அலசல்
Published:Updated:

நரபலி கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

ஷர்மிளா பேகம், அஸாருதீன், முகமது சலீம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷர்மிளா பேகம், அஸாருதீன், முகமது சலீம்

யாரை பலி கொடுக்கலாம்னு யோசிச்சேன்... பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன்... கைரேகை படியாம இருக்க துண்டால துடைச்சேன்...

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, ஆறு மாதப் பெண் குழந்தை நரபலி கொடுத்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் பாட்டி, அவரின் கணவர், மாந்திரீகவாதி ஒருவர் உட்பட மூன்று பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. நரபலியின் பின்னணி குறித்து விசாரணையில் இறங்கினோம்...

மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நசுருதீன், இவரின் மனைவி ஷாலிஹா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஐந்து வயதில் ராஜூ முகமது என்ற மகன், ஹாஜரா என்ற ஆறு மாதப் பெண் குழந்தை. டிசம்பர் 16-ம் தேதி காலையில், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தையைக் காணவில்லை. பதறியடித்துக்கொண்டு எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, வீட்டுக்குள் மீன்வைக்கும் ‘பிளாஸ்டிக் பெட்டி’யில் நீருக்குள் மூழ்கியபடி குழந்தை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. “குழந்தையை யாரோ என்னவோ செய்துவிட்டார்கள்” என்று ஷாலிஹா கதற... பக்கத்து வீட்டைச் சேர்ந்த அவரின் சித்தி ஷர்மிளா பேகம், “ஜின் (கெட்ட சக்தி) தூக்கிட்டுப்போய் போட்டிருக்கும். ஜின்னுக்கு முன்னால நாமெல்லாம் எம்மாத்திரம்? விடு...” என்று சொல்லியிருக்கிறார். ஜின்னால்தான் குழந்தை இறந்திருக்கிறது என்று நம்பியவர்கள், குழந்தையை அடக்கம் செய்திருக்கிறார்கள். இந்த விவரம் வெளிநாட்டிலிருக்கும் குழந்தையின் தாய்மாமன் நிஜாம் முகமதுவுக்குத் தெரியவர... ‘குழந்தையின் சாவில் உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும்’ என்று ஆடியோ ஒன்றை வெளியிட, அது சமூக வலைதளங்களில் பரவியது. அதையடுத்து, அடக்கம் செய்த உடலைத் தோண்டியெடுத்து சேதுபாவாசத்திரம் போலீஸார் விசாரணையில் இறங்க, ‘கொலையாளி நான்தான்’ என்று ஒப்புக்கொண்டார் ஷாலிஹாவின் சித்தி ஷர்மிளா பேகம்.

நரபலி கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

கொலைக்குக் காரணமான ஷர்மிளா பேகம் போலீஸிடம் கொடுத்திருக்கும் வாக்குமூலம் நம் நெஞ்சைப் பதறவைக்கிறது... ‘‘என் கணவர் அஸாருதீனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமப் போச்சு. ஏகப்பட்ட டாக்டர்கள்கிட்ட காட்டியும் குணமாகலை. அப்போதான், புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்துல இருக்கிற முகமது சலீம்கிற மாந்திரீகவாதி பத்திச் சொன்னாங்க. அவர் குறி சொன்னா, எப்பேர்ப்பட்ட நோயும் குணமாகும்னு சொன்னாங்க. அதை நம்பி அவர்கிட்ட குறி கேட்கப் போனேன். ‘உன் கணவர் குணமடைய உயிர்ப்பலி கொடுக்கணும்’னு சொன்னார். அதைக் கேட்டு 27 கோழிகளையும் சில ஆடுகளையும் பலி கொடுத்தேன். அப்பவும் அவர் குணமாகலை. திரும்பவும் சலீமைப் போய்ப் பார்த்தேன். ‘உங்க குடும்பத்துலயும் வீட்டுலயும் சைத்தான் குடியிருக்கு. சைத்தானை விரட்டணும்னா உன் குடும்பத்துல ஒருத்தரை உயிர்ப்பலி கொடுத்தாகணும்’னு சொன்னாரு. யாரை பலி கொடுக்கலாம்னு யோசிச்சேன். நசுருதீனும் ஷாலிஹாவும் கொஞ்சம் தெளிவில்லாத ஆளுங்க. எதைச் சொன்னாலும் ஈஸியா நம்பிடுவாங்க. அதனால, அவங்களோட பெண் குழந்தையைப் பலி கொடுத்துட்டு, ஜின் கொன்னதா நம்பவெச்சுடலாம்ணு தோணுச்சு.

