Published:Updated:

ஆன்லைன் ரம்மி... குழந்தைகளைக் கண்காணிப்போம்!

ஆன்லைன் ரம்மி... குழந்தைகளைக் கண்காணிப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் ரம்மி... குழந்தைகளைக் கண்காணிப்போம்!

கபடி, கிரிக்கெட், கால்பந்து போல் இதனையும் ஒரு விளையாட்டாக முன்னிறுத்துகிறார்கள். எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாடுகிறவர்கள் பணம் கட்டி விளையாட மாட்டார்கள்.

ஆன்லைன் ரம்மி போன்ற பண இழப்பு அபாயங்கள் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபட்டுப் பணத்தை இழந்ததால் சிலர் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகிவருகிறது. 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட்டுவருவதாகவும், அதனைக் கண்காணிக்க ஆன்லைன் ரம்மி ஆப்களில் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்துள்ளார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா. வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அய்யாவிடம் பேசினோம்.

‘‘சூதாட்டம் என்பது சமூகத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியது. புராணங்களிலேயே சூதாட்டத்தின் விளைவு எவ்வளவு கொடியது என்று கூறப்பட்டிருக்கிறது. பணத்தைப் பந்தயமாக வைத்துச் சீட்டு விளையாடினால் அது சூதாட்டம் என சட்டம் சொல்கிறது. அப்படிப் பார்க்கையில் ஆன்லைன் ரம்மியை மட்டும் எப்படி சூதாட்டம் அல்ல என்று சொல்ல முடியும்? இந்த இணைய சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தால், இந்த விளையாட்டு நிறுவனங்கள், ‘இது சூதாட்டம் அல்ல... திறனை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு’ என்று சொல்லி வழக்கில் ஜெயிக்கின்றன.

கபடி, கிரிக்கெட், கால்பந்து போல் இதனையும் ஒரு விளையாட்டாக முன்னிறுத்துகிறார்கள். எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாடுகிறவர்கள் பணம் கட்டி விளையாட மாட்டார்கள். வெற்றிபெறும் வீரர்களுக்குப் பரிசு வழங்கப்படும். ஆன்லைன் ரம்மியில், விளையாடுகிற நபரே பணம் கட்டுகிறார்; இது சூதாட்டம்தான். ஆன்லைன் ரம்மியை ஆதரிக்கிறவர்கள் ‘உலகில் பரவலாகப் பல நாடுகளில் இது இருக்கிறது’ என்கிறார்கள். அந்நாடுகளின் சூழலோடு நம் நாட்டுச் சூழலைப் பொருத்திப் பார்க்க முடியாது. ஆன்லைன் ரம்மியால் பெரும் தொகையை இழந்து தற்கொலை செய்துகொள்கிற வெகு சிலரைப் பற்றித்தான் செய்திகளில் காண்கிறோம். பாதிக்கப்பட்டு வெளியே சொல்லாதவர்கள் பலர்.

ஆன்லைன் ரம்மி... குழந்தைகளைக் கண்காணிப்போம்!

கொரோனாவுக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகளுக்காக குழந்தைகளுக்கு போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். செலவுக்கென தேவைக்கு அதிகமாகப் பணமும் கொடுக்கிறார்கள். மொபைலில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பலரும் கவனிப்பதே இல்லை. பெற்றோரின் போனிலேயே கூகிள் பே மூலம் பெட்டிங் விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள் பிள்ளைகள். மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன் ஆன்லைன் ரம்மியில் நாற்பதாயிரத்தை இழந்து, பெற்றோர் திட்டுவார்களோ என்ற பயத்தில் ரயிலில் விழுந்து இறந்துபோனான். குழந்தைகள் மத்தியிலும் இந்த ஆன்லைன் சூதாட்டம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. அதனை எப்படிக் கண்காணிப்பது என்கிற அடிப்படையில்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். இதுபோன்ற ஆப்களுடன் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தேன். இதன் மூலம், 18 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடுவதைக் கண்காணிப்பதோடு, இந்த விளையாட்டில் பரிவர்த்தனை செய்யப்படும் பணம், அரசுக் கணக்குக்கு வரும்.

