
மத்திய, மாநில அரசுகள் கோவிட் பெருந்தொற்று செயல்பாடுகளில் குழந்தைகளை பெரிய இலக்காகக் கொள்ளவில்லை.
மதுரையில் நடந்த குழந்தை விற்பனை மனம் பதைபதைக்க வைக்கிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த இரு குழந்தைகள் கொரோனாவால் இறந்துவிட்டதாக ஆவணங்கள் உருவாக்கப்பட்டு 8 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த அவலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. காப்பகத்தின் உரிமையாளரும் உடந்தையாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பேரிடர்களாயினும் சரி, இயற்கைச் சீற்றங்களாயினும் சரி, குழந்தைகள்தான் அதிகம் இலக்காகிறார்கள். இப்போது கொரோனாவும் குழந்தைகளைத்தான் குறிவைத்திருக்கிறது. தொற்றின் வீரியம் குறைந்து பெரியவர்கள் இயல்புக்குத் திரும்பியபிறகும் குழந்தைகள் அச்சத்துடன் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கிறார்கள்.

மத்திய, மாநில அரசுகள் கோவிட் பெருந்தொற்று செயல்பாடுகளில் குழந்தைகளை பெரிய இலக்காகக் கொள்ளவில்லை. ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. 65 சதவிகித குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிக்கின்றன. ஓரளவு வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளிக்குழந்தைகளுக்கு ஓரளவுக்கேனும் கல்வி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அரசுப்பள்ளிக் குழந்தைகள் முற்றிலுமாக பள்ளியிலிருந்து விலகியே இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வித்துறை, இதுவரை அக்குழந்தைகள் குறித்த சிறு கணக்கெடுப்பைக்கூடச் செய்யவில்லை. இடப்பெயர்வு, வறுமை என குழந்தைகள் கடந்த ஓராண்டில் பல இடர்களைச் சந்தித்துள்ளார்கள். பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளன. பெற்றோருக்கு வேலையிழப்பு, நோய்த்தொற்றுத் தாக்கம் என பல குழந்தைகளின் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டிருக்கிறது.
க்ரை (CRY) என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில், 2019 மே மாதத்தில் நடந்ததைவிட 2020 மே மாதத்தில் 40 சதவிகிதம் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. அந்த மாதத்தில் மட்டும் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது. சைல்டு லைன் தொலைபேசி எண் மூலம் மே 2020 முதல் டிசம்பர் 2020 வரை 1,456 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. திருமணம் நிறுத்தப்பட்ட குழந்தைகள் அடுத்து என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்தப்பதிவும் இல்லை.
இன்னொரு பக்கம், கொரோனாவால் பல லட்சம் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறலாம் என்று யுனிசெப் எச்சரிக்கை செய்திருக்கிறது. ‘குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புப் பிரசாரம்’ என்ற அமைப்பு, இப்போது வேலைக்குச் செல்லும் 76 சதவிகிதம் குழந்தைகள், நோய்த்தொற்றுக்கு முன்னர் பள்ளிக்குச் சென்றவர்கள் என்று கண்டறிந்திருக்கிறது. தொற்று நிலை மாறியதும் இவர்களில் எத்தனை பேர் பள்ளிக்கு வரப்போகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. தமிழகத்தில் 3,499 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளன. 93 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளன. இவர்களுக்கான நிதியுதவியை அறிவித்துள்ள மத்திய மாநில அரசுகள், அதற்கும் வறுமைக்கோட்டை அளவீடாக வைத்திருப்பது வேதனை.
“கான்கிரீட் வீடு, பெற்றோரின் மாதச் சம்பளம் எல்லாவற்றையும் இந்தத் திட்டத்தில் விதிமுறைகளாக இணைத்திருக்கிறார்கள். ரேஷன் கடை, அங்கன்வாடி பணியாளரெல்லாம் அரசுப் பணியாளர்தான். அவர்களின் குழந்தைகளுக்கெல்லாம்கூட இந்தப் பாதுகாப்பு கிடைக்காது. பெரும்பாலானோர் இறக்கும்போது கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த உதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவிகிதம் குழந்தைகள்கூடப் பயன்பெற முடியாது.
அரசு முழுமூச்சாக கொரோனா நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் அந்தச் செயல்திட்டங்களில் குழந்தைகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை மீண்டும் அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டுவர எதையும் செய்யவில்லை. இன்னும் பத்தாண்டுகள் கழித்தே இதன் விளைவை நாம் எதிர்கொள்ளப்போகிறோம்...” என்கிறார் குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன்.
கொரோனா காலத்தில் குழந்தைகள் கைவிடப்பட்டது துயரென்றால், குழந்தைகளைப் பண்டங்களைப் போல விற்பனை செய்வது பெருந்துயர். எப்போதும்போல, சம்பவங்கள் நிகழ்ந்தபிறகு ஊர் ஊராகப் போய் குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.

