அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கொரோனா.. ஊரடங்கு.. தீ விபத்து... சீன அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்!

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டம்

விதிகளை மாற்றி, மூன்றாவது முறையாகத் தன்னைத் தானே சீன அதிபராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நியமித்துக்கொண்டார் ஜி ஜின்பிங்

போராட்டம்... சீனாவைப் பொறுத்தவரை ஓர் அரிதான நிகழ்வு. அதுவும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் அணி திரள்வது மிக மிக அரிது. அப்படி அரிதான நிகழ்வைத் தற்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள் சீன மக்கள்!

எப்படி வெடித்தது போராட்டம்?

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பெருந்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாளொன்றுக்கு 40,000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், `ஜீரோ கோவிட்’ நடைமுறையை அமல்படுத்தியது சீன அரசு. கோவிட் அதிகம் பரவும் பல்வேறு பகுதிகளில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியிலுள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கடந்த வாரம் தீப்பிடித்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக அந்தக் குடியிருப்பின் ஒரு பகுதி முழுவதுமாகப் பூட்டுப் போடப்பட்டிருந்ததால், அங்கிருந்து வெளியேற முடியாமல் போனதில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

கொரோனா.. ஊரடங்கு.. தீ விபத்து... சீன அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்!

இந்தச் செய்தி பரவியதால், சீனாவின் பல்வேறு இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மக்கள் சாலையில் இறங்கிப் போராடத் தொடங்கினர். சீன அதிகாரிகளோ, `கொரோனா கட்டுப்பாட்டால் இந்த உயிர்ப்பலிகள் ஏற்படவில்லை’ என்று கூறிவருகின்றனர். அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, `அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும்’, `கம்யூனிஸ்ட் கட்சிப் பதவி விலக வேண்டும்’ என்கிற கோஷங்களை எழுப்பிவருகின்றனர் போராட்டக்காரர்கள். தலைநகர் பீஜிங், நான்ஜிங் மாகாணங்களிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், உரும்கி, ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். போராட்டத்தை ஒடுக்க, காவல்துறையினர் கொரோனா கவச உடையுடன் மக்கள்மீது தடியடி நடத்தியபோதும் கூட்டம் கலைந்து செல்லவில்லை.

ஒன்றிணைந்த மக்கள்!

``கொரோனா தொடங்கி மூன்று ஆண்டுகளாகக் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுவருகின்றனர் சீன மக்கள். அதுவும், `ஜீரோ கோவிட்’ திட்டத்தின்கீழ் ஷாங்காய், உரும்கி உள்ளிட்ட பகுதிகளில் 100 நாள்களுக்கு மேலாக வீட்டைவிட்டு யாரும் வெளியே வரக் கூடாது என்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீறுவோருக்குக் கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன. `ஜீரோ கோவிட்’ என்பது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் கடைசி அஸ்திரம். அதை முதற்கட்ட பாதிப்புகளிலேயே பயன்படுத்த உத்தரவிட்டார் ஜின்பிங். இதனால் கடும் அதிருப்தியிலிருந்த மக்களை, உரும்கி தீ விபத்து ஒன்றிணைத்திருக்கிறது’’ என்கிறார்கள் சீன அரசியலைக் கூர்ந்துநோக்குபவர்கள்.

விதிகளை மாற்றி, மூன்றாவது முறையாகத் தன்னைத் தானே சீன அதிபராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நியமித்துக்கொண்டார் ஜி ஜின்பிங். அப்போதே, `சர்வாதிகாரியை நீக்கிவிட்டு, தேர்தல் நடத்தி அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்ற வாசகங்களுடன் பேனர் வைத்து எதிர்ப்பைப் பதிவுசெய்தனர் சீன மக்கள். தற்போது அந்த எதிர்ப்பு அடுத்தகட்டத்துக்குச் சென்றிருக்கிறது!