Published:Updated:

சீன ஆக்கிரமிப்பு பின்னணி... இப்போது திபெத்... எப்போது ஆபத்து?

திபெத்
பிரீமியம் ஸ்டோரி
News
திபெத்

எல்லை தாண்டி சீனா ஆக்கிரமித்த இடங்களை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. இப்போதைய பிரச்னைகளுக்கு அவர்களே காரணம்.

‘நல்லவேளை! எல்லையில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்குகிறது. மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி யிருந்தால், இந்நேரம் நம் அரசு அதைத் தடைசெய்து தகுந்த பாடம் கற்பித்திருக்கும்.’ - இப்படியொரு கிண்டல் சமூக வலைதளங்களைச் சூடாக்கிக்கொண்டிருக்கிறது.

‘நம் அருணாசலப்பிரதேச மாநிலத்தில் எல்லை தாண்டி வந்து, இந்திய நிலப்பகுதியில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கிவிட்டது’ என என்.டி.டி.வி பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டதும், இந்தியா முழுக்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. ‘பிளானட் லேப்ஸ்’ என்ற நிறுவனம் எடுத்திருக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்களே இதற்கு ஆதாரம். 2019, ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வெறும் மலைகளும் காடுகளுமாக இந்த இடம் இருக்கிறது. 2020, நவம்பரில் எடுக்கப்பட்ட படத்தில், 101 வீடுகளுடன் அழகிய கிராமம் அங்கு இருக்கிறது. வீடுகள் என்றால், குடிசைகள் அல்ல! சீனப் பாரம்பர்ய வடிவமைப்பில் கட்டப்பட்ட கான்கிரீட் பங்களாக்கள். இந்தக் கிராமத்துக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சீன ராணுவ முகாம் ஒன்று இருக்கிறது. சாதாரணமாக இருந்த இந்த முகாமும் இப்போது புதிய கட்டுமானங்களுடன் வலுவாக மாற்றப்பட்டிருக்கிறது.

இந்திய சர்வேயர் ஜெனரல் வெளியிட்ட தேசப்படத்தை அடிப்படையாகவைத்துப் பார்த்து, ‘சீன - இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கிலோமீட்டர் உள்ளே வந்து இந்தக் கிராமத்தை சீனா உருவாக்கிவிட்டது’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஏற்கெனவே, லடாக் பிரதேசத்தில் இந்திய ராணுவமும் சீன ராணுவமும் மோதிக்கொண்டதில் இருபது இந்திய வீரர்கள் இறந்தனர். இன்னமும்கூட உறைபனி கொட்டும் அந்த இடத்தில் இந்திய ராணுவம் உறுதியாக நின்று, சீனப் படைகளை பின்வாங்குமாறு வற்புறுத்திக்கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில்தான், வேறோர் எல்லையில் இப்படியொரு சம்பவம். என்ன நடக்கிறது? உண்மையில் இப்போதுதான் சீனா இங்கு ஊடுருவியதா?

சீன ஆக்கிரமிப்பு பின்னணி... இப்போது திபெத்... எப்போது ஆபத்து?

அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட நம் வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றின் எல்லையாக முன்பு இருந்தது திபெத் சுயாட்சிப் பிரதேசம். பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவுக்கும் திபெத்துக்குமான எல்லை வரையறுக்கப்பட்டது. மெக்மோகன் கோடு எனப்படும் இதையே இந்தியா எல்லையாக மதித்து நடக்கிறது. திபெத்தை ஆக்கிரமித்த சீனா, இந்த எல்லையை ஏற்க மறுப்பதுதான், தலைமுறைகளைக் கடந்து தொடரும் பிரச்னை. 1959-ம் ஆண்டு திபெத் அரசைக் கலைத்த சீனா, அதே கையோடு இந்திய எல்லையிலும் மோதியது. பெரிய அளவில் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்த இந்திய ராணுவம், இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது. அப்போது ஆக்கிரமித்த பகுதிகளை இன்னமும் சீனா வசப்படுத்திவைத்திருக்கிறது; நாம் வரைபடத்தில் மட்டும் இந்தப் பகுதிகளை வைத்துக்கொண்டு ‘இது எங்கள் ஏரியா’ என்கிறோம். (இதைத் தாண்டி ஒட்டுமொத்த அருணாசலப் பிரதேசத்தையே சீனா உரிமை கொண்டாடுவது தனி சோகக்கதை!)

