அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அமெரிக்கத் தலையீடு... சீனா-தைவான் இடையே போர் மூளுமா?!

சீனா
பிரீமியம் ஸ்டோரி
News
சீனா

சர்வாதிகார ஆட்சியிலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய பிறகு, தொழில்துறை, தொழில்நுட்பத்துறைகளில் அசுர வளர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறியது தைவான்.

ரஷ்யா - உக்ரைன் போர் ஒருபுறம் நடந்துகொண் டிருக்க, தைவான்மீது படையெடுக்கத் தயாராகிக்கொண் டிருக்கிறது சீனா. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் தீவிர ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறது சீன ராணுவம். தைவான் - சீன எல்லையில் நடப்பது என்ன?

தைவான் தனித் தீவான கதை!

உலக வரைபடத்தை உற்றுப்பாருங்கள். ‘உட்கார்ந்திருக்கும் கோழி’ வடிவத்தில் இருக்கும் பிரமாண்ட நாடு சீனா என்றால், அதன் முன்னால் நெல்மணிபோல் கிடக்கிற குட்டித்தீவுதான் தைவான். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இரண்டும் ஒரே நாடாக இருந்தவை. இந்தியா - பாகிஸ்தான்போல.

சீனாவில், 1911-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது அல்லவா... அந்த ஆளுங்கட்சிக்கு எதிராக 1927-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்க, 1930-களில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1949 வரை நடந்த இந்தப் போரில் படுதோல்வியுற்ற சீன தேசிய கட்சியினர், தென் சீனக் கடலில் அமைந்திருக்கும் 168 தீவுகள் அடங்கிய தைவானை மட்டும் தக்கவைத்துக்கொண்டனர். இதையடுத்து சீனாவிலிருந்து பிரிந்து தனித்தீவு நாடாகச் செயல்படத் தொடங்கியது தைவான். நீண்டகாலமாகவே தைவானைச் சொந்தம் கொண்டாடிய சீனா, 1981-ல் `ஒரு நாடு; இரண்டு அமைப்புகள்’ என்று இறங்கிவந்தது. ``எங்களுடன் இணைந்தால், ஹாங்காங்கில் இருப்பதுபோல உங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குகிறோம்’’ என்று சீனா ஆசைகாட்ட, அதை மறுத்துவிட்டது தைவான்.

அமெரிக்கத் தலையீடு... சீனா-தைவான் இடையே போர் மூளுமா?!

தனி நாடு இல்லை!

சர்வாதிகார ஆட்சியிலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய பிறகு, தொழில்துறை, தொழில்நுட்பத்துறைகளில் அசுர வளர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறியது தைவான். இதைக் கண்டு அஞ்சிய சீனா, `தைவானில் இருப்பது சட்டவிரோதமான ஆட்சி. அது தனி நாடு அல்ல, எங்களிடமிருந்து பிரிந்த மாகாணம் மட்டுமே’ என்று சொன்னதுடன், `பிரிவினைவாத தடுப்புச் சட்ட’த்தையும் கொண்டுவந்தது. இதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டது. 2013-ல் சீன அதிபரான ஜி ஜின்பிங், தைவானை, சீனாவின் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீவிரம் காட்டினார்.

அதைத் தொடர்ந்து, 2016-ல் தைவானின் அதிபரான சாய் இங்-வென், சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டுவந்ததோடு, பாதுகாப்புத்துறையையும் மேம்படுத் தினார். வெளிநாடுகளுடன் நட்புறவையும் ஏற்படுத்தினார். அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் இங்-வென் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டதால், தைவானுக்குப் பல நவீன ஆயுதங்கள் கிடைத்தன. மீண்டும் 2020-ல் அதிபரான இங்-வென், தற்போதிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நல்ல நட்புறவைக் கடைப்பிடித்து வருகிறார். சீன எதிர்ப்பால், தைவானை ஐ.நா சபை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. என்றாலும், கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையிடமான வாட்டிகன் உள்ளிட்ட 14 நாடுகள் மட்டும், தைவானை இறையாண்மைகொண்ட தனி நாடாக அங்கீகரித்திருக்கின்றன.

