
சீனாவில் சட்டவிரோதமாகச் சிறை பிடித்துவைக்கப்பட்டிருக்கும் ‘உய்குர்’ இஸ்லாமியர்கள், திபெத்தியர்கள், ஃபலூன் கேங் (Falun Gang) அமைப்பினர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்களின் உடலுறுப்புகள் திருடப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவைத் தலைமையிடமாகக்கொண்ட ‘Voice Against Autocracy' என்ற அரசு சாரா நிறுவனம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ‘ஏகாதிபத்தியத்துக்கு எதிரான குரல்’ என்று குறிப்பிடப் பட்டிருக்கும் அந்த அறிக்கையில், சீனாவில் நடைபெறும் உடலுறுப்புத் திருட்டுகள் பற்றி திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர்-17 அன்று நடைபெற்ற `Forcible Harvesting of Human Organs in China' என்ற சர்வதேசக் கருத்தரங்கில் நிபுணர்கள் சிலர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
``சீனாவில் சட்டவிரோதமாகச் சிறை பிடித்துவைக்கப்பட்டிருக்கும் ‘உய்குர்’ இஸ்லாமியர்கள், திபெத்தியர்கள், ஃபலூன் கேங் (Falun Gang) அமைப்பினர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்களின் உடலுறுப்புகள் திருடப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன'' என்று அந்த அறிக்கை `பகீர்’ கிளப்பியிருக்கிறது. ‘‘சிறைக் கைதிகளிடமிருந்து தொடங்கிய இந்த உடலுறுப்பு திருட்டு வணிகம், தற்போது சீனாவில் மிகப்பெரிய சிவப்புச் சந்தை வணிகமாக உருவெடுத்திருக்கிறது. இதனால், சீனாவின் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் பேராசையால் ஏழைக் குழந்தைகளைக் கடத்தி, அவர்களின் உடலுறுப்புகளைத் திருடிவிட்டு, கொலை செய்யும் செயல்கள் அதிகரித்திருக்கின்றன” என்று நம்மை மிரளவைக்கின்றன இந்த அறிக்கையின் பக்கங்கள்.

இந்த அறிக்கை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பேசும்போது, ``1980-களில் சீனாவில் தூக்கிலிடப்பட்ட சிறைக் கைதிகளின் உடலுறுப்புகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக எடுக்கப்பட்டுவந்தன. 1993-ல் ஜியாங் ஜெமின் (Jiang Zemin) என்பவர் சீன அதிபரான பிறகு, ‘ஃபலூன் கேங்’ எனும் அமைப்பைச் சேர்ந்த 20 லட்சம் பேரை முகாம் ஒன்றில் அடைக்க உத்தரவிட்டார். அவர்கள் எந்தக் கெட்ட பழக்கத்துக்கும் ஆட்படாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால் ‘ஃபலூன் கேங்’கைச் சேர்ந்த முகாம்வாசிகளின் உடலுறுப்புகளை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தத் தொடங்கியது சீனா. அந்த முகாமிலிருந்து அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றவர்களில் ஒருவரான ‘ஜெனிஃபர் ஜெங்’ என்பவர்தான் பின்னாளில் பிரபல டி.வி ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனார். சீனாவின் உடல் உறுப்பு திருட்டு குறித்து அவர் வெளியிட்ட பல தகவல்களும் ‘Voice Against Autocracy' அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. மற்ற நாடுகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகப் பல மாத காலமாக மக்கள் காத்துக்கிடக்கும் நிலையில், சீனாவில் மிகக் குறுகிய நாள்களில், அதுவும் மிகக் குறைந்த செலவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது” என்றனர்.

சர்வதேசக் கருத்தரங்கில் பேசிய ஈத்தன் கட்மேன் (Ethan Gutmann) என்ற நிபுணர், ``2002-ம் ஆண்டிலிருந்து ஜெர்மனி போன்ற பணக்கார நாடுகளிலிருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்கு வருபவர்கள், நான்கே மணி நேரத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வது வழக்கமாகிவிட்டது'' என்று பேசியிருக்கிறார்.
உடலுறுப்பு திருட்டை வணிகமாக்கி, ரத்தக்கறை படிந்த ‘சிவப்புச் சந்தை’யின் தலைமையிடமாக சீனா உருவெடுத்துவருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே `ஏகாதிபத்தியத்துக்கு எதிரான குரல்கள்’ அறிக்கையின் வேண்டுகோளாக இருக்கிறது.
மனிதனை மனிதன் வேட்டையாடும் இந்தக் கொடூரச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார்?