இப்போது உருவாகியுள்ள கிராமம், சீனா ஆக்கிரமித்த இந்த ஏரியாவில்தான் இருக்கிறது. அருணாசலப்பிரதேச மாநிலத்தின் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில், லென்சி என்ற நதிக்கரையில் இந்த கிராமம் உருவாகியுள்ளது. இந்த மாவட்டத்தின் பெரும்பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பதாகக் கடந்த ஆண்டு நவம்பரிலேயே நாடாளுமன்றத்தில் பேசினார் டபிர் காவ் (Tapir Gao). இவர் பா.ஜ.க சார்பில் ஜெயித்த அருணாசல் கிழக்கு தொகுதி எம்.பி. “இந்திய எல்லைக்குள் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை லென்சி நதிக்கரையை ஒட்டி நெடுஞ்சாலை போடுகிறது சீனா. இங்கு நீர்மின் நிலையமும் அமைத்துள்ளார்கள். நிறைய ராணுவ முகாம்களும் புதிதாக உருவாகியுள்ளன’’ என்றார் அவர்.

இப்போது சீன கிராம சர்ச்சைப் பெரிதாகி, காங்கிரஸ் கட்சி கடுமையாக அரசை விமர்சனம் செய்யத் தொடங்கியதும், அதே டபிர் காவ் பழைய வரலாற்றை விவரிக்கிறார். “எல்லை தாண்டி சீனா ஆக்கிரமித்த இடங்களை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. இப்போதைய பிரச்னைகளுக்கு அவர்களே காரணம். மெக்மோகன் கோட்டை எல்லையாக வலியுறுத்தாமல், சீனா ஆக்கிரமித்தது போக, இப்போது மிஞ்சியிருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையே நம் ராணுவம் காவல் புரிந்துவருகிறது. தான் ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளில் சாலை உள்ளிட்ட வசதிகளைச் செய்யும் பணியைக் கடந்த 1980-ம் ஆண்டே சீனா தொடங்கிவிட்டது. கிராமங்களை இங்கே சீனா உருவாக்குவதும் புதிதல்ல. கிட்டத்தட்ட 60 வருடங்களாக அவர்கள் வசம் இருக்கும் பகுதியில் இதைச் செய்யாமல் எப்படியிருப்பார்கள்? இந்திய எல்லையிலிருந்து சீனப் படைகளை விரட்டுவதற்காக ‘ஆபரேஷன் பெலிகன்’ என்ற திட்டத்தை இந்திய ராணுவம் உருவாக்கியது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார். அதைச் செய்திருந்தால், இப்போது இந்த இடங்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்’’ என்கிறார் அவர்.

சீன ஆக்கிரமிப்பு பின்னணி... இப்போது திபெத்... எப்போது ஆபத்து?

சரி, இப்போது திடீரென சீனா இங்கு கிராமங்களை உருவாக்கி ராணுவத்தைக் குவிக்கக் காரணம் என்ன? “திபெத் பிரதேசத்தின்மீது தன் கட்டுப்பாட்டை வலுவாக்குவதற்கு சீனா திட்டமிடுகிறது. அதற்காக, கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 36,000 கோடி ரூபாயில் திட்டம் தீட்டியுள்ளது. சாலை, மின்சாரம், தொழில்கள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் திபெத் - இந்திய எல்லையில் சுமார் 600 கிராமங்களை உருவாக்க உள்ளனர். இங்கு மக்களுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரும், கணிசமான அளவு ராணுவத்தினரும் இருப்பார்கள். திபெத்திலிருந்து இந்தியாவுக்கு மக்கள் வெளியேறிச் செல்வதைத் தடுக்கவும், திபெத்தைக் கண்காணிக்கவும் இந்த கிராமங்கள் உதவும். அருணாசலப்பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதற்கு எதிர்காலத்தில் இந்த வசதிகள் உதவும் என்றும் சீனா கணக்கு போடுகிறது’’ என்கிறார்கள் ராணுவ வல்லுநர்கள்.

இவ்வளவு கட்டமைப்புகளை எல்லையில் செய்துவரும் சீனா, நம் அரசு இந்திய எல்லைப் பகுதியில் ஏதேனும் வளர்ச்சிப் பணிகள் செய்தாலே எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. ஆனால், எல்லையில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டது தெரிந்தும், ‘அது காங்கிரஸ் ஆட்சியில் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’ என கிரண் ரிஜிஜு போன்ற மத்திய அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். யார் ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டாலும் அது இந்தியப் பகுதிதானே? நம் பகுதியில் செய்யப்படும் அத்துமீறலைக் கண்டிக்க வேண்டியதுதானே அரசின் தார்மிகக் கடமை! அதை விட்டுவிட்டு காங்கிரஸின் கடந்தகாலத் தவறுகளை மட்டுமே பேசுவது எப்படிச் சரியாகும்?