அமெரிக்கத் தலையீடு... சீனா-தைவான் இடையே போர் மூளுமா?!

ஜின்பிங், பைடன் பேச்சுவார்த்தை!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தைவான் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். ``தைவானில் ஜனநாயகமும் அமைதியும் நிலவ சீனா முயல வேண்டும்’’ என பைடன் கேட்டுக்கொண்டதாகவும், ``நெருப்புடன் விளையாடினால் பெரும் அழிவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். தைவானின் சுதந்திரத்தையும், அதை ஆதரிக்கும் வெளிநாடுகளையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என ஜின்பிங் எச்சரித்ததாகவும் அதிகார பூர்வத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஆகஸ்ட் 3 அன்று, அமெரிக்க நாடாளு மன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கைகளை மீறி தைவானுக்கு வந்து சென்றார். ``தைவானுக்கு எப்போதும் துணை நிற்போம் என்பதை உணர்த்தவே இங்கு வந்திருக்கிறேன்’’ என்றார் பெலோசி.

ஏவுகணை வீச்சு!

நான்சி பெலோசி வருகையையொட்டி அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் தைவான் எல்லையில் உலவின. பதிலுக்கு சீன ராணுவக் கப்பல்களும் எல்லையில் வட்டமடிக்க, பதற்றம் அதிகரித்தது. தனது படைகளைத் தைவான் எல்லையில் குவித்து, தீவிர ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியது சீனா. பெலோசி அங்கிருந்தபோதே 20-க்கும் அதிகமான போர் விமானங்களை தைவான் வான் எல்லையில் பறக்கவிட்டு அச்சுறுத்தியது சீனா. பெலோசி வெளியேறிய பின்னர், போர் ஒத்திகைகளைக் கூடுதலாக்கிய துடன், 11 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைத் தைவானை ஒட்டியிருக்கும் தென் சீனக் கடலில் வீசி அச்சுறுத்தியது. ஆகஸ்ட் 7-ம் தேதி வரை போர் ஒத்திகை செய்வோம் என்று அறிவித்திருந்த சீனா, தற்போது அதை நீட்டித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

`நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், சீனாவை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்று அறிவித்தது தைவான். சீனா படையெடுத்து வந்தால், எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதை மக்களுக்கு விளக்கும் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறது தைவான் அரசு. சீனாவின் டிரோன்கள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும், அருகே குண்டு வெடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அந்தச் செயலி விளக்குகிறது. மேலும், 5,000 பதுங்கு மிடங்களின் வரைபடங்களும் அந்தச் செயலியில் இடம் பெற்றிருக்கின்றன.

நான்சி பெலோசி வருகை
நான்சி பெலோசி வருகை

``தைவானில் குட்டிக் குட்டியாக இருக்கும் 168 தீவுகளில் தங்களது எல்லையை ஒட்டியிருக்கும் தீவுகளை மட்டுமே சீனாவால் எளிதாக நெருங்க முடியும். தைவானின் படை பலம் குறைவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உதவிக்கு வந்தால், போரில் வெல்வது சீனாவுக்குக் கடினமாகிவிடும். எனவே, இப்போதைக்கு சீனா போர் தொடுக்காது. ஒருவேளை சீனா தைவானுக்குள் ஊடுருவினால், அது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடை யிலான போராக மாறும் அபாயமிருக்கிறது. சீனாவுக்கு ஆதர வாக ரஷ்யாவும், வடகொரியாவும் குரல்கொடுத்துவருகின்றன. அமெரிக்காவுக்கு ஐரோப்பிய நாடுகள் துணை நிற்கின்றன. எனவே, போர் மூண்டால் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும்’’ என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஏற்கெனவே, ரஷ்யா-உக்ரைன் போர் உலகம் முழுக்கத் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. இன்னொரு போரை உலகம் தாங்காது. சமாதானம் உண்டாகட்டும்!