராக்டீஸ் போகணும், தன்னை சங்கடப்படுத்தியவன் முகத்தைப் பாக்கணும் அப்டிங்கும்போது அது எவ்ளோ கொடுமை. அப்பவும் இப்பவும் பொண்ணுங்கதான் குரல் கொடுத்திருக்காங்க. கூட இருந்த பசங்களெல்லாம் எதுவும் செய்யலைன்னு நினைக்கும்போது கோபமா வருது’’ என்கிறார் இந்தியக் கால்பந்து ஜாம்பவான் ராமன் விஜயன்.

நாகராஜனிடம் பயிற்சி பெற்ற பெண்கள் முன்னால் இருக்கும் இலக்கை நோக்கி மட்டும் ஓடியிருக்கவில்லை. பின்னால் துரத்தும் மிருகத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடவும்தான் ஓடியிருக்கிறார்கள். ஆனால், கால்களை மட்டும் பார்த்துவிட்டு பதைபதைத்த அவர்கள் முகத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோம் நாம். அவர்களாக தங்கள் பிரச்னையைச் சொல்வதற்கான வெளியையும், நம்பிக்கையையும் இச்சமூகம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை. தடகள வீரர்களுக்கான அங்கீகாரத்தையும், வாழ்வாதாரத்தையும் எளிதில் கொடுக்க மறுக்கும் நாம், இனி அந்த நம்பிக்கையையாவது கொடுக்கலாம்!