குழந்தை விற்பனை என்பது தமிழகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ராசிபுரத்தில் செவிலியர் ஒருவர் குழந்தைகளுக்கு விலை பேசிய ஆடியோ வெளிவந்து பதற்றமேற்படுத்தியது. மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தல், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை மாயம் என்ற செய்திகளுக்கெல்லாம் பின்னணியில் குழந்தை விற்பனைதான் இருக்கிறது. எளிதில் கடத்தலாம் என்பதாலும், பெரும் விலை கிடைப்பதாலும், தமிழகத்தில் குழந்தை விற்பனைத் தரகர்கள் அதிகரித்துவருவதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
குழந்தையின்மை சமூகப் பெருநோயாக உருவெடுத்துவருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், பணிச்சூழலால் ஏற்படும் மன அழுத்தம் என இதற்குப் பல காரணங்களை அடுக்குகிறார்கள் மருத்துவர்கள். குழந்தையில்லா தம்பதிகள் சமூகத்திலும் குடும்பத்திலும் பெருந்துயரத்தை எதிர்கொள்கிறார்கள். அந்தப் பெற்றோரைக் குறிவைத்து, தவறான திசைக்கு இழுக்கிறார்கள் தரகர்கள். வளர்ப்பதற்காக அன்றி, வேலைக்காக, உடல் உறுப்புகளுக்காக, பிச்சையெடுப்பதற்காக, போதைப்பொருள் விற்பனைக்காக என குழந்தைக் கடத்தலுக்கு வேறுபல காரணங்களும் உள்ளன.
சென்னையில் தெருச்சந்திப்புகளில் பிச்சையெடுக்கும் பெண்களின் தோளில் மயங்கிக்கிடக்கும் குழந்தைகள் உ.பி-யிலோ, பீகாரிலோ கடத்தப்பட்டதாக இருக்கலாம். பீகாரிலும் உ.பி-யிலும் பிச்சையெடுக்கும் பெண்கள் தமிழகக் குழந்தைகளைத் தோளில் போட்டுக்கொண்டிருக்கலாம். குழந்தைக் கடத்தல் நெட்வொர்க் என்பது மிகப்பெரியது.
இந்திய அளவில் குழந்தைகள் காணாமல் போகும் மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 2016-ல் மட்டும் 4,632 குழந்தைகள் காணாமல்போனார்கள். 2019-ல் 5,814 குழந்தைகளைக் காணவில்லை. சராசரியாக நான்கில் ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்படுவதில்லை.
“குழந்தை விற்பனைத் தரகர்களிடம் மக்கள் சிக்குவதற்குக் காரணமே, தத்தெடுப்பு நடைமுறைகளில் உள்ள பிரச்னைகள்தான். 2015-க்கு முன்னர், குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள எந்த மையத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம். இப்போது ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யவேண்டியுள்ளது. அந்த இணையதளம் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். விதிமுறைகளைப் புரிந்துகொண்டு விண்ணப்பிப்பதே மிகப்பெரிய வேலையாக மாறிவிட்டது. எத்தனை பெற்றோர் விண்ணப்பித்திருக்கிறார்கள், எத்தனை குழந்தைகள் காத்திருக்கிறார்கள் என்ற எந்த விவரத்தையும் அரசு வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதில்லை. பலர் தத்தெடுத்துவிட்டு வளர்க்கமுடியாமல் குழந்தையைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அதுபற்றிய பதிவுகளும் இல்லை. பதிவுசெய்துவிட்டு எப்போது குழந்தை கிடைக்கும் என நிறைய பெற்றோர் காத்திருக்கிறார்கள். காலதாமதம், அலைக்கழிப்பால் பெற்றோர் சோர்ந்திருக்கும் தருணத்தில் தரகர்கள் உள்ளே புகுந்துவிடுகிறார்கள்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், கொரோனாவால் 3,621 குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும் இழந்துவிட்டதாகவும், 26,176 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துவிட்டதாகவும், 274 குழந்தைகள் கைவிடப்பட்டதாகவும் சொல்கிறது. உடனடியாக இதில் எத்தனை குழந்தைகள் தத்து அளிக்கப்படத் தயாராக இருக்கின்றன என்று அரசு அறிவித்தால், காத்திருக்கும் பெற்றோருக்கு உதவியாக இருக்கும். ஆனால், இதுவரை நடக்கவில்லை.
