அலசல்
அரசியல்
Published:Updated:

‘காமன் சென்ஸ்’ இல்லா அதிகாரிகள்... கண்ணீர் வடிக்கும் மிளகாய் விவசாயிகள்!

மிளகாய் வணிக வளாகம்
பிரீமியம் ஸ்டோரி
News
மிளகாய் வணிக வளாகம்

குளிர்பதனக் கிடங்கு என்றால், அந்தக் கட்டடத்தின் உயரம் தொடங்கி அங்கு பயன்படுத்தப் படும் ஏ.சி வரையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது.

வறண்ட பகுதியில் விளையும் பழங்களுக்கு சுவை அதிகம், மலருக்கு மணம் அதிகம், பாம்புக்கு விஷம் அதிகம். அதேபோலத்தான், ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் மிளகாய்க்குக் காரம் அதிகம். இதனால், குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் தரும் ‘முண்டு’ ரக மிளகாய் உற்பத்தியில் இங்குள்ள விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் இந்த மிளகாய் வற்றலைப் பதப்படுத்தி வைப்பதற்காக எட்டிவயல் பகுதியில் ரூ.10.22 கோடி மதிப்பில், 2,000 டன் கொள்ளளவுகொண்ட மிளகாய் குளிர்பதனக் கிடங்கு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடியால் திறக்கப்பட்ட இந்தக் குளிர்பதனக் கிடங்கு பயன்பாடின்றி கிடக்கிறது.

மிளகாய் வணிக வளாகம்
மிளகாய் வணிக வளாகம்
மிளகாய் வணிக வளாகம்
மிளகாய் வணிக வளாகம்

இந்த நிலையில், அதன் அருகிலேயே ரூ.13 கோடி மதிப்பில் 65 கடைகள்கொண்ட ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் கட்டப்பட்டது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்துவைத்த இந்தக் கடைகளை, வாடகைக்கு எடுக்க இதுவரையில் யாரும் முன்வராதது சர்ச்சையாகியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய மிளகாய் விவசாயி ராமர், “ஏற்கெனவே தனியார் குளிர்பதனக் கிடங்கை கிலோ 50 பைசா வாடகைக்குப் பயன்படுத்திவந்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அரசே குளிர்பதனக் கிடங்கு அமைத்து, கிலோவுக்கு 30 பைசா வாடகை நிர்ணயித்தார்கள். அதனால் சந்தோஷப்பட்டு 10 டன் மிளகாயை அங்கே பதப்படுத்தினோம். ஆனால், பத்தே நாள்களில் அங்கு வைத்த மிளகாய் அனைத்தும் கறுத்துப்போய் எதற்கும் பயன்படாமல் போய்விட்டது. அதிகாரிகளோ, ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கைவிரித்து விட்டார்கள். அதன் பிறகு அரசு குளிர்பதனக் கிடங்குப் பக்கம் எந்த விவசாயியும் போவதில்லை. இதைக் காரணம் காட்டி, தனியார் குளிர்பதனக் கிடங்கிலும் கிலோவுக்கு ஒரு ரூபாய் என்று வாடகையை ஏற்றிவிட்டார்கள்” என்று வருத்தப்பட்டார்.

மிளகாய் மொத்த வியாபாரியான பாலமுருகனிடம் கேட்டபோது, “குளிர்பதனக் கிடங்கு என்றால், அந்தக் கட்டடத்தின் உயரம் தொடங்கி அங்கு பயன்படுத்தப் படும் ஏ.சி வரையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. எந்த ‘காமன் சென்ஸும்’ இல்லாமல் வீடுகளுக்குப் பயன்படுத்தும் ஏ.சி-யைப் பொருத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். அதனால்தான் மிளகாய் கறுத்துவிட்டது. குடோனை விவசாயிகள் பயன்படுத்தாத நிலையில், அதன் அருகிலேயே கடைகளைக் கட்டியது அடுத்த தவறு. ராமநாதபுரம் நகரத்திலேயே 2,000 சதுர அடி கடை, 4,000 ரூபாய் வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், வேறும் 800 சதுர அடி கடைக்கே ரூ.4,500 வாடகையாக நிர்ணயித்திருக்கிறார்கள். அதனால்தான் கடைகளெல்லாம் காலியாகக் கிடக்கின்றன” என்றார்.

ராமர், பாலமுருகன், ஜானி டாம் வர்க்கீஸ்
ராமர், பாலமுருகன், ஜானி டாம் வர்க்கீஸ்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸிடம் விளக்கம் கேட்டோம். “குளிர்பதனக் கிடங்கால் பயனில்லை என்பது தவறான தகவல். அதை வியாபாரிகளும் விவசாயி களும் முழுமையாகப் பயன்படுத்தப் பேசிவருகிறோம். அவர்கள் இங்குள்ள கடைகளை வாடகைக்கு எடுத்து அருகிலுள்ள குளிர்பதனக் கிடங்கில் பதப்படுத்தலாம்‌. கடைகளின் வாடகையைக் குறைப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்போம்” என்றார்.

கட்டடங்கள் பாழடையும் முன்பு, முடிவெடுத்தால் சரிதான்!