எனது இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் ஆகிய இருவரும் இரண்டு வாரங்களுக்குள் இதற்கு பதில் தர வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். நான் புதிதாக எதுவும் கேட்கவில்லை. 18 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடக் கூடாது என்பதே அரசின் கொள்கை முடிவு. அதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் அவர்களிடம் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய தமிழக அரசு மசோதா கொண்டு வந்த நிலையில், தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அது காலாவதியாகிவிட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் அசுர பலத்தில் இருக்கின்றன. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார் அய்யா.

ஆன்லைன் ரம்மி... குழந்தைகளைக் கண்காணிப்போம்!

“இணையப் பயன்பாட்டின் வழியாக நாம் எதிர்கொள்ளும் மோசமான விளைவுகளில் இந்த ஆன்லைன் சூதாட்டமும் ஒன்று” என்கிறார் சேலத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி.

‘‘இணையதளப் பயன்பாட்டில் இன்று நாம் பார்க்கும் சிறிய பிரச்னைகள் காலப்போக்கில் மிகப்பெரிய உளவியல் பிரச்னையாக உருவெடுத்து நிற்கும். ‘இன்டர்நெட் கேமிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் மனப்பிறழ்வு நோய்கூட உருவாக வாய்ப்பிருக்கிறது. இணையதளத்தில் பணத்தைக் கட்டி விளையாடுகிற இதுபோன்ற விளையாட்டுகள் திறன் அடிப்படையிலானவை என்று சொல்லப்பட்டாலும் அது உண்மையல்ல. சீட்டு விளையாடுவதற்கு, சில நுணுக்கங்கள் தேவை என்றாலும், முழுமையாக அது திறன் சார்ந்த விளையாட்டு அல்ல. அதிர்ஷ்டம் சார்ந்தது. கேசினோக்களில் நிகழ்த்தப்படும் சூதாட்டம் போன்றதுதான் இதுவும்.

இந்த விளையாட்டில் ஈடுபடுகிறவர்களுக்கு ஆரம்பத்தில் ஒன்றிரண்டு வெற்றிகள் கிடைக்கின்றன. அதன்மூலம் கிடைக்கும் பணம் அவர்களின் ஆசையை மேலும் தூண்டுகிறது. பிறகு அவர்கள் தொடர் தோல்வியைச் சந்தித்தாலும், எப்படியும் வென்றாக வேண்டும் என்கிற வேகத்தில் அதிக வட்டிக்குக் கடன் வாங்கிக்கூட விளையாடுகிறார்கள். இதனை உளவியலில் பாசிட்டிவ் ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் (Positive Reinforcement) என்கிறோம். அதாவது ஒரு முறை வெற்றியைச் சுவைத்துவிட்டால், மீண்டும் வெற்றிக்காகத் துடிப்பது. 10-ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு 12-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என்ற உந்துதல் பிறக்கும். இது சூதாட்டத்திலும் நிகழ்கிறது.

ஆன்லைன் ரம்மி... குழந்தைகளைக் கண்காணிப்போம்!

சூதாட்டத்துக்கு நாம் அடிமையாகக் காரணம் மூளையில் சுரக்கக்கூடிய டோபமைன் (Dopamine) என்கிற ஹார்மோன். காதல், காமம், மது என மகிழ்ச்சியாக நாம் கருதும் பலவற்றுக்கும் இந்த டோபமைன் சுரப்பே காரணமாக இருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவதிலும் டோபமைன் சுரந்து மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மதுவுக்கு அடிமையாவதைப் போல இதற்கும் அடிமையாவது இதனால்தான்.

I மோகன வெங்கடாஜலபதி - Iஅய்யா
I மோகன வெங்கடாஜலபதி - Iஅய்யா

உளவியலில் ஐஸ்பெர்க் ஃபினொமினான் (Iceberg Phenomenon) என்கிற நோய்க்கூறு உண்டு. கடலின் மேற்பரப்பில் தெரியும் சிறிய முனையைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். உள்ளே மிகப்பெரும் பனிப்பாறையே இருக்கிறது என்பது நமக்குப் புலப்படாது. இணையத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளை நாம் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை; தெரிவது முனைதான். குடிநோய்க்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதைப் போல், நாளடைவில் இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் நிலை வரலாம். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவது மேலும் கொடுமையானது. அது அவர்களின் எதிர்காலத்தையே முழுமையாக பாதிக்கும். அனைவருமே இதுபோன்ற சூதாட்டங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும். பெற்றோர் தங்களின் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும்” என்கிறார் மோகன வெங்கடாஜலபதி.