குழந்தையைக் கொல்லும்போது அழுதுட்டா மாட்டிப்போமேன்னு, டிசம்பர் 15-ம் தேதி ராத்திரி நசுருதீனை எங்க வீட்டுல படுக்கவெச்சுட்டேன். ஷாலிஹாவுக்கு பால்ல தூக்க மாத்திரை கலந்து கொடுத்துட்டேன். அதனால ஷாலிஹா அசந்து தூங்கிட்டா... தொட்டில்ல தூங்கிக்கிட்டிருந்த குழந்தையைத் தூக்கிட்டுவந்து, மூக்கையையும் வாயையும் பிடிச்சுக்கிட்டேன். மூச்சை நிறுத்த குழந்தை வாய்ல என் வாயை வெச்சு ஊதினேன். குழந்தை செத்துடுச்சு. வீட்டுலருந்த மீன்வைக்கிற பிளாஸ்டிக் பாக்ஸ்ல குழந்தையைப் போட்டுட்டேன். கைரேகை படியாம இருக்க, குழந்தையோட துண்டால துடைச்சுட்டேன். அப்புறம் காலையில எல்லாரும் குழந்தையைத் தேடுனப்ப, நானும் கூட சேர்ந்து தேடினேன்’’ என்று சொல்லி முடித்தபோது, போலீஸார் மிரண்டுபோயிருக்கிறார்கள்.

நரபலி கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

இந்த விவகாரம் தொடர்பாக ஷர்மிளா பேகம், அஸாருதீன், மாந்திரீகவாதி முகமது சலீம் ஆகிய மூவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். முகமது சலீமிடம் போலீஸார் விசாரித்தபோது, ‘‘நான் குறி சொல்லும்போது எனக்குள்ள அருள் வந்துடும். நான் நானா இருக்க மாட்டேன். கோழி, ஆடு, மாடுதான் பலிகொடுக்கச் சொல்லியிருப்பேன். நரபலி கொடுக்கச் சொன்னது கிடையாது’’ என்று எந்தச் சலனமும் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.

மாந்திரீகவாதி முகமது சலீம் குறித்து விசாரித்தோம்... ‘‘அவர் கேரளாவைச் சேர்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்டதால ஏர்வாடி தர்காவுல கொண்டுவந்து சேர்த்திருக்காங்க. அஞ்சு வருஷமா அங்கேதான் இருந்திருக்காரு. கொஞ்சமா தெளிஞ்சு தஞ்சை மாவட்டம் பக்கம் வந்தவரு, கிருஷ்ணாஜி பட்டினத்துல எப்படியோ கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகிட்டாரு. பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யற கடை வெச்சிருக்குறவரு, வருமானத்துக்காகக் குறி சொல்ல ஆரம்பிச்சிருக்காரு. ஒரு சிலர் அவர் சொன்ன குறி பலிக்குதுன்னு சொன்னதால, நிறைய பேரு தேடி வர ஆரம்பிச்சுட்டாங்க. 15 வருஷத்துக்கு முன்னாடி மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஒருத்தரால எப்படி மத்தவங்க பிரச்னையைத் தீர்க்க முடியும்... அநியாயமா ஒரு உயிர் பலியானதுதான் மிச்சம்’’ என்றார்கள் குமுறலுடன்.

நரபலி கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக் கண்ணனிடம் பேசினோம். ‘‘மாந்திரீகவாதி சொன்னதைக் கேட்டு பலி கொடுத்ததாக ஷர்மிளா பேகம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் அவர், அவரின் கணவர் அஸாருதீன், மாந்திரீகவாதி முகமது சலீம் மூவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

‘மூடநம்பிக்கைகள்’ ஒரு குழந்தையை மட்டுமல்ல, மொத்தச் சமூகத்தையுமே கொல்லும். விழித்திருப்போம்!