அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற உலக நாடுகளுக்குச் சுற்றுலா செல்வது என்பது இன்று பலரின் அதிகபட்ச சுற்றுலா செயல் திட்டமாக இருக்கும். ஆனால் உலகப் பணக்காரர்கள் விண்வெளிக்குச் சுற்றுலா செல்வதைத் தங்களின் நெடுநாள் சுற்றுலாத் திட்டமாக வைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த விண்வெளிக்குச் சுற்றுலா சென்று வரும் ஆராய்ச்சித் திட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றன. இதில், அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெஸாஸ், இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் தங்களின் சொந்த விண்கலங்களைப் பயன்படுத்தி விண்வெளிக்குச் சுற்றுலா சென்று வந்தனர். இதுபோல் உலகப் பணக்கார்கள் பட்டியலில் இருக்கும் பலர் விண்வெளிக்கு சுற்றுலா செல்வதில் ஆர்வமாக உள்ளனர். இதற்காக பலரும் சொந்தமாக நிறுவனங்களையும் நிறுவி விண்வெளிகு செல்ல விருப்புவோரை சுற்றுலா அழைத்துச் செல்ல பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) இன்னும் மூன்று வருடங்களுக்குள் அதாவது 2025ம் ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா செல்வதற்கானப் பயணத்தைத் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான டிக்கெட் விலை ஒரு நபருக்கு $287,200 முதல் $430,800 வரை வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விண்வெளி சுற்றுலாப் பயணத் திட்டம் வணிக ரீதியாக பெரும் லாபத்தை பெற்றுத் தரும் என்பதால் உலகப் பணக்காரர்கள் பலர் போட்டிபோட்டுக்கொண்டு இதில் முதலீடு செய்துவருகிறார்.
இனிவரும் தலைமுறைகள் ஊட்டி, கொடைக்கானலுக்குச் சொல்வதைப் போல விண்வெளிக்குச் சுற்றலா சென்று வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. விண்வெளி மாசுபடாமல் இருந்தால் சரி!