தமிழகத்தில் கள்ளச்சந்தையில் ஆண் குழந்தைகள் 10 லட்சம், பெண் குழந்தைகள் 8 லட்சம் வரையிலும் விற்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இங்கிருந்து மோசடியான ஆவணங்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கும் குழந்தைகளைக் கடத்துகிறார்கள். அங்கு 20 லட்சம் வரை குழந்தைகளுக்கு விலை பேசுகிறார்களாம். மிகக்கொடூரமான இந்தக் குற்றத்தைத் தடுக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார் குழந்தை உரிமை ஆர்வலர் முனைவர் ப.பாலமுருகன்.
மனிதக்கடத்தலைத் தடுக்க காவல்துறையில் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் அதிகம் கடத்தப்படுவதால் இந்தப் பிரிவில் குழந்தைக் கடத்தல் தடுப்புக்கெனத் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று 2016-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கென 43 ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி நிதிக்குழுவும் அனுமதியளித்துவிட்டது. காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல... குழந்தைக் கடத்தலைத் தடுப்பதும் இந்தப்பிரிவின் முக்கியப்பணி. ஆனால் இந்தப் பிரிவுக்கு எந்தவிதமான உள்கட்டமைப்பும் இல்லை. வேறு பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகளைப் பெயருக்கு இந்தப் பிரிவிலும் பணியமர்த்துகிறார்கள்.
“ஒவ்வொரு ஊராட்சியிலும் தலைவரின் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு செயல்படுகிறது. இந்தக்குழுவில் பள்ளி ஆசிரியர், இளைஞர் மன்ற பிரதிநிதி, ஊராட்சிச் செயலர் உட்பட பலரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக்குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி குழந்தைகளின் பிரச்னை குறித்து விவாதிக்கவேண்டும். குழந்தைத் திருமணம், கல்வியில் இடைநிற்றல், கடத்தல், பாலியல் துன்புறுத்தல் என தங்கள் பகுதியில் நடக்கும் அனைத்தையும் இந்தக்குழு விவாதித்து கலெக்டருக்கு அறிக்கை அளிக்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தக்குழு வெறும் சம்பிரதாயமாகவே இயங்குகிறது. இது ஆக்கபூர்வமாகச் செயல்பட்டால் கிராம அளவிலேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரண் கிடைத்துவிடும். இங்கே அரசுத்துறைகளுக்குள் ஒருங்கிணைப்பே இல்லை. குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கும் சமூகப் பாதுகாப்புத்துறையின் இணையதளம் 6 வருடங்களாக இயங்கவேயில்லை. அதில்தான் காணாமல்போகும் குழந்தைகளின் படங்களை எல்லாம் போடுவார்கள். குழந்தைப் பாதுகாப்புக்கான அமைப்புகள் எல்லாமே சம்பவம் நடந்தபிறகு களத்துக்குச் செல்கிறார்களே ஒழிய நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
தற்போது குழந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ‘இதயம் அறக்கட்டளை’ மதுரையின் மையத்தில் இருக்கிறது. குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் ஒன்றாக வைத்திருந்திருக்கிறார்கள். அதுவே குற்றம். இதை எப்படி அதிகாரிகள் அனுமதித்தார்கள்? குற்றமிழைத்தவரோடு சேர்த்து, கண்காணிக்காத அதிகாரிகளையும் குற்றவாளிகளாக்க வேண்டும்” என்கிறார் தேவநேயன்.
குழந்தைகள் இல்லங்கள், இளஞ்சிறார் நீதிச்சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். 2014-ல் பொள்ளாச்சி விடுதியொன்றில் இரண்டு குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்துக்குப் பிறகு, ‘தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. 6 மாதத்துக்குள் இரண்டு சட்டங்களின்படியும் இல்லங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று அரசு சொன்னது. இன்றுவரை பெரும்பாலான இல்லங்கள் இந்தச் சட்டத்தின்படி பதிவுசெய்யப்படவில்லை.
‘‘ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட அதிகாரிகள் மௌனித்திருக்கிறார்கள். ஒரு மாவட்டத்தில் 60 முதல் 70 விடுதிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் இருக்கின்றன. இவற்றை ஒரு மாவட்ட சமூக நலத்துறை அலுவலரும் ஒரு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும் மட்டுமே கண்காணிக்க முடியாது. வட்டார அளவில் குழுக்கள் அமைக்கவேண்டும். தவறு செய்யும் விடுதிகள் மட்டுமன்றி, அதிகாரிகள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்கிறார் பாலமுருகன்.
குழந்தைகள் குரலற்றவர்கள். அவர்கள்தான் தேசத்தின் எதிர்காலம். எல்லாத் துறைகளையும் ஒருங்கிணைத்து குழந்தைகள்மீது கவனம் செலுத்தவேண்டும் அரசு. தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதோடு, குழந்தை விற்பனையில் ஈடுபடுவோர்மீது சமரசமில்லாமலும் காலதாமதமில்